
இன்றைக்கு பெரும்பாலானோர் அதிக அளவில் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இதற்கு வேலைப்பளுவும் ஒரு காரணம். எந்த வேலையையும் திட்டமிட்டு செய்தால் மன அழுத்தம் எட்டிப் பார்க்காது என்கின்றனர். உளவியல் நிபுணர்கள்.
மனதிற்கும், உடலுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் என்பவை எல்லாம் மன அழுத்தத்தின் எதிரொலிகள்தான். அதிக வேலை, தூக்கமின்மை, துரித உணவு என்று வாழ்க்கை ஓட இதில் முதலில் அடிபடுவது மனம்தான். பெண்கள்தான் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
நமக்கு உள்ள கடமைகளையும் செய்துகொண்டு அதே சமயம் மன அமைதியையும் இழக்காமல் இருக்க உளவியல் நிபுணர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றலாம். எந்த சூழ்நிலையிலும் எதற்குமே அலட்டிக்காத மனோபாவத்துடன் இருந்தால் எந்த விமர்சனத்தையும் எதிர்கொள்ளலாம்.
எதையுமே அதன்போக்கில் எடுத்துக்கொண்டு சிரிப்பும், உற்சாகமுமாய் இருப்பவர்களுக்கு டிப்ரஷன் வருவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கஷ்டமான சூழ்நிலைகளிலும் ரிலாக்ஸ்டாக இருங்கள். மன அழுத்தம் எட்டிப் பார்க்காது.
நாளைக்கு காலையில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் இரவு முழுவதும் உறங்காமல் இருந்தால் உடலும், மனமும் கெடும். எனவே நன்றாக தூங்குங்கள். காலையில் எழும்போது பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும். புத்துணர்ச்சி ஏற்படும். நல்ல இசை, மனதுக்கு இனிய இயற்கை காட்சிகள் முதலியன மன இறுக்கத்தை தளர்த்தும். அதேபோல் மனம் விட்டுப் பேசுதல் எதற்குமே வடிகால் எனலாம்.
நல்ல புத்தகங்களை எடுத்துப் புரட்டுங்கள். படிக்க முடியாது. எனவே புரட்டிப் பார்ப்பதே சில நினைவுகளை நமக்குள் கொண்டு வரும்.மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்னையை மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். உங்கள் பிரச்னைகளை ஆத்ம நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். முடிக்கும்போது ஏதோ பாரத்தை இறக்கி வைத்த உணர்வு ஏற்படும்.
எந்த வேலை என்றாலும் அதற்கு திட்டமிடுதல் அவசியம். சரியாக தொடங்கப்படும் வேலை பாதி முடிந்ததற்கு சமம் என்பார்கள். எனவே சரியாக திட்டமிடுங்கள். இல்லையெனில் வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்படும். அதனால் பதற்றம் வந்து விடும். எனவே திட்டம் போட்டு வேலைகளை முடித்தால் மன இறுக்கம், அழுத்தம் ஆகியவை அண்டாது.
பிராணாயாமம் எனும் மூச்சுக்காற்றை இழுத்து விடும் பயிற்சி பெருமளவு மன இறுக்கத்தைக் குறைக்கும். அதேபோல் உடற்பயிற்சி அல்லது வேகமான நடைப்பயிற்சி உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல. மனதுக்கும்தான். சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்கள் மன இறுக்கத்திற்குக் காரணமாகும். இவற்றை குறைப்பது நல்லது. ஏனெனில் சிகரெட்டும், மதுவும் மன இறுக்கம் விளைவிக்கும் ஹார்மோன்களோடு தொடர்பு கொண்டவைகள்.
உடலுக்கும், தலைக்கும் மசாஜ் செய்து கொள்வது நல்லது. நறுமணம் மிக்க பூக்களை முகர்வது போன்றவை கூட மன இறுக்கத்தை குறைக்கும். மன அழுத்தம் ஏற்படும்போது எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட முடியாது. எதிலும் ஆர்வம் இருக்காது. எல்லோர் மீதும் எரிந்து விழுவோம். தலைவலி, வயிற்று வலி, கோபம் போன்றவை ஏற்படுவதாக உணர்வோம்.
மன இறுக்கத்தால் இதயம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது. எனவே LD 60T அழுத்தம் இன்றி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.