
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதில் நமக்குத் தொடர்புடைய மற்றும் துளியும் தொடர்பில்லாத பல விஷயங்கள் நடை பெறுகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் ஜாக்கிரதையாக யோசித்துச் செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு விஷயத்திலும் நாம் பார்வையாளராகவே இருப்பது நல்லது.
உங்கள் உறவினர் இருவரிடையே ஏதோ பிரச்னை என வைத்துக் கொள்ளுவோம். சமரசம் செய்கிறேன் பேர்வழி என்று நீங்களாகவே சென்று அவர்களின் பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்யாதீர்கள். அப்படிச் செய்வது நல்லதுதான். உறவுகள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது நல்லதுதான். ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இருவரில் யாராவது ஒருதரப்பு அல்லது இருதரப்பு உங்களை ஒரு மத்தியஸ்தராக இருந்து பேச அழைத்தால் மட்டுமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போதும் இரண்டு பக்கம் உள்ள பிரச்னைகளை கூர்ந்து விசாரியுங்கள். நீங்கள் தீர்ப்பு ஏதும் கூறாதீர்கள். தீர்ப்பு என்று வரும்போது ஒரு பக்கம் மட்டுமே நீங்கள் சாதகமாகப் பேச நேரிடும். அப்படிச் செய்தால் மற்றொரு உறவினரின் பகையை சம்பாதிக்க நேரிடும்.
சில சமயங்களில் இருதரப்புமே உங்களுக்குப் பகையாளியாக மாறும் விநோதமான சூழ்நிலையும் ஏற்படலாம். இருவருக்கும் மத்தியில் பொதுவாக “இருவரும் சமரசமாகச் செல்லுவது நல்லது. அப்படிச்செய்யுங்கள். இருவரும் தொடர்ந்து பகைகளை மறந்து உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள்” எனும்படியாக அவர்கள் இருவருக்கும் அறிவுறுத்தி விடைபெறுவது நல்லது.
சில சமயங்களில் பொது இடங்களில் நடக்கும் சண்டை சச்சரவுகளை விலக்கி விடுகிறேன் பேர்வழி என்று சிலர் ஆர்வமாகச் செல்லுவார்கள். ஆனால் சண்டையிடு பவர்கள் அப்போது இருக்கும் மனநிலையில் சமாதானத்தைப் பொதுவாக விரும்புவதில்லை. இதனால் சமாதானம் செய்ய வந்தவர் மேல் கோபம் திரும்பி பிரச்னை திசைமாறிவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனால் சமாதானம் செய்யச் சென்றவர் பெரும் பிரச்னைகளை சந்தித்த நிகழ்வுகளை செய்தித்தாள்களில் நாம் அவ்வப்போது படிக்க நேரிடுகிறது.
சமாதானம் என்றும் சிறந்த வழி என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். சமாதானம் நமக்கு நன்மையே விளைவிக்கும் என்பதும் அனுபவப்பூர்வமான உண்மை. ஆனால் சமாதானத்தை நமது மனம் விரும்பினாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஈகோ என்ற மனப்பான்மை அதை மறக்கச் செய்து விடுகிறது.
உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை உடனடியாகத் தீர்க்க முயலாதீர்கள். உங்களிடம் பிரச்னை செய்பவரிடம் சண்டையிடாமலும் வார்த்தைகளை விடாமலும் அமைதியாக இருந்து பாருங்கள். அந்த சூழ்நிலையில் சில நாட்கள் அமைதி காப்பது நல்லது.
உங்களின் அமைதி எதிராளியை யோசிக்கச் செய்யும். இந்த சூழ்நிலையில் உங்களுக்குப் பிரச்னை கொடுத்தவர் மனம் மாறி அமைதியாக மாறும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
மிக அவசரமாக முடிவு எடுக்க வேண்டிய பிரச்னை என்றால் மட்டுமே உடனடியாக நியாயமான முறையில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அந்த பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க முயலுங்கள். அவசரமில்லாத பிரச்னை என்றால் சில நாட்கள் ஒரு பார்வையாளராக இருந்து பாருங்கள். பிரச்னை தானாகவே விலகக்கூடும்.