
வருங்கால வரலாற்றில் நீங்களும் சாதனையாளராக விரும்புகிறீர்கள் அல்லவா! உங்களால் முடியும்! நீங்களும் சாதிக்கலாம்! இந்த எண்ணம் மட்டும், உங்கள் மனதின் அடித்தளத்தில் இருந்துவிட்டால் போதும்.
உங்களுக்கு முன் சாதித்தவர் அனைவரும் உங்களைப் போன்று முயற்சி எடுத்துக்கொண்டவர்கள்தான். வெற்றியின் எல்லையைத் தொடவேண்டும் என்ற நம்பிக்கையும், உறுதியும்தான் அவர்களைச் சாதனையாளர்களாக ஆக்கியது.
உங்களாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வந்துவிட்டால் போதும் நிச்சயம் வெற்றி பெறலாம். தளராத உழைப்பும். விடாமுயற்சியும், திறமையை வளர்த்துக்கொள்ளலும், பொறுமையும், நேரம் தவறாமையும், நம்பிக்கை. நாணயம் உண்மை இவற்றைத் தாரக மந்திரமாக ஏற்றுக்கொள்ளுங்கள் போதும் நீங்களும் சாதனையாளர்தான்.
இன்று முடியாவிட்டாலும், நாளை உங்களின் நல்ல இலட்சியம் நிச்சயம் நிறைவேறும். இதை என்றும் மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.உங்களின் சிந்தனை, உழைப்பு என அனைத்தும் ஒரு முகப்பட வேண்டும் உங்களின் மனம் தளராத உழைப்பும். விடா முயற்சியும்தான் வெற்றியின் இலக்கை அடைய உத்தரவாதம் தரும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
இதற்கு முன் சாதித்தவர்கள் அனைவரும், உடனே சுலபமாக எதையும் செய்து வெற்றி அடையவில்லை. அவர்களும் நிறையத் தோல்விகளைச் சந்தித்து இருக்கிறார்கள்.
எத்துறையில் சாதனை அடைந்தவர்கள் ஆனாலும், அவர்களும் சோதனைகளைக் கடந்துதான் வந்திருக் கின்றனர். எதையும் சுலபமாக அடைந்துவிட்டாலும், அதன் மகிமை முழுவதையும் உணர முடியாது. அதற்காக இப்பொழுது கஷ்டப்படுகின்றோமே என்றும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவேண்டாம். எதற்கும் அஞ்சாமல், மனம் கலங்காமல் போராடி வெற்றி பெறவேண்டும் என்று மட்டும் எண்ணுங்கள்.
நீங்களும் ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என உங்கள் மீது நம்பிக்கை வைத்து உழைத்துப் பாருங்கள். கலைத்துறையில் இன்று பிரபலமாக மின்னிக் கொண்டு இருப்பவர்களை ஆரம்ப காலங்களில், அனுமதிக்கப் படாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மனம் தளரவில்லை. திரைத்துறையில் போராடி தன் திறமையை வளர்த்துக் கொண்டுதான் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
வாழ்க்கையில் வரும் சோதனையாவும், நமக்கு ஏற்பட்ட அனுபவப்பாடமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். புடம்போட்டால்தான் தங்கம் ஜொலிக்கும். அதுபோல் நம் வாழ்க்கைப் பாதையில் கல்லையும், முள்ளையும் கண்டு கலங்காது பயணம் செய்யவேண்டும். உங்களுக்குள் ஒளிந்துள்ள தனித்திறமை என்ன என முதலில் கண்டுபிடியுங்கள். உங்களின் முழுமையான ஆர்வம் எத்துறையில் செல்கிறது என சிந்தித்துப் பாருங்கள். அத்துறையை உங்களின் வெற்றியின் இலக்காய்த் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வேறு எந்தத் துறையிலும் கவனம் சிதறாமல் ஒரே துறையில். முழுமூச்சாய் செயல்படுங்கள்.
அடிக்கடி பல துறையை மாற்றி மாற்றித் தேர்ந்து எடுக்காதீர்கள். அதனால் காலமும், பொருளாதாரமும்தான் பாதிக்கப்படும்.
உங்களால் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். உங்களின் செயல் திறனையும், தகுதியையும் மெதுவாகத்தான் உயர்த்திக் கொள்ளமுடியும்.
உடனே பெரிய ஆளாக மாறிவிடவேண்டும் எனப் பகல் கனவு காணவேண்டாம், நீங்கள் என்ன சொல்வது. நான் என்ன கேட்பது என சிலர் அடம் பிடிக்கலாம்.
உங்களால் முடியாது என ஒரு போதும் மனம் தளர்ந்து விடாதீர்கள், ஏனென்றால், உங்கள் மனம் சோர்ந்துவிட்டால் எதையும் நீங்கள் சாதிக்க முடியாது. எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் கொண்ட மனதை உருவாக்கிக் கொள்ளுங்கள் நிச்சயம் நீங்களும் சாதிக்கலாம்.