
சாதாரணமாக நாம் எங்காவது உறவினர்கள் வீட்டிற்கோ நண்பர்கள் வீட்டிற்கு அல்லது புதிதாக ஒருவர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும்பொழுது நம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நம்மை சூழ்ந்து முதலில் கேட்கும் கேள்வி என்னவென்றால், நீ அங்கு அவர்கள் வீட்டிற்கு சென்றாயே அவர்கள் எப்படி அன்பாக பேசினார்களா? பாசமாக நன்றாக உபசரித்தார்களா? என்பதாகத்தான் இருக்கும்.
நாம் அக மகிழ்ந்து ஆமாம் அவர்கள் அன்பிற்கு ஈடு இணையே இல்லை என்று ஒரு வார்த்தையை கூறிவிட்டால் போதும். அப்படியே அனைவரும் அமர்ந்து கதை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அப்படிப்பட்டதுதான் அன்பு. ஏன் அப்பொழுதெல்லாம் ஒரு கடிதம் வெளியூரில் இருந்து வந்திருந்தால், அந்தக் கடிதத்தை படிப்பவர்களிடம் சென்று பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் என்னைப் பற்றி விசாரித்து எழுதி இருக்கிறார்களா என்று கேட்டு சந்தோஷப்படுவார்கள். இதெல்லாம் அன்பின் வெளிப்பாடுதான்.
என் தோழி அடிக்கடி கூறுவாள். நான் மாற்றலில் ஒரு மாநிலத்திற்குச் சென்றிருந்தபோது குறிப்பிட்ட ஒரு குடும்பத்தை கூறி அவர்கள் வீட்டில் எல்லோரும் முசுடு. ஆதலால் யாரும் அவர்களுடன் நட்பாக பழகமாட்டார்கள். அன்பே இல்லாத மனிதர்கள் என்றால் அவர்கள்தான். ஆதலால் நீயும் பார்த்து நடந்துகொள் என்று அவளிடம் கூறியிருந்தார்கள்.
அவளோ அவர்கள் பேச வரும்போது எல்லாம் அன்பாக அரவணைத்து பேசி தன் வீட்டில்தான் என்ன சாப்பிடுகிறோமோ அவற்றை எல்லாம் பரிமாறுவாள். அவர்களும் விரும்பி உண்பார்கள். இதேபோல் இருந்து வந்தாள். கடைசியாக அவள் அந்த ஊரைவிட்டு கிளம்பும்பொழுது அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் யாரும் ஆபீஸ் வேலைக்குச் செல்லவில்லை. அன்று முழுவதும் லீவு எடுத்துக்கொண்டுஆளாளுக்கும் ஒவ்வொரு விதமாக சமைத்து அந்த வீட்டினருக்கு பரிமாறி, சில பொருட்களை அன்பளிப்பாக கொடுத்து, வீட்டுடன் வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.
இதைப் பார்த்த என் தோழி நெகிழ்ந்து போனாள். தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதுகூட அவர்களின் அன்பை வியந்து வியந்து கூறுவாள். ஆதலால் ஒருவர் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக பழகும் தன்மை உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் வித்தியாசமாக பழகுகிறார்கள் என்றால் நாமும் வித்தியாசமான அன்பை காட்டினால்தான் அது முடியும். அதற்குப் பதிலாக மற்றவர்கள் சொல்வதைக் கேட்டால் அன்பை இழக்கத்தான் நேரிடும்.
ஆதலால் பிறர் சொல்வதை ஒரு பக்கம் காதில் வாங்கிக் கொண்டாலும், நம் இயல்பு தன்மையை மாற்றிக் கொள்ளாமல் அன்பு காட்டி அரவணைத்தோமானால் எல்லோரும் நல்லவர்கள் தான். அனைவரும் ஏங்கி கிடப்பது அன்பிற்குத்தான்.
அதேபோல் அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
யாருடன் பழகினாலும் யாருக்கு உதவினாலும் அந்தஸ்து பார்க்காமல் மனிதநேயத்துடன் உள்ளன்பு குறையாமல் உதவ வேண்டும். இதைத்தான் வள்ளுவரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு என்றார்.
அன்பு கொள்வோம்; அதனால் எதையும் வெல்வோம்!