
சாதனைக்கு வயது முக்கியமா? நிச்சயமாக இல்லை. நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சாதிக்க முடியும். ஒன்றே ஒன்று உங்கள் திறமைகள் என்ன அதற்கான சூழல் சரியாக இருக்கிறதா என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கையில் உங்களுக்கும் வெற்றி நிச்சயம்.
சாதிக்கும் ஆர்வம் உள்ளவர்க்கு வயது என்றுமே தடையாக இருந்ததில்லை. நமது குறிக்கோள் என்ன என்பது தெரிந்துவிட்டால் அது 5 வயதாக இருந்தாலும் 50 வயதாக இருந்தாலும் அந்த இலக்கு முடியாமல் மனம் தூங்குவதில்லை. இதற்கு நிறைய உதாரண மனிதர்கள் நம்மிடையே உண்டு.
ஒரு 5 வயது குழந்தை நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து தண்ணீருக்குள் விழுகிறது. அதன் பெற்றோர் பயந்து போகின்றனர். ஆனால் அந்த குழந்தை தத்தளித்து தத்தளித்து வெறும் பத்தே நாட்களில் நீச்சலை கற்றுக்கொள்கிறது. அதன் இலக்கு நீச்சல் மட்டுமே. அதன் முயற்சி அதற்கு வெற்றி. இந்த இடத்தில் வயது என்பது அடிபட்டு போகிறது. கூடவே பெற்றோரின் வயது குறித்த அச்சமும்.
ஒரு பத்திரிகையாளர் 110 வயது முதியவரை பேட்டி எடுக்க சொல்கிறார். அந்த முதியவர் பேசும்போது "இப்போது 110 வயது ஆகிவிட்ட முதியவனாக என்னை நான் நினைக்கவில்லை. இந்த 110 வருடங்களும் எனக்கு அளித்த அனுபவங்களை முழுமையாக பெற்ற சிறந்த மனிதனாகவே என்னை நான் எண்ணுகிறேன். வயோதிகம் என் உடலுக்குத்தான். இன்னும் என்னென்ன அனுபவங்களை நான் பெறப்போகிறேன் என்று தேடலே எனக்குள் உள்ளது. இதுதான் வாழ்க்கை" என்றாரே பார்க்கலாம். அசந்துபோன அந்த 25 இளைய பத்திரிகையாளர் அப்போது முடிவு செய்தார் தானும் பத்திரிகை உலகில் சாதிக்க வேண்டும் என்று.
வயது என்பது காலத்தின் நியதி. திரும்பிச் செல்ல முடியாது மாறாக நல்ல அனுபவங்களைத்தரும். உடல்தான் முதுமைக்கான அடையாளங்களைதா தருமே தவிர மனம் என்றும் உற்சாகத்துடன் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம். இதற்கு பேரறிஞர் பெர்னாட்ஷா ஒரு உதாரணமாகிறார். அவர் தனது நூல்களை 90 வயதிலும் எழுதி இலக்கியத்திற்கான தனது பங்கினை சிறப்பாக அளித்து இன்று உலகம் போற்றும் அறிஞராக நிலைத்து நிற்கிறார்.
நம்மூர் பெருமையாளர்களில் ஒருவரான குற்றாலீஸ்வரன் மன்னார் வளைகுடாவை நீந்திக் கடந்து உலகை வியக்கவைத்த சாதனைக்கு சொந்தக்காரரானபோது அவர் வயது என்ன தெரியுமா? 13 தான்.
ஆகவே, எந்த வயதிலும் உங்கள் எண்ணத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் கனவு காணும் வாழ்வை அடைய அந்த எண்ணங்களை செயல்படுத்துங்கள். உங்கள் குறிக்கோளுக்காக உழைப்பதில் ஆர்வமாக இருங்கள். உங்கள் குறிக்கோளை அடைய தினமும் எத்தனை மணி நேரம் உழைக்கிறீர்கள் ஒருவேளை குறிக்கோளை அடைய முடியாவிட்டால் அடுத்து என்ன வழி என்பது பற்றி ஆராயுங்கள்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஆகவே எந்த வயதாக இருந்தாலும் நமது உள்ளத்தில் எழும் உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுவதும் ஓயாத உழைப்பும் நமக்கு சாதனை படைக்க வழியைத்தரும். சாதிக்கத் தூண்டும்
வெற்றியைத் தரும் வாழ்க்கை என்பது ஒரு வழி பயணம். நாம் திரும்ப நினைத்தாலும் திரும்பி வர முடியாத காலத்தின் ஓட்டம். நாளை என்ன நடக்குமோ என்பது குறித்து அச்சப்படத் தேவையில்லை. அந்த அச்சம் நமது இன்றைய சக்தியையும் வீணாக்கிவிடும் என்பதுதான் உண்மை.
நாளை நடப்பதை பற்றி இன்று ஏன் கவலைப்பட வேண்டும்? இன்று நாம் என்ன செய்ய வேண்டுமோ அதில் தெளிவாக உறுதியாக இருந்து அதை நோக்கி முன் நகரவும். அதன் பாதை உங்களுக்கு நாளைக்கான பயணத்தை எளிதாக மாற்றிவிடும். ஆகவே சாதனைக்கு வயது முக்கியமில்லை என்பதை உணர்ந்து செயல்படுவோம் வெற்றி நமக்கே.