
மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதமே வாழ்க்கை. அதில் கரடுமுரடான முட்புதர்கள் இருக்கத்தான் செய்யும்! முயற்சியும், தன்னம்பிக்கையும், நிதானமும், அவசியம் தேவை! "திட்டமிடுதலும்" முக்கிய பங்கு வகிக்குமே! ஒவ்வொரு முறையும், முயற்சி செய்துவருகிறேன் தோல்விதான் வருகிறது, நான் என்ன செய்ய முடியும் எல்லாம் என் தலையெழுத்து, என்று அங்கலாய்ப்பு பலரிடம் நீட்டித்துவரும் விடை தொியா விக்ரமாதித்தன் கதைபோல என்றே சொல்லலாம்!
ஓா் லட்சியம் உங்களை ஆட்கொள்ளும்போது, ஒரு மகத்தான திட்டத்தில் நீங்கள் ஈடுபடும் வேளையில், உங்கள் எண்ணங்களின் குறுகிய எல்லைகள் உடைகின்றன என -"பதஞ்சலி முனிவர்" சொல்லியுள்ளாா்.
அதுபோலவே லட்சியத்தை அடையும்போது நம்முடைய குறுகிய மனப்பான்மை விலகும், அப்படி நிகழும்போது நாம் சோா்வடையாமல் நாம் எடுத்துக்கொண்ட குறிக்கோளோடு வாழ்ந்து வெற்றியடைய வேண்டும், நமது தோல்விகள் கண்டு நம்மை ஏளனம் செய்யும் உறவு மற்றும் நட்பு வட்டங்களின் செயல்பாடுகளுக்கும், விமர்சனங்களுக்கும், நாம்ஒருபோதும் முக்கியத்துவம் தரவேகூடாது.
அவர்களது ஏளனப்பேச்சுகள்தான் நமக்கான வெற்றியின் இலக்கு நம்பிக்கை தளா்ந்தால் எல்லாமும் போய்விடுமே! இதைத்தான் "சேட்கெல் பெய்க்" என்ற அறிஞர் உங்கள் தலையைத் தொங்கப்போடாதீா்கள் என்னால் முடியாது என எண்ணி மருகாதீா்கள், இன்னொரு வழி நிச்சயம் இருக்கும் எப்படியாவது கண்டறியுங்கள், என சொல்லியுள்ளாா்.
அவர் சொல்லியுள்ளது போலவே மாற்று வழி தேடுங்களேன். நம்முடைய முயற்சியை ஒருபோதும் தள்ளிப்போடாமல் உழைப்பை மூலதனமாக்கி தன்னம்பிக்கை தளராமல் இலக்கினை அடைய பாடுபடுவதே நல்ல செயலாகும்.
நம்மை யாரெல்லாம் உதாசீனம் செய்தாா்களோ, எள்ளி நகையாடினாா்களோ, அவர்களிடம் விரோதம் பாராட்டாதீா்கள்.
முன்பைவிட அவர்களிடம் நன்கு பழகுங்கள், இந்த நேரம் நமக்குத்தேவை விவேகமே!
வீாியம் பொிதல்ல காாியமே பொிதாகும், இந்த நேரத்தில் நமது குடும்பத்தினா்களின் ஒத்துழைப்பும் தேவையான ஒன்று, அதோடு இறை நம்பிக்கையில் தொய்வே அடையக்கூடாது அதுவே பிரதானம், சிாித்த முகத்துடன் சந்தோஷமாக தோல்வியை முறியடியுங்கள், அதுவே முயற்சிக்கான மூலதனம்.
குறிப்பிட்ட லட்சியம் ஒன்றே குறிக்கோள் என உறுதியாய் வாழ்ந்துபாருங்கள், அப்போது மனதின் உறுதியே வெற்றியை நிச்சயமாக்கும். அது சமயம் வரும் எதிா்மறை விவாதம், விமர்சனங்களை தவிா்ப்பதே நல்லது!
பலரின் தோல்விகளுக்குக் காரணம் வெற்றியை நெருங்கி வந்த வேளைகளில் "நம்மால் முடியாது "என கைவிட்டதுதான் என தாமஸ் ஆல்வா எடிசன் சொல்லியுள்ளாா், அவர் சொல்வது போல வெற்றி நெருங்கி வரும் வேளையில் நமது மனஉறுதி தளராத செயல்களே வெற்றியைத் தீா்மானிக்கும்!
இதைத்தான் வின்ஸ்டன் சர்ச்சில் தனது கருத்தில் உங்கள் ஆற்றலை நீங்களே அறிந்துகொள்ள சரியான வழி இடைவிடாத முயற்சி என்கிறாா்.
யாா் என்ன சொன்னாலும், எத்தனை சொன்னாலும், சரி ஒரே இலக்குடன் தன்னம்பிக்கை தளராமல் முயன்று பாருங்கள் தொடர் வெற்றி நமதாகும்.
அந்த நேரம் அமையும்போது நான் எனும் அகங்காரமும், இறுமாப்பும் அழையா விருந்தாளியாய் வலம் வருவாா்கள். அவர்களை விலக்கிவிடுங்கள்.
எந்த நேரத்திலும் அவர்களை வரவேற்பது நாமே நமக்கு வைத்துக்கொள்ளும் சூன்யமாகும்! சொந்த காசில் சூன்யம் தேவையா?
விடாமுயற்சி, நம்பிக்கை, போன்றவைகளே நமக்கான மந்திரம், வேறு மந்திரம் தேவையில்லயே!