
71 வயதான சீன பாட்டி நான்கு வருட கடுமையான பயிற்சிக்குப் பிறகு, ஃபிட்னஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் எண்ணற்ற இணைய ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். இதன் மூலம் சாதிக்க வயது ஒரு தடையில்லை, தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் சமீபத்தில் ஃபிட்னஸ் போட்டி நடைபெற்றது. இதில், மத்திய சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள மான்ஷானைச் சேர்ந்த 71 வயதான சன் மிங்குய் (71) என்ற மூதாட்டி (3ம் இடம் பிடித்து) வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். போட்டியில் கலந்து கொண்டவர்களில் இவர் மட்டுமே வயதான போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு எஃகு தொழிற்சாலையின் உணவு விடுதியில் பணிபுரிந்த இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் உடற்பயிற்சி மீது உள்ள ஆர்வத்தால் கடுமையான பயிற்சி மேற்கொண்ட பின்னர் இப்போட்டியில் கலந்து கொண்டார்.
அவர் தனது 67-வது வயதில் (ஓய்வுக்குப் பிறகு) சைக்கிள் ஓட்டுதல், ஜம்பிங் ரோப், ஜாகிங், ஹைகிங் உள்ளிட்ட பயிற்சிகளுடன் சிக்ஸ் பேக் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கான உடற்பயிற்சியிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.
ஒரு மாதத்திற்கும் மேலான கடுமையான பயிற்சிக்குப் பிறகு, தன் உடலில் மாற்றங்களைக் காணத் தொடங்கியதாகவும், அது தனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்ததாகவும் கூறினார். வயது எதுவாக இருந்தாலும், வலிமை அல்லது பிற பயிற்சிகளைச் செய்ய முடியும் என்பதை இது நிரூபிக்கிறது என்றும் அவர் கூறினார்.
"எனக்கு 71 வயது. வயது என்பது ஒரு எண் மட்டுமே, ஒரு வரம்பு அல்ல" என்று கூறும் இவர், டம்பல்ஸைத் தூக்கி தனது தசைகளை அழகாக மெருகேற்ற விரும்புவதாக கூறுகிறார்.
தீவிர சைக்கிள் வீரரான சன் மிங்குயி 2014-ம் ஆண்டு, தனது 60வது வயதில், தனது சக வீரர்களுடன் இணைந்து சீனாவின் கிழக்குப் பகுதியிலிருந்து அதன் தெற்கே உள்ள நகரமான சான்யா வரை சைக்கிளில் பயணித்து, 45 நாட்களில் 6,316 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வயதாவதை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் உடற்பயிற்சி உங்கள் உடல் மற்றும் மன நலனை மாற்றும். எனது இந்த வெற்றிப்பயணம், ஒய்வுக்கு பிறகு சாதிக்க முடியும் என்பதையும், ஓய்வுக்குப் பிறகு தங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவும், சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதையும், தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும், அதிக வயதான நண்பர்களை ஊக்குவிக்க உதவும் என்று நம்புவதாக சன் கூறினார்.
வயதானவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், தற்போது சன் மிங்குயி தனது உடற்பயிற்சி வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
வயதானாலும் சாதிக்க முடியும் அதற்கு தேவை தன்னம்பிக்கை மட்டுமே என்பதை நிரூபித்துள்ள சன் மிங்குயிக்கு ஒரு சல்யூட்.