
இந்த உலகில் எதுவும் சாத்தியம் இல்லை என்பதே கிடையாது. ஆசை இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஏனென்றால் ஆசைதான் ஒரு செயலை செய்யத் தூண்டுகிறது; சாதிக்க வைக்கிறது. ஒரு செயலை செய்வதற்கு ஆசை என்பது ஒரு முக்கிய தூண்டுகோலாகும். அது மட்டும் இருந்தால் போதும் நாம் அடையவேண்டிய இலக்கை அடைவதற்கு உழைக்க சிறிதும் தயங்க மாட்டோம்.
எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் ஆசையும், உழைப்பும் இருந்தால் போதும் நம்மால் எதையும் சாதித்துவிட முடியும். அதற்கு முதலில் நம் கனவுகள் தெளிவாக இருக்கவேண்டும். அத்துடன் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் உறுதியாகவும் இருக்கவேண்டும். சாதிக்க வேண்டும் என்ற ஆசை தன்னம்பிக்கையை வளர்க்கிறது. தன்னம்பிக்கை இருந்தால் உழைப்பும், விடாமுயற்சியும் தானாகவே சேர்ந்துகொள்ளும்.
வாழ்க்கை கடினமாக இருக்கலாம். சில நேரங்களில் நாம் ஒருபோதும் நினைக்காத விஷயங்களை செய்ய நாம் தூண்டப்படலாம். எவ்வளவு பயந்தாலும் நம்மை நடவடிக்கை எடுக்க தூண்டும் செயல்கள் உண்டாகலாம். வெளிப்புற அழுத்தம் அல்லது உள்ளார்ந்த ஆசை போன்ற காரணிகளைப் பொறுத்து உந்துதல் ஏற்படலாம்.
ஊக்கத்துடன் போராடுபவர்களை விட தொடர்ந்து தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள் அதிக வெற்றி பெறுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சுய உந்துதல் கொண்டவர்கள் தங்களுக்கென உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அந்த இலக்குகளை அடைவதற்கு நடவடிக்கையும் எடுத்து, சவால்கள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருப்பதே இதற்குக் காரணம்.
சாதிக்க வேண்டும் என்பது சிலருக்கு ஒரு ஆசையாகவும், சிலருக்கு ஒரு தேவையாகவும் இருக்கிறது. சிலர் தங்களை பிறருடன் ஒப்பிட்டு அவர்களைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
வேறு சிலரோ தங்கள் பெற்றோர், ஆசிரியர் அல்லது சமூகத்தின் மூலம் ஒரு இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைய விரும்புவார்கள். மேலும் சிலர் தங்களை யாரென்று இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்றும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவரை வாழ்வில் முன்னேற வைக்கிறது.
வாழ்க்கையில் சாதிக்க அனைவருக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் இயற்கை கொடுத்துள்ள ஒரு சாதனம் 24 மணி நேரங்கள். அதனைப் பயனுள்ள முறையில் செலவிடுவது தான் சிறந்தது. சாதனையாளர்கள் தங்களுடைய நேரத்தை நிமிடத்தால் மட்டுமே அளவிடுவார்கள்.
இந்த நிமிடத்தில் இதை செய்ய வேண்டும்; அடுத்த நிமிடத்தில் செய்ய வேண்டியது என்ன என்று சிந்தனைகள் ஆக்கபூர்வமாக நகர்ந்து கொண்டே இருக்கும். தூங்கும் நேரத்தைத் தவிர மீதி நேரங்களை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். நிமிடங்கள் ஒவ்வொன்றையும் பயனுள்ளதாக மாற்றி வாழ்ந்தால் வாழ்க்கையில் சாதிப்பது என்பது சாத்தியமே.
சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யாருக்காகவும் காத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்குள் தேடல்கள் அதிகம் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தை சிதற விடமாட்டார்கள். குறிக்கோள்கள் மற்றும் லட்சியங்கள் மட்டுமே நினைவில் இருக்கும். முயற்சியை கைவிட மாட்டார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு இந்த உலகில் அனைத்தும் சாத்தியமே!