
அலெக்ஸாண்டர் என்றதும் நம் நினைவுக்கு வருவது மாபெரும் அரசன், சிறந்த வீரன், தனி ஒருவனாக மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவன் போன்ற செய்திகளாகும். இருப்பினும், இத்தனை சாதனைகளை புரிந்திருந்தும் அலெக்ஸாண்டர் இறக்கும் தருவாயில் தன்னுடைய தளபதிகளை அழைத்து தன்னுடைய இறுதி மூன்று ஆசைகளைப் பற்றிக் கூறினார்.
1.முதல் ஆசை: தன்னுடைய சவப்பெட்டியை சிறந்த மருத்துவர்கள் சுமந்து செல்ல வேண்டும்.
2.இரண்டாவது ஆசை:
இதுவரை தான் சேர்த்து வைத்திருந்த தங்கம், வெள்ளி, நவரத்தினங்களை தன்னை கல்லறைக்கு கொண்டு செல்லும் வழி முழுவதும் தூவிக்கொண்டே செல்ல வேண்டும்.
3. மூன்றாவது ஆசை:
தன்னுடைய கைகள் இரண்டையும் சவப்பெட்டியின் வெளியே மக்கள் அனைவரும் பார்க்கும்படி வைக்க வேண்டும் என்று கூறினார்.
இதைக்கேட்ட தளபதி இந்த ஆசைகள் மிகவும் விசிரித்திரமாக இருப்பதாக எண்ணி அலெக்ஸாண்டரிடமே அதற்கான விளக்கத்தை கேட்டார். அதற்கு அலெக்ஸாண்டர் கூறிய விளக்கம் என்ன தெரியுமா?
1. நான் சிறந்த மருத்துவர்கள் என்னுடைய சவப்பெட்டியை சுமக்க வேண்டும் என்று கூறியதற்கான காரணம், ‘உலகில் உள்ள சிறந்த மருத்துவர்களால் கூட என்னை சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற முடியவில்லை’ என்பதை உணர்த்துவதற்காக தான்.
2. இதுவரை நான் போரிட்டு சேர்த்து வைத்த பொன், பொருள், விலை உயர்ந்த ஆபரணங்கள், வைரக்கற்களை என்னுடைய இறுதி ஊர்வலத்தில் தூவச் சொன்னதற்கான காரணம், ‘நான் இறந்த பிறகு எந்த செல்வத்தையும் கொண்டு செல்லவில்லை. அனைத்தையும் இங்கே தான் விட்டுவிட்டு செல்கிறேன்' என்பதை காட்டுவதற்காக தான்.
3. என் கைகளை சவப்பெட்டிக்கு வெளியே எல்லோருக்கும் தெரியும்படி வைக்க சொன்னதற்கான காரணம், ‘இந்த உலகத்திற்கு நாம் வெறும் கைகளோடு தான் வந்தோம். நாம் இறந்து போகும் போதும் வெறும் கைகளோடு தான் போகப்போகிறோம்’ என்பதை நினைவூட்டுவதற்காகவே என்றார்.
பொன், பொருள், செல்வம், பதவி, பேர், புகழ் அனைத்தும் நிலையற்றவையாகும். நம்மிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத ஒன்று நேரம் மட்டுமே! நம்மிடம் இருக்கும் நேரம் அளவானதாகும். எனவே, அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நாம் ஒருவருக்காக நம் நேரத்தை செலவிடுகிறோம் என்றால், அவர் அதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும். நம்முடைய குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் நேரத்தை செலவிட தயங்க வேண்டாம். அதுவே, நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிக சிறந்த பரிசாகும். இதைப் புரிந்துக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.