
ஆல்ஃபா ஆண்களுக்கும் சிக்மா ஆண்களுக்கும் குணாதிசயங்களில் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் சில விஷயங்களில் இருவரும் வேறுபடுகிறார்கள். இரண்டு விதமான வகையான மனிதர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய திறன்கள் மற்றும் பண்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆல்ஃபா ஆண்களின் குணாதிசயங்கள்:
சமூகத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், பெரிய தொழிலதிபர்கள் நிறுவனத் தலைவர்கள் போன்றவர்கள் ஆல்பா ஆளுமைத் தன்மை கொண்டவர்கள். இவர்கள் பணியிடத்திலும் சமூக வாழ்க்கையிலும் பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்களாக இருப்பார்கள். மிகவும் புத்திசாலிகள், தன்னம்பிக்கை மிக்கவர்கள். உயர்ந்த லட்சியங்களை அடைய கடுமையாக போராடி வெற்றி பெறுவார்கள். பிறரை வெகு எளிதில் ஈர்த்துவிடுவார்கள். தங்களுடைய முயற்சிகள் மற்றும் வெற்றியை பிறர் பாராட்டி, அங்கீகரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
சமூக அந்தஸ்தை தக்கவைப்பதில் கவனம் செலுத்துவார்கள். இவர்களுக்கு பெரிய நட்பு வட்டம் இருக்கும். ஆனால் தங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப பிறர் நடந்து கொள்ளாத போது பொறுமை இழந்து கோபப்படுவார்கள். தனக்கு கீழ் பணிபுரிபவர்கள் தவறு செய்தால் தண்டனை தர தயங்க மாட்டார்கள். ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள்.
சிக்மா ஆண்களின் பண்புகள்:
ஆல்ஃபா ஆண்களைப் போலவே இவர்களும் தனித்தன்மை வாய்ந்தவர்கள், தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடின உழைப்பாளிகள் என்றாலும் சுதந்திரமாக செயல்படுவார்கள். தனக்கு மனதுக்குப் பிடித்த வேலைகளை மட்டுமே செய்வார்கள். சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் பிறரிடமிருந்து அங்கீகாரத்தையோ பாராட்டையோ எதிர்பார்க்க மாட்டார்கள். புகழ் வெளிச்சம் தன் மீது தன்மீது படுவதை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள்
தனிமை விரும்பிகள். இவர்களுடைய நட்பு வட்ட மிகச் சிறியதாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு மிக உண்மையான நண்பர்களாக இருப்பார்கள். விதிமுறைகளை அவ்வளவாக கடைப்பிடிக்க மாட்டார்கள். பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் பொருட்படுத்த மாட்டார்கள். சிக்கல்களை அசாதாரணமான முறையில் தீர்ப்பார்கள். உணர்ச்சிகளை பொறுமையாகக் கையாள்வார்கள். தனக்குக் கீழ் பணி புரிபவர்கள் தவறு செய்தால், இதமாகப் பேசி தவறுகளை எடுத்துரைப்பார்கள்.
இருவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய திறன்களும் பண்புகளும்:
வெற்றிகரமான, அதே சமயம் மகிழ்ச்சியாக வாழ விரும்புபவர்கள் சிக்மா ஆண்கள் மற்றும் ஆல்பா ஆண்களின் குணாதிசயங்களில் இருந்து தகுதியானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஆல்பா ஆண்களைப் போல சக்தி வாய்ந்த தலைமைத்துவப் பண்புகளை கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதே சமயத்தில் உணர்வுபூர்வமாக மக்களை அணுகுவதில் சிக்மா ஆண்களைப் போல நடந்து கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு அவர்களை காயப்படுத்தாமல் இதமாக பேசி காரியம் சாதிக்க வேண்டும்.
ஆல்பா ஆண்களைப் போல சிறப்பாக தீர்மானம் செய்தல், முடிவெடுத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்கும் அதே நேரத்தில், சிக்மா ஆண்களைப் போல சக ஊழியர்களின் உணர்வுகளை மதித்து அவர்களை கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும். இலக்குகளை அடைய ஆல்பாக்களை போல சரியான குழுக்களை நியமித்து அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
ஆல்பா ஆண்களைப் போல எப்போதும் பிறரின் பாராட்டுகளை எதிர்பாராமல், தன் மனதுக்குப் பிடித்த வேலைகளை செய்யும்போது அமைதியும், ஆழ்ந்த மகிழ்ச்சியும் கிட்டும். சாதிக்கும் போது கிடைக்கும் வெற்றிப் பெருமிதத்தைப் போலவே மனநிறைவும் வாழ்வில் முக்கியம்.