
அந்த சாலை மிகவும் பரபரப்பாக இருந்தது. அலுவல் நேரம் என்பதால் யாரும் யாரையும் கவனிக்காமல் அவரவர் பாதையை பார்த்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு அலறல் சத்தம். பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று பயமுறுத்த அந்த சிறுமி பதறிப்போய் கீழே விழுந்தாள்.
அனைவரும் அவரவர் வேலையை பார்க்க அங்கிருந்து ஒரு இளைஞன் மட்டும் ஓடிப்போய் அந்த சிறுமியை தூக்கி ஆறுதல் அளித்து அனுப்பி வைத்தான். இதை பார்த்துக் கொண்டிருந்த நான் அந்த இளைஞனுக்கு பாராட்டுக்கள் சொல்லி "அனைவரும் அவரவர் வேலையை பார்க்க உனக்கு மட்டும் நீ மட்டும் ஏன் தூக்கிவிட ஓடி வந்தாய்?" எனக் கேட்டேன்.
அந்த இளைஞன் சொன்ன பதில் "இந்த தேசம் முழுக்க இருப்பவர்கள் என் சகோதர சகோதரிகள் எனும்போது அவர்களுக்கு நான்தானே பொறுப்பு? என் வீட்டில் மட்டுமல்ல என்னை சுற்றி இருக்கும் சமூகத்தில் எது நிகழ்ந்தாலும் அதற்கு பொறுப்புடையவன் ஆவேன் என்று என் தந்தை எனக்கு சொல்லித் தந்துள்ளார். அந்த சிறுமியை தூக்கிவிட வேண்டியது என்னுடைய பொறுப்புதானே? என்று சொல்லிவிட்டு சென்றார்.
உண்மையில் அந்த இளைஞன் இந்த சமூகத்தினரால் பாராட்டுக்கள் பெற்று வெகு உயரத்திற்கு செல்வான் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம் எல்லையற்ற அவனது பொறுப்புணர்வு.
தன் ஒருவனுக்கு மட்டும்தான் பொறுப்பு என்று வாழ்வது அர்த்தமற்ற வாழ்க்கை. அதன் நோக்கம் உயிர் தக்க வைக்கும் வெறும் பிழைப்பு மட்டுமே. தங்கள் பசிக்கு கூட அடுத்தவரின் உழைப்பை நம்பி தன் பிழைப்புக்கு கூட பொறுப்பேற்காதவர்கள் ஒரறிவு ஜீவனுக்கும் கீழானவர்கள் என்பார்கள் பெரியோர்கள்.
தன் பொறுப்பின் எல்லையை தனது குடும்பம் தனது உறவுகள் என்று ஒரு வரம்புக்குள் நிறுத்தி வாழ்பவர்களை விட எல்லையே அற்ற சமூகப் பொறுப்பை உணர்ந்து செயலாற்றுபவர்களையே இந்த உலகம் தலைவர்களாக போற்றுகிறது. முழுமையான மனிதனாக வாழ்வது என்றால் எல்லைகளற்ற பொறுப்பை ஏற்று வாழ்வது மட்டுமே என்கின்றனர் பெரியோர்கள்.
உங்கள் பொறுப்புகளுக்கு எல்லை வகுத்துக் கொள்ளும்போது உங்கள் உண்மையான திறன் அடிபட்டு எனக்கென்ன என பின்வாங்கி விடுகிறது. இதனால் விளைவது முன்னேற்றம் அல்ல பின்னடைவுதான்.
தெருவில் சாக்கடை அடைத்துக் கொண்டால் நமக்கென்ன என்று சென்றால் சாக்கடையில்தான் நடக்கவேண்டும். பொறுப்புணர்வுடன் அதற்குண்டான தீர்வை தேடித்தந்தால் அந்தப் பகுதியின் ஹீரோ ஆவீர்கள் நீங்கள். இவ்வளவுதான் பொறுப்புக்கும் பொறுப்பற்ற தன்மைக்கும் வித்யாசம்.
உங்கள் பொறுப்பு எல்லையற்றது என்பதை உணர்ந்து அதை உங்கள் மனதில் ஆழப்பதித்து விட்டீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை நீங்கள் விரும்பியதைத் தந்து விழிப்புடன் வெற்றியைத் தேடித்தருகிறது என்பதுதான் உண்மை. நீங்களும் ஹீரோவாகத்தான் மாறுங்களேன் பொறுப்புக்கு எல்லை வகுக்காமல்.