

ஒரு மாணவன் கணிதப் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தான். ஆனால், "கணிதத்தில் நம்மால் தேர்ச்சி பெற முடியாது" என்று அவன் பயந்தான். கணிதத்தை நினைத்தாலே அவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது.
அந்த மாணவனுக்கு வாய்த்த ஆசிரியர் ஒரு தனித்திறமை பெற்றவர்; கற்றலில் பின்தங்கிய மாணவர்களைச் சிறந்த வெற்றியாளர்களாக மாற்றுவதில் நிபுணர். அவர் அந்த மாணவனை ஒருநாள் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள தடகள ஓடுதளத்தில் ஓடுமாறு அவனிடம் கூறினார். மாணவன் ஓடினான்; ஆனால், குறுக்கே இருந்த ஒரு தடையைத் தாண்டும்போது நிலைதடுமாறிக் கீழே விழுந்துவிட்டான்.
ஆசிரியர் மாணவனைத் திரும்ப அழைத்து வந்தார். அன்று அவர் கணிதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மறுநாளும் விளையாட்டு மைதானம் சென்றனர். இரண்டு, மூன்று நாட்கள் இது தொடர்ந்தது. ஐந்தாவது நாள், அந்த மாணவன் அனைத்துத் தடைகளையும் மிக லாவகமாகக் கடந்து ஓடி முடித்தான்.
"முதல் நாள் ஏன் விழுந்தாய்?" என்று ஆசிரியர் கேட்டார்.
"பயந்துவிட்டேன்... எனக்குப் பழக்கமில்லை" என்றான் மாணவன்.
"இன்று எப்படி ஓடி முடித்தாய்?" என்று ஆசிரியர் கேட்டபோது,
"இன்று அந்தத் தடைகள் என் கண்ணுக்குத் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, பயிற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டேன்" என்று உற்சாகமாகப் பதிலளித்தான் மாணவன்.
ஆசிரியர் அவனைப் பார்த்து, "ஓட்டப்பந்தயத்தில் நீ வென்றது போல, பயிற்சியால் கணிதத்திலும் நீ தேர்ச்சி பெற முடியும்; ஒரு சிறந்த கணித மேதையாகவும் மாற முடியும்" என்றார். தடகள ஓட்டத்தில் கிடைத்த அந்த வெற்றிப் பாடம், அவனுக்குக் கணிதப் பாடத்தின் மீதான பயத்தைப் போக்க உதவியது.
நம்மில் பலர் தடைகளைக் கண்டு அஞ்சுகிறோம். "உங்களால் முடியும்" என்பதை நீங்களே உணர, முதலில் அந்தச் செயலைச் செய்து பாருங்கள்; தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். அப்போது உங்களுக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றல் வெளிப்படும். "என்னால் முடியும்" என்ற தீர்மானத்திற்கு நீங்கள் வந்துவிடுவீர்கள்.
"முடியாது" என்ற சொல் நமது திறமைகளுக்கு ஓர் எல்லையை உருவாக்குகிறது. ஆனால், நமது திறமைகளுக்கு எல்லைகளே இல்லை! தடைகளுக்குத் தகுந்தபடி நமது திறமைகள் கூடும், வளரும், விரியும், மாறும். ஆகவே, முடியும் என்று துணிந்து செயல்படுங்கள்.
"முடியாது" என்று நீங்கள் நினைத்த எத்தனையோ காரியங்களை, இக்கட்டான சூழலில் வெற்றியுடன் முடித்திருப்பீர்கள்:
"இரவு முழுவதும் விழித்திருக்க முடியாது" என்போம். ஆனால், நண்பன் நோயுற்றிருந்த நிலையில், இரண்டு இரவுகள் தொடர்ந்து விழித்திருக்கிறோம்.
"ஒரு வேளை கூடப் பசியைப் பொறுக்க முடியாது" என்போம். ஆனால், திடீரென ஏற்பட்ட பேருந்து வேலை நிறுத்தத்தினால் (Strike), பசியோடு வெகுதூரம் வீட்டிற்கு நடந்தே வந்திருக்கிறோம்.
எப்படி இவை சாத்தியமானது?
"முடியாது என்பது எதுவுமே கிடையாது" என்பதே உண்மை. இந்த உண்மையை நீங்களே பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருப்பீர்கள். எனவே, நம்மால் எதையும் சாதிக்க முடியும்!