
நாம் சுறுசுறுப்பாக எல்லாவற்றிலும் செயல்படுவதற்கு மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இது மிக முக்கியமான ஒன்று இதற்கு சில பழக்க வழக்கங்களை நாம் கடைபிடித்தாலே போதும் மிக சுலபமாக நம் மூளையை சுறுசுறுப்பாக்கி விடலாம் அதற்கான எட்டு விஷயங்கள்தான் இப்பதிவில்.
1-மூச்சுப்பயிற்சி
மூளை மற்றும் உடல் சுறுசுறுப்பாகத் திகழ, மூச்சுப்பயிற்சி அவசியம். நுரையீரல் நன்கு விரிந்து, சுருங்கி, நுரையீரலின் காற்றுப் பைகளில் நிறைய ஆக்சிஜன் நிறைய வேண்டும். இதனால், உடல் முழுவதும் எடுத்துச் செல்லப்படும் ஆக்சிஜன் நிரம்பிய காற்று உடல் உறுப்புகளுக்கு புத்துணர்வை வழங்குகின்றன.
2-தியானம்
தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடமாவது தியானத்தில் ஈடுபடுவது அவசியம். நம் வீட்டிலேயே, நாம் புழங்கும் இடங்களிலேயே அமைதியாக, ஒரே குறிக்கோளில் இருப்பதுதான் தியானம். அல்லது எதுவுமே பரபரப்பாக செய்யாமல் அமைதியாக இருப்பதும் தியானத்தின் ஒரு அங்கம்தான். மனதைக் கட்டுப்படுத்துவதுதான் தியானம். தியானத்திலேயே பல வகைகள் உள்ளன. அதில் தேர்ந்தவர்களிடம் கற்று அறிந்து கொண்டு னமும் காலை, மாலை நேரங்களில் 10 நிமிடம் தியானம் செய்தால்கூட நாள் முழுவதும் உடலும், உள்ளமும் சிறப்பாக செயல்படும்.
3-அமரும் நிலை
தரையில் அமரும்போது அல்லது இருக்கைகளில் அமரும்போது நேராக அமர்வது முக்கியமாக பின்பற்ற வேண்டிய ஒன்று. முதுகெலும்பு நேராக இருந்தால்தான் மூளையின் செயல்திறன் நன்றாக இருக்கிறது. அதனால்தான் பள்ளிகளில் படிக்கும்போது, ஆசிரியர்கள் நேராக உட்கார் என்று கண்டிக்கின்றனர். எந்தவித மன மற்றும் உடற்பயிற்சிகளின்போதும் முதலில் கூறப்படும் அறிவுரை, நேராக உட்கார்வது என்பதுதான். நேராக உட்காரும்போது முதுகெலும்பு அழுத்தப்படாமல் மூளைக்குச் செல்லும் நரம்புகள் வழியாக ரத்த ஓட்டம், மூளைக்கு தேவையான ரசாயனங்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.
4-நல்ல சிந்தனை
நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது, மூளையை சுறுசுறுப்பாக்கும் பயிற்சிகளில் முக்கியமானது. மூளைக்குள் தேவையற்ற தகவல்களை போட்டு அடைப்பதைத் தவிர்த்து நல்ல விஷயங்களை மட்டும் அனுப்பி வையுங்கள். அங்கிருந்து கிடைக்கும் பதில்கள் வியக்கத்தக்கவகையில் அருமையாக அமையும். தன்னம்பிக்கை ஏற்படுத்தும் அம்சங்களில் ஈடுபடுவது, சிக்கலான பிரச்சினைகளுக்கு சீரிய முடிவெடுப்பது போன்ற பயிற்சிகளை மூளைக்கு கொடுத்து வந்தால் மூளை எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும்.
5-வீணாகும் நேரத்தை பயன்படுத்துவது
பயணங்களின்போது, யாருக்காவது, எதற்காகவாவது காத்திருக்கும்போது கிடைக்கும் நேரத்தை சும்மா கழித்தால். மூளைச் சோர்வு ஏற்படும். அந்த நேரங்களில் பயனுள்ள வழிகளில் மூளையை செயல்படுத்தினால் சுறுசுறுப்பாகிவிடும். குறிப்பாக அந்த நேரங்களில் குறுக்கெழுத்துப் போட்டிகள், மொபைல் கேம்ஸ், க்யூப் போன்ற எளிய பயிற்சிகளைச் செய்தால் மூளை சுறுசுறுப்படையும்.
6-புதிய மொழி
முதுமை உங்களை நெருங்குகிறது என்று உணர்கிறீர்களா? புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளத் துவங்குங்கள். அது உங்களை சிறுபிராயத்துக்கு அழைத்துச்செல்லும், குழந்தையாக மாறி விடுவீர்கள்.
7-முகருங்கள்
ரொம்ப சோர்வாக உணர்கிறீர்களா? எலுமிச்சம் பழம், புதினா இலை, மலர்களின் மணம் போன்றவற்றில் உங்களுக்குப் பிடித்த எதையாவது முகர்ந்து பாருங்கள். மூளை உடனே சுறுசுறுப் படையும். மரிக்கொழுந்து, மல்லிகை, ஓமச்செடி போன்றவையும் உங்களை சுறுசுறுப்பாக்கும் மூலிகைகள்.
8-எழுதுங்கள்
மனதில் தோன்றும் விஷயங்களை அப்படியே முழுமையாக எழுதாவிட்டாலும் குறிப்பெடுத்து வையுங்கள். இதற்காக ஒரு நோட்டை தயார் செய்து வைத்துக்கொண்டு, அந்த நோட்டை எப்போதும் அருகில் வைத்துக்கொண்டு மனதில் தோன்றும் விஷயங்களை குறித்துவையுங்கள்.