
மனிதனின் மனம் ஒரு நிலை இல்லாத தன்மை உடையது. அதைச் செய்யலாமா? இதைச் செய்யலாமா என அலைபாயும், சட்டென ஒரு முடிவுக்கும் வந்துவிடாது.
உலகில் பலதரப்பட்ட தொழில்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. அவரவர் திறமை, வசதிக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து, தொழில் செய்து வருகின்றனர்.
அனைத்துத் தொழிலுமே இலாபம் தரக்கூடியதுதான். ஒன்றுக்கொன்று எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு என்பதே இல்லை.
செய்கின்ற முறையில்தான் அதன் சிறப்பும் அமையும். அவர் செய்து வெற்றிபெறுகின்றாரா என அனைவரும் அந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
இறுதி முடிவு எடுத்து ஒரு தொழிலில் இறங்கிவிட்டால் அதைச் செவ்வனே செய்யவேண்டும். அதைச் செய்துகொண்டு இருக்கும்போதே வேறு தொழில் செய்திருக்கலாமோ என சிந்திக்கக் கூடாது.
எடுத்த தொழில் எதுவாயினும் சிறப்பாகச் செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறலாம். நாம் அனைவரும் நம் தொழிலில் வெற்றிபெறலாம். அதை முறையாக ஒழுங்கு படுத்திச் செய்தால்போதும்.
அலைபாயும் மனதுடன் போராடி, பல தொழில்கள் செய்யவும் ஆசைப்படலாம். பின் எந்தத் தொழிலிலும் முழுக்கவனம் செலுத்த முடியாமலும் போய்விடும். அதனால் நிலையான வெற்றிவாய்ப்பையும் இழந்து விடக்கூடும். எனவே, உருப்படியாக ஒரு தொழிலில் முழுக்கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைவதே நல்லது.
நீங்கள் சரியாகச் சிந்தித்து நல்ல முடிவு எடுங்கள், பின்னர் செயலில் இறங்குங்கள். மேலும் அதில் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். தொழிலில் என்றாலும் சரி. படிப்பு என்றாலும் சரி, மற்ற கலைத்துறையிலும் சரி .நமது ஈடுபாடு ஒரே கவனத்துடன் இருக்கவேண்டும்.
மற்றவர்கள் அதைச் செய்கிறார்களே நாமும் செய்தால் என்ன, என்று ஆசைப்படவேண்டாம். ஏனென்றால் நம்மால் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும்தான் செய்யவேண்டும்.
வசதி உள்ளவர் பெரும் பணம் படைத்தவர் அதிக மூலதனம் போட்டு பெரிய தொழில் நடத்துகிறார் அவருக்கு வசதி உள்ளது. அவரால் செய்ய முடிகிறது அவரது தொழிலில் ஏதும் நட்டம் வந்தாலும், அதைச் சமாளித்து எழுந்துவிடுவார். வசதி இல்லாத ஒருவர் அவரைப்போல் தொழில் நடத்த விரும்பினார். இருப்பினும் தேவைக்குப் பொருளாதாரம் இல்லை.
ஆசை யாரைவிட்டது. அலைபாயும் மனது அவரையும் அலைக்கழித்து ஆட்டியது.
அவரைச் சார்ந்தவர்களிடம் தன் ஆசையை வெளியிட்டார். அவர்களும், உன் ஆசை நல்ல ஆசைதான். ஆனால் உங்கள் தகுதிக்கு இது பேராசையாக அல்லவா இருக்கிறது" என்றனர்.
"ஏன் அவர் செய்யும்போது, நான் செய்யக்கூடாது அத்தொழிலை எப்படியும் செய்தே தீருவேன்" என் பிடிவாதமாக இருந்தார்.
தகுதிக்கு மீறிய கடனை வாங்கித் தொழிலில் இறங்கினார். நல்ல அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரால் அத்தொழிலில் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் வருத்தப்பட்டு என்ன செய்வது. வருமுன் - காப்பதே மிகவும் நல்லது.
மனம் கண்டபடி அலைபாயக்கூடாது. யார் யாருக்கு தொழில் கைவரக்கூடுமோ அதை மட்டும் செய்யுங்கள் பொழுதுதான் முழுமையான வெற்றியை எட்டமுடியும்.
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை செய்தவனும் கெட்டான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.