
நல்ல செயல்களை யார் செய்தாலும் மனதாரப் பாராட்டுங்கள். எந்தத் துறையானாலும். அதில் ஈடுபட்டவர்கள் சாதனை செய்கிறார்களா?. அவர்களைப் பாராட்டுங்கள். உங்களின் பாராட்டுக்கள் அவர்களை மேலும் சாதனை செய்ய ஊக்குவிக்கும். அவர்களின் சாதனை முயற்சிக்கு நம் பாராட்டுதல் ஊக்குவிப்பாக இருக்கும்.
அரசியலிலும் கூட பேதம் பார்க்காதீர்கள். நல்ல செயல்கள் செய்பவரைப் பாரட்டுவது நமது கடமை ஆகும். அதற்காகப் பெரிதாய் ஒன்றும் செலவு செய்து விடப்போவதில்லை. வெறும் வாய் வார்த்தை மட்டுமே போதும். அதனால் நமக்கு என்ன குறைந்து விடப்போகிறது. எந்த வெற்றியாளருக்கும் கோடிப் பணம் கொட்டிக் கொடுப்பதைவிட, அவரைப் பாராட்டி முதுகில் தட்டிக்கொடுப்பதே பெரிய செயலாகும்.
எத்தனையோ கலைஞர்கள். தங்களின் திறமையைக் கண்டு ரசித்து, ரசிகர்கள் கை தட்டினாலே போதும் என்பார்கள். அந்த அளவிற்கு இரசிகர்களின் பாராட்டுதலில் கலைஞர்கள் மயக்கம் கொண்டுள்ளனர். கலைஞர்கள் மட்டும் என்றில்லை, நம் வீட்டில் சிறிய நிகழ்வுகளுக்குக்கூட, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வோமே. இச்செயல்களால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும்.
சில வித்தியாசமான ஜென்மங்களும் பிறந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் யாரையுமே பாராட்டி இருக்க மாட்டார்கள் .அவர்களுக்குள் ரசனை இல்லாமல் ஒன்றுமில்லை. அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது இவனைப் போய்ப் பாரட்ட வேண்டுமா? என்ற எண்ணம் மட்டுமே காரணமாகும். இப்படிப்பட்டவர்களை எந்நாளும் திருத்தவே முடியாது.
எனவே. நாம் அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.நம்மைப் பொறுத்தவரை, உலகில் யார் நல்ல செயலைச் செய்தாலும் மனதாரப் பாராட்டி விடுவோம். அப்பொழுதுதான் நம் மனித உணர்வு உயர்வடையும்.
சிறு பிள்ளைகள் செய்யும் தவறினைச் சுட்டிக் காட்டுங்கள். அதே சமயம், சிறுவர்கள் செய்யும் சிறு செயலையும் தட்டிக்கொடுத்துப் பாராட்டத் தவறாதீர்கள். அப்பொழுதுதான் அந்தப் பாராட்டுதலை ஊக்குவிப்பாக எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள்.
வீட்டில் சிறிய பிள்ளைகள் படம் என்று எதையாவது கிறுக்கி வைத்து உங்களிடம் காட்டுவார்கள். இது என்ன எனக்கேட்டால், படம் என்பார்கள். அவர்களிடம் உள்ள ஓவியம் வரையும் ஆர்வத்தை அவசியம் பாராட்ட வேண்டும்.
அடடா. இது என்னடா! ரொம்ப அழகா வரைந்திருக்கிறாய். இன்னும் நன்றாகப் போட்டுப் பழகு" என்றுதான் கூறவேண்டும். அதைப் போல் அவர்களை நாளும் பொழுதும், குறை கூறிக்கொண்டும் இருக்கக் கூடாது. இப்படி தொடர்ந்து குறையை மட்டுமே கூறுபவர்களை, இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு அவர்கள் வெறுத்துவிடும் வாய்ப்பும் உள்ளது. அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாம்தான் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
உன்னால் முடியாது. நீயெல்லாம் எங்கே உருப்படப் போகிறாய் என்று பைத்தியக்காரத்தனமாய்ப் பேசக்கூடாது. ஏனென்றால் இப்படியெல்லாம் பேசப் படுபவர்கள் அப்படி பாதிக்கப்பட்டு விடுவார்கள்.
பிறரைப் பாராட்டிப் பேசுவதினால் யாருக்கும். எந்த வகையிலும் குறைந்து விடப்போவதில்லை. அப்படி இருந்தும் ஒரு சிலர் தங்களை மாற்றிக்கொள்ள விரும்புவதுமில்லை. பிறரைப் பாராட்டும்போது அவர்களும் மகிழ்கிறார்கள். அந்த மகிழ்ச்சியுடன். இவருக்கு நன்றி கலந்த புன்னகையைத் திருப்பிக் தருகிறார்கள்.
மனசே இல்லாமல், வாழ்த்துபவர்கள் மகிழ்ச்சியின் ஆழத்தை என்றுமே உணரமுடியாது. எப்பொழுதும் பாராட்டுக்குரியவரை மனதாரப் பாராட்டி வாழ்த்தி மகிழ்ச்சியின் ஆழத்தை உணர்த்தி அனுபவிக்களாமே!
நல்ல ஆக்கப்பூர்வமான பணியைத் தொடர்ந்து செய்வதற்கு, நம் பாராட்டுகளோடு கை தட்டல்களும் மிகவும் இன்றியமையாதது ஆகும்.