திரைப்படக் கதாநாயகர்கள் ரோல் மாடல்களா?

Cinema
Cinema
Published on

எல்லா மனிதர்களுமே பணம், விளம்பரம் மற்றும் புகழுக்காக ஆசைப்படுபவர்களே! திரைப்பட நடிகர்கள் சிலர், ஒரே திரைப்படத்தின் மூலமாகவே இவை மூன்றையும் எளிதாக அடைந்து விடுகிறார்கள்! ஒரு திரைப்படத்தில் முகங் காட்டுவதற்குள்ளாக, அவர்களில் பலர் சொல்லவொண்ணா சிரமங்களையும் அடைந்து விடுகிறார்கள்! சிலருக்கோ, இந்த வாய்ப்பு எளிதாகவே கிடைத்து விடுவதும் உண்டு! சிலர், வளர்பிறைச் சந்திரன் போல் வளர்ந்து, முழுநிலவாக ஜொலிப்பதும், மற்ற சிலர் தேய்பிறையாகி, காலப்போக்கில் ஒளியிழந்ததும் உண்டு! இவை அனைத்துமே ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழக்கூடியவையே!                 

முன்பெல்லாம், நாடகத்துறையில் பழுத்த அனுபவம் பெற்றவர்களே, திரைத் துறையில் நுழைய முடியும்! நல்ல உடல்வாகு, வசீகர முகம், சிறந்த குரல்வளம், சரியான உச்சரிப்பு, இசை ஞானம் போன்ற தகுதிகள் உள்ளவர்களே நிலைத்து நிற்க முடியும்! பல கதாநாயகர்கள் தங்கள் பாடும் திறனால் கொடி கட்டிப் பறந்தார்கள்! தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம்! அதன்பிறகு நிலமை மெல்ல மாறியது! பாடுவதற்குப் பின்னணிப் பாடகர்கள் வந்தார்கள்! நன்றாக வசனம் பேசத் தெரிந்தால் போதுமென்ற நிலை வந்தது! சிவாஜி கணேசன், எஸ். எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., போன்றவர்கள் காலமது! கதாநாயகன், கல்லூரி மாணவனோ அல்லது கனிந்த கிழவரோ, எல்லா வேடத்திலும் இவர்கள்தான்!

விஞ்ஞானம் முன்னேற முன்னேற அதன் பயன்களை சினிமாக்காரர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள்! 'பாட வேண்டாம்! வசனம் பேச வேண்டாம்! எல்லாவற்றையும் பின்னணி பார்த்துக் கொள்ளும்!' என்ற நிலை வந்தது! ரஜனி, கமல், மோகன், இன்ன பிற நடிகர்களெல்லாம் இந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள்தான்!       

உண்மையில் ஒரு திரைப்படத்தின் மூளையாகச் செயல்படுபவர் அதன் இயக்குநர்தான்! அவர்தான் ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்குகிறார்! அவர்தான் உண்மைக்  கதாநாயகர்! எந்தப் பாத்திரம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு கதையைக் கொண்டு செல்ல வேண்டும், எங்கெங்கு பாடல்களைச்சேர்க்க வேண்டும், எப்படிப் படத்தை முடிக்க வேண்டும் என்ற அனைத்தையும் தீர்மானிப்பது அவர்தான்! எந்தக் கதாபாத்திரத்திற்கு எந்த நடிகர் பொருத்தமானவர் என்பதையும் அவர்தான் முடிவு செய்கிறார்!                   

சில கதாநாயகர்கள் தங்களது அதீதத் திறமையால், அவர்கள் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவது உண்டு! உதாரணமாக, நடிகர் திலகத்தைக் குறிப்பிடலாம்! சில சுதந்திரப்  போராட்ட வீரர்களையும், கடவுளர்கள் சிலரையும் நம் கண்முன்னே காட்டியவர் அவர்! ஓ! அவர்களெல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று நம்மை எண்ண வைத்தவர்!                     

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் மிகப் பிரபலம்! மேலும், தனது படங்களில் அவர் எப்பொழுமே குடிகாரராகவோ, புகை பிடிப்பவராகவோ, பெண் பித்தராகவோ நடித்ததுகூட இல்லை! பெண்கள்தான் விழுந்து விழுந்து அவரைக் காதலிப்பார்கள்! கனவு காண்பார்கள்! அவரிடம் இயற்கையாகவே ஈகைக் குணம் நிறைந்திருந்தது! அதுதான், பிற்காலத்தில் நாட்டை ஆளும் பொறுப்பை அவருக்குக் கொடுத்தது!         

ஒவ்வொரு சாதாரண மனிதனின் மனத்துள்ளும், நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணமும், அநீதியை வேரறுக்க வேண்டுமென்ற ஆங்காரமும் நிலை கொண்டிருக்கிறது! அதனை யாரோ ஒருவர் திரையில் செய்யும்போது, அதனைப் பார்க்கின்ற அவர்கள், அந்தக் கதாநாயகன் பால் ஈர்க்கப்படுகிறார்கள் ! 

இதையும் படியுங்கள்:
நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் பெறும் 10 நடிகைகள்!
Cinema

கதாநாயகர்கள், இயக்குநரின் கைப்பாவைகள் என்பதையோ, அவர்கள் வெறும் நிழல்கள்தான் என்பதையோ, எல்லாம் நடிப்புதான் என்பதையோ திரைப்பட ரசிகர்கள் மறந்தே போய் விடுகிறார்கள்! திரைப் படங்கள் பொழுது போக்குச் சாதனம் மட்டுமல்ல என்பது உண்மைதான் என்றாலும், அதன் நிழல் நாயகர்கள், நிஜ வாழ்க்கையில் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி ரசிகர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை!                     

பல நல்ல நடிகர்கள் எதிர்பாராமல் இறந்து போகக் காரணமாக இருப்பது அவர்களின், அளவுக்கு மீறிய மதுப் பழக்கமே! அதோடு மட்டுமல்லாது, மாதுக்கள் விஷயத்திலும் பெரும்பாலானவர்கள் வீக்னஸ் உள்ளவர்களே! மிகச் சில விதிவிலக்குகள் உண்டு!               

ஒருவரை ரோல் மாடலாகக் கொள்ள வேண்டுமானால், அவர் நல்லவராகவும், வல்லவராகவும், நல்ல குறிக்கோளை அடைய உறுதியான உழைப்பை நல்குபவராகவும், சமுதாயத்தால் விலக்கப்பட்டவற்றை விலக்கி வாழ்பவராகவும் இருக்க வேண்டும்! கள்ளங்கபடமற்ற அவர்களின் வாழ்க்கையே, மற்றவர்களால் போற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்! இவற்றை அளவுகோலாகக் கொண்டு பார்த்தோமானால், நமது தமிழ் திரைப்படக் கதாநாயகர்களில் எத்தனை பேர் தேறுவார்கள் என்பதை சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு ரசிகனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!                                       

ஜப்பான் போன்ற நாடுகளில், சாலைகளில் திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்தால், நின்று கூடப் பார்க்க மக்கள் தயாராக இல்லை! 'நடிப்பது அவர்கள் தொழில்! நாங்கள் எங்கள் தொழிலைப் பார்க்கிறோம்! விடுமுறை நாட்களில் திரைப்படம் பார்த்தால் போகிறது!' என்று சாதாரணமாகச் சொல்கிறார்கள்!

இதையும் படியுங்கள்:
வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்தாதீர்கள்!
Cinema

நம் நாட்டில், பணி நேரத்தில் ஓரிடத்தில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறதென்றால் பள்ளி, கல்லூரி, ஏன்? அரசு அலுவலகங்களில்கூட அட்டெண்டன்ஸ் குறைந்து போகிறது! அந்த அளவுக்கு சினிமா மோகம் நம்மை ஆட் கொண்டிருக்கிறது!                                         

ரோல் மாடலாகக் கொள்ள எத்தனையோ தலைவர்கள் இருந்தார்கள்! காந்தி, உண்மையே தெய்வமென்று சொல்லி, அதனை மதித்து வாழ்ந்து காட்டினார்! விவேகானந்தரும், அப்துல் கலாமும், சமுதாயம் விதித்த நெறி தவறாது வாழ்ந்து உலகை உய்வித்தார்கள்! இளைஞர்கள், தகுதியுள்ளவர்களை ரோல் மாடலாகக் கொள்ள வேண்டும்! நிஜங்களே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்! நிழல்களல்ல!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com