நடிகர்களின் சம்பளத்திற்கு இணையாக நடிகைகளின் சம்பளம் சமீபகாலமாக பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகும் படங்கள், கதாநாயகர்களுக்கு இணையாக வசூலை அள்ளுவதால் சம்பளத்தை நடிகைகள் உயர்த்தி கேட்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி கூடுதல் சம்பளம் வாங்கும் 10 நடிகைகள் விவரம்:-
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்படும் நயன்தாரா முதல் இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளர். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடிவரை கேட்கிறார். தற்போது ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’, ‘தனி ஒருவன்-2’, ‘மூக்குத்தி அம்மன்-2’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திரிஷா ஏற்கனவே ரூ.4 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தியுள்ளார். இவர் தற்போது கமல்ஹாசனுடன் ‘தக்லைப்’, அஜித்குமாருடன் ‘விடா முயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
35 வயதான தமன்னா தனது சம்பளத்தை ரூ.4 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார். குத்துப்பாடலில் ஆடவும் பல கோடி கேட்கிறாராம். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா...’ குத்துப்பாடலுக்கு ஆட ரூ.3 கோடி வாங்கியதாக தகவல். அதேபோல் ஸ்த்ரீ2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.1 கோடி ரூபாய் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
மிஷ்கின் இயக்கத்தில், ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டேயின் சம்பளம் ரூ.4 கோடியாக உயர்ந்துள்ளது. இவர் விஜய்யின் 69-வது படத்திலும், சூர்யாவின் 44-வது படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இவர், 2010-ம் ஆண்டு "மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா" போட்டியில் 2-ம் பிடித்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
சமந்தா தனது சம்பளத்தை ரூ.4 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இவர் தற்போது ‘சிட்டாடல் ஹனிபன்னி’ வெப் தொடரில் நடித்து முடித்துள்ள நிலையில், மேலும் 2 இந்தி படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். புஷ்பா படத்தில் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்காக சமந்தா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
சாய் பல்லவி ‘அமரன்’ வெற்றிக்கு பிறகு சம்பளத்தை ரூ.3 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக உயர்த்தி உள்ளாராம். தற்போது ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார். மேலும் ஒரு தெலுங்கு படம், இரண்டு இந்தி படங்கள் கைவசம் உள்ளன.
கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிறார். தற்போது ‘ரிவால்டர் ரீட்டா’, ‘கன்னிவெடி’, இந்தியில் ‘பேபி ஜான்’ ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இவரது பேபி ஜான் படம் வரும் 25-ம்தேதி வெளியாகிறது.
ராஷ்மிகா மந்தனா தன் சம்பளத்தை ரூ.4 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி உள்ளார். ‘புஷ்பா’ படத்துக்கு பிறகு ராஷ்மிகாவின் மார்க்கெட் எகிறியுள்ள நிலையில், அவர் நடித்த ‘புஷ்பா’ 2-ம் பாகம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இவர் தனுசின் ‘குபேரா’ படத்திலும் நடிக்கிறார்.
ரகுல் பிரீத் சிங் ஏற்கனவே ரூ.3 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் இப்போது ரூ.4 கோடி கேட்கிறாராம். ''கதாநாயகர்களோடு ஒப்பிடும்போது கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள்" என்று இவர் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
‘கே.ஜி.எப்.’ படம் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி, தமிழில் விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் நடித்து இருந்தார். இவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி கேட்கிறார். தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார்.