
பேசும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்தாமல் இருப்பது நல்லது. சொற்கள் இலவசம்தான். ஆனால் நாம் இழக்கும் அன்பு விலை மதிப்பில்லாதது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இருப்பது என்பது மிகச்சிறந்தது. பிறறின் மனதை புண்படுத்தும் சொற்களை உபயோகப் படுத்தாமல் இருப்பது நல்லது. உடல் காயங்கள் ஆறிவிடும் ஆனால் மனக்காயங்கள் அவ்வளவு எளிதில் ஆறாது. "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" வள்ளுவரின் குறளே இதற்குச் சான்று.
மற்றவர்களுக்கு உடலாலோ மனத்தாலோ தீங்கிழைக்காமல், கடும் சொற்களை உபயோகிக்காமல்் இருப்பது சிறந்தது. ஆனால் ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம் சம்மதம் இல்லாமல் யாராலும் நம்மை காயப்படுத்த முடியாது. நம்மை காயப்படுத்த நினைப்பவர்களின் சொற்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது நம் கையில்தான் உள்ளது. ஒருவர் நம்மை காயப்படுத்த விரும்பவில்லை என்று கூறிக்கொண்டு ஏதேனும் சொல்ல ஆரம்பித்தால் அதற்கான அர்த்தம் வலிக்கு தயாராகுங்கள் என்றும், நம்மை அவர் காயப்படுத்தப்போகிறார் என்றும் கொள்ளலாம்.
சிலர் நம்முடைய இயலாமையை சுட்டிக்காட்டுவதும், நம் உருவத்தை வைத்து கேலி செய்வதும், நம்மை சிறுமைப்படுத்தி பார்ப்பதும், மதிப்பு குறைவாகப் பேசுவதும், ஏளனம் செய்வதும் என இருப்பார்கள். அப்படி
ஒருவர் நம்மை காயப்படுத்தும்போது அவர் முகத்தைப் பார்த்து "என்ன சார் நான் உங்களை எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். இப்படி செய்து விட்டீர்களே! என்று கூறினால் போதும். அவர்கள் தங்கள் தவறை உணர வாய்ப்பளிக்கும்! அப்படியும் சிலர் நம்மை காயப்படுத்தி பார்த்தால் அவர்களை விட்டு அமைதியாக விலகி வந்து விடுவது நல்லது.
நம்மை யாராவது காயப்படுத்தும்போது அந்த சூழலில் இருந்து விலகி அமைதியாக எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்துவிடுவது நம் மனத்தை காயப்படுத்தாமல் இருக்க உதவும். அதை விடுத்து விளக்கம் கூற முயற்சித்தால் மேலும் காயப்பட்டு போவோம்.
யாருமே 100% பெர்பெக்ட்டாக இருக்க முடியாது. ஒரு சிலர் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கடுமையாக நடந்து கொள்ளும்பொழுது அது நம்மை காயப்படுத்திவிடும். அதை அவர்களிடம் உடனடியாக சுட்டிக்காட்டாமல் தகுந்த நேரம் பார்த்து பக்குவமாக நீ செய்தது தவறு இப்படி செய்திருக்க வேண்டாம், உன் பேச்சால் அவர் மனம் எவ்வளவு பாடுபட்டு இருக்கும் என்று கூறினால் அடுத்தமுறை வார்த்தைகளால் காயப்படுத்த யோசிப்பார்கள்.
வேறு சிலரோ யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் இவர்களைத்தான் சிலர் அதிகமாக காயப்படுத்துவார்கள். காரணம் மனிதர்களுக்கு இயல்பாகவே ஆனந்தமாக இருக்கத் தெரிவதில்லை. அடுத்தவர் கஷ்டமே இவர்களின் சந்தோஷம் என்று எண்ணுவதால் பிறரை காயப்படுத்தி பார்க்கிறார்கள்.
இனியாவது நாம் பிறரை காயப்படுத்தாமல் கவனமாய் இருக்கப் பழகுவோம். யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று எண்ணுபவர்கள் அமைதியான சூழ்நிலையையும், மனநிலையையும் விரும்புவார்கள். மற்றவர்களைப் பற்றி சிந்தித்து ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். பிறரின் நிலையிலிருந்து யோசித்து செயல்படுவார்கள்
இனியாவது வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்தாமல் இருக்க முயலுவோம்!