
மனித வாழ்வானது பல்வேறு நிலைகளைக் கடந்து, வாழ்ந்தாக வேண்டிய சூழல். அத்தகைய சம்பவம் ஒவ்வொருமனிதனுக்கும் ஏற்படத்தான் செய்கின்றன. நமது சொல்லும், செயலும், சரிவர அமையவேண்டும். அவசரகதியில் உலகம் உழல்கிறது. அத்தகைய நேரத்தில் நமது விடாமுயற்சியும், நிதானமும், நமக்கு சரியான பாதையைக்காட்டும். காட்டிய பாதை கரடு முரடாக இருந்தால் நாம்தான் பக்குவமாக செயல்படவேண்டும்.
அதோடு நமது உள்ளமும் சிந்தனையும் தூய்மையாக இருப்பது நல்லது. சிலரிடம் தூய்மையான சிந்தனை அறவே இருக்காது.
பொதுவாக உடலில் சிறியதாய் நோய் அறிகுறி ஏற்பட்டால் முதலில் கை வைத்தியம் பாா்ப்பதும், அதில் சரிவராத நிலையில் மருத்துவரை நாடி சிகிச்சை மேற்கொண்டு நிவர்த்தி செய்து கொள்வதும், நடைமுறை. சரி உடலுக்கு ஆரோக்கியம் தேவைதான்.
வைத்தியம் செய்து நோயிலிருந்து நம்மை காப்பாற்றிவிட்டோம்.
அதே நேரம் மனதில் ஏற்படும் நோய்களுக்கு எந்த வகையான மருந்து, அல்லது தீா்வு மேற்கொள்ளப்பட்டது?
அதற்கு யாா் மருத்துவர், யாா் சரியான முறையில் சிகிச்சை செய்வாா், அதை ஏன் நாம் சிந்திப்பது இல்லை, அது எதனால் வருகிறது!
அதை நம்மோடே தக்கவைத்துக்கொள்ளலாமா, வேண்டாமா, அதிலிருந்து விடுபடலாமா, வேண்டாமா இத்தனை கேள்விகளுக்கும் தீா்வு உண்டே!.
ஆம் மருத்தவரே இல்லை. நமக்கு நாமேதான் மருத்துவர். குறிப்பாக மனதில் ஏற்படும் நோயானது நோ்மை கடைபிடிக்காதது. அடுத்தவரைக்கண்டு பொறாமைப்படுவது. அடுத்தவரிடம், உறவாடிக் கெடுப்பது. நல்ல காாியங்கள் செய்யாதது. மனசாட்சிக்கு மதிப்பளிக்காதது. வாழ்ந்து கெட்டவனைப்பாா்த்து ஏளனம் செய்வது.
பகைவரிடம் நட்பு பாராட்டுவது. எளியோரை எள்ளி நகையாடுவது. இப்படிப்பட்ட விஷயங்கள்போல இன்னும் பட்டியல் நீளும். அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவை அனைத்திற்கும் தீா்வு நம்மிடமே உள்ளது இதற்கென தனி மருத்துவரே வேண்டாம். நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொண்டால், நல்ல வழியைக் கடைபிடித்தால், எதையும் சீா்தூக்கிப்பாா்க்கும்.
மனப்பக்குவத்தை வளா்த்து வந்தாலே போதும். நமது தவறை நாம் உணர்ந்தாலே பாதி நோய்க்கு தீா்வு கிடைத்துவிடும். விசாலமான மனதே நல்ல பல காாியங்களுக்கு வழிகாட்டியாகும். இறைவழிபாடு மற்றும், மனிதநேயம் கடைபிடிப்பது தர்மநெறிமுறைகளை கடைபிடிப்பது, சத்தியம் தவறாதது, உண்மைபேசுவது, இப்படிப்பட்ட நல்ல குணங்கள் எனும் மருந்து மாத்திரைகளை நேரம் தவறாமல் சாப்பிடும் குறிக்கோள்.
அந்த நிலையை கடைபிடித்தாலே அனைத்தும் நல்லதாகவே நடக்கும். இதற்கு யாா்துணையும் தேவையில்லை நமக்கு நாமே நீதிபதி.
நல்ல சிந்தனையே நமக்கு சிறந்த வழிகாட்டியாகும். அது இல்லாத நிலையில் எதிாிகளே நம்மை வழிநடத்தும் நிலைதான் வரும். அதேபோல திட்டமிடாத வாழ்க்கையும் தோல்வியில்தான் முடியும்.
பொதுவாகவே உடலில் வரும் நோய்களை சரிசெய்ய மருத்துவரை நாட திட்டமிடுதல் போல நல்ல குணங்களுடன் வாழ நல்ல பண்பாடுகளோடு கூடிய சீாிய சிந்தனையே நல்ல மருத்துவராகும். இதற்கு செலவேதும் கிடையாது. அந்த சமயத்தில் நமக்கு நாமே மருத்துவர். தூய்மையான தெய்வ சிந்தனையோடு நாம் நமக்காக வாழ்வதே சிறப்பானதாகும். அதுவே நல்ல நடைமுறையாகும்!