
இலக்குகளை நோக்கி செயல்படும்போது அதில் சில தவறுகளும் தடுமாற்றங்களும் நேரலாம். அதனால் மனம் குழம்பி, ‘போதும் இதற்கு மேல் இந்த செயலைச் செய்யவேண்டாம் என நினைத்து முயற்சியைக் கைவிடுவது கூடாது. எதனால் இந்தத் தவறுகள் நேர்ந்தன. வேறு வழியில் எப்படி இலக்குகளை அடைய முயற்சி செய்யலாம் என்பது குறித்த 8 பயனுள்ள ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை விட்டு விடுதல்;
‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது?’ என்று நடந்த நிகழ்வுகள் குறித்து வேதனைப்படுவதிலும் புலம்புவதிலும் அர்த்தமில்லை. அவை உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. எத்தனையோ நல்ல சிறப்பான நிகழ்வுகள் வாழ்வில் நடந்துள்ளன எனவே எதிர்மறையான விஷயங்களில் இருந்து தன்னை தூரமாக நிறுத்திக்கொள்ள பழகவேண்டும். தனக்கு கெடுதல் செய்தவர்கள், நேர்ந்த அவமானங்கள், தோல்விகள் இவற்றை மறந்து விட்டு செயல்பாட்டைத் தொடரவேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைக் குறித்து கவலை கொள்ளத்தேவையில்லை.
2. யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுதல்;
வாழ்க்கையில் சிலவற்றை இழக்க நேரிடலாம். அதே சமயம் அதைவிட அதிகமாக பெறவும் நேரிடும். துன்பங்களை கண்டு கவலை கொள்ளத் தேவையில்லை. அவற்றுக்கு நாம் எப்படி ரியாக் செய்கிறோம் என்பது முக்கியம். துன்பத்தை அடுத்து இன்பம் வந்துகொண்டே இருக்கிறது என்கிற மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது நம் கையில்தான் உள்ளது .
3. மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுதல்;
எதிர்மறை விஷயங்கள் வாழ்வில் நேரும்போது அது குறித்த நமது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். நேர்மறைக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவரை அறியாத தெரியாத புதிய விஷயங்களை அறிந்துகொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டுமென்றால் மாற்றம் என்பது இன்றியமையாதது. எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பழகுவது அவசியம்.
4. நல்லவற்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுதல்;
சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கும் மனம் தளர்ந்து போனால் மனம் முழுக்க இருட்டு மட்டும்தான் நிறைந்திருக்கும். தவறான பாதையை தேர்ந்தெடுக்க வைக்கும். எனவே தன்னிடமுள்ள நல்ல இயல்புகளைக் கொண்டு அவற்றைக் கடக்கவேண்டும் . அவை ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
5. தோல்வியில் வலிமை;
செய்யும் முயற்சிகளில் தோல்வி ஏற்படலாம். ஒருவர் தன்னுடைய முயற்சிகளில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தும் தோல்வியைத் தழுவியிருப்பார். அதை எண்ணிக் குழம்பவோ கலங்கவோ வேண்டாம். என்ன செய்யக் கூடாது என்பதை இப்போது தெரிந்துகொண்டு மீண்டும் முயற்சி செய்யலாம்.
6. பயத்தை வெல்லுதல்;
சிலருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் செயலில் இறங்கும்போது சரியாக வருமா என்று அதைப் பற்றிய அச்சம் ஆட்டிப்படைக்கும்.கற்பனையான அச்சங்கள் உண்மையான நடைமுறை நிகழ்வுகளைவிட பெரிதானவை. எனவே பயத்தை ஒதுக்கிவிட்டு வாய்ப்புகளை பயன்படுத்தி செயலில் இறங்கும்போது தன்னாலே தைரியம்வரும்.
7. தொடர்ந்து செயல்படுதல்;
ஒரு மனிதர் மலையின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறார் என்றால் அவர் எடுத்த எடுப்பில் அந்த இடத்துக்கு சென்று விடவில்லை. கீழே இருந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பல மணி நேரங்கள் நடந்த பின்பு தான் உச்சியை அடைந்திருக்கிறார். அதுபோல இலக்கை அடைய தினம் தினம் செயல்பட வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும்.
8. போராட்டங்கள் படிக்கற்களே
முயற்சியில் சிக்கல்களும் போராட்டங்களும் ஏற்படலாம். அவை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் படிக்கற்கள் ஆகும். அவற்றிலிருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பது மிக முக்கியம். சிந்தித்துப் பார்த்தால் சென்ற வருடத்தை விட இந்த வருடம் நன்றாக இருக்கிறோம், முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறோம் என்கிற உண்மை தெரியவரும்.