
அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் பெரும்பாலும் வாழ்கிறோம். இந்த எண்ணம் பொதுவாகவே நம் சமூகத்தில் காணக்கூடிய ஒரு மனநிலையாகும். பிறர் நம்மை எப்படி பார்க்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலை கொள்வது இயல்பானதுதான்.
ஆனால், அது அளவுக்கு அதிகமாக போனால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அதிகமாக சிந்திப்பதைவிட நம்மை நாமே நேசித்து கொள்ளவும், மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். பிறரைப் பற்றி அதிகம் யோசிப்பதை விட மனதை நேர்மறையாக வைத்திருக்கப் பழகினால் நம்மால் சமூகத்தில் இயல்பாக கலந்திருக்க முடியும்.
தனி மனிதனாக எங்கோ ஒரு மூலையில் இருந்தோமென்றால் இதைப் பற்றிய சிந்தனை இருக்காது. ஆனால் சமூகத்தில் குடும்பம் என்ற கட்டமைப்புடன் வாழ்வதால் நம்மை பற்றி பிறர் என்ன எண்ணுவார்களோ என்று கட்டாயம் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருப்போம்.
ஆனால் உண்மையில் இது தேவையற்றதே. ஒரு குடும்பத்தில் நாம் நமக்காக வாழும்பொழுது எதைப்பற்றியும் அதிகம் கவலைப்பட வேண்டாம். அவர்கள் என்ன நினைப்பார்கள், இவர்கள் என்ன சொல்வார்கள் என்று அதிகம் கவலைப்படுவதை விட நம்மையும் நம் திறமைகளையும் நம்பி வாழப் பழகவேண்டும்.
அடுத்தவர்களின் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் பொழுது கவலையைத் தவிர வேறு ஒன்றும் மிஞ்சாது. மற்றவர்கள் நாம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் குற்றம் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அதை மாற்ற நினைப்பது முட்டாள் தனம் என்று எண்ணி ஒதுக்கிவிடுவதுதான் நல்லது.
நாம் நமக்காக, நம் சந்தோஷத்திற்காக வாழலாம். இது சுயநலம் என்று அர்த்தமில்லை. நாம் நமக்காக வாழ்வது என்பது நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன்படும் வகையில் வாழ்வதாகும். இதன் மூலம் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். ஊருக்காக பால் குடித்தால் எத்தனை நாட்கள்தான் குடிக்க முடியும். அதுவும் இன்று இருக்கும் சூழ்நிலையில் அவரவர் களுடைய வேலையைப் பார்க்கவே நேரம் கிடைப்பதில்லை. அவரவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லை என்கிற பொழுது நம்மைப் பற்றி யாரும் நினைப்பதில்லை என்பதுதான் உண்மை. அப்படி நினைத்தாலும் அது நம்மை பாதிக்காது என்ற மனநிலையில்தான் இருக்க வேண்டும்.
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள், சொந்தங்கள் என்ன நினைக்கும், எதிர் வீட்டுக்காரர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசித்து யோசித்தே பல செயல்களை செய்யாமல் இருப்பதும், அடுத்தவர்களின் கேலி பேச்சுக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தின் காரணமாகவும் நாம் எண்ணுவதை செய்யாமல் விட்டு விடுவோம்.
இது தவறான செயல். மற்றவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் நாம் விரும்பியதை விரும்பியவாறு செய்ய தன்னம்பிக்கை ரொம்பவும் முக்கியம். அதுதான் நம்மை வெற்றிக்கு அருகில் கொண்டு நிறுத்தும்.
அடுத்தவர்களுக்காக வாழ நினைத்து நம் வாழ்வை கெடுத்துக் கொள்வது வீணான செயல். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா! நமக்காக வாழ்வதுதான் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும்.