உறவுகள் மேம்பட புரிதல் அவசியம்! அதுவே வாழ்க்கையின் வெற்றி ரகசியம்!

உறவுகள் மேம்பட நம் கண்ணோட்டத்தில் மற்றவரை புரிந்துகொள்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லது ஏற்கமறுக்கிறோம் என்ற தெளிவு பெற்றால் உறவும், வாழ்க்கையும் மேம்படும்.
understanding
understanding
Published on

உறவு என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, பழகித் தெரிந்துகொள்வது, இணங்கி செயல்படுவது, பகிர்ந்து இன்புறுவது, குறை நிறைகளுடன் ஏற்றுக்கொள்வது என்று பல கூறுகள் கொண்டதாகும்.

முதலாவதும் முக்கியமானதும் புரிந்து கொள்வது. ஒருவரது இயல்புகள் நடத்தைகளின் மூலம் வெளிப்படும். நடத்தைகளும் சூழல்களின் மாறுபாட்டுக்கு உட்பட்டது. ஒருவர் இயல்பிலேயே இரக்கம் கொண்டவர் என்று எடுத்துக்கொள்வோம். எப்போதும், எல்லாவற்றுக்கும் இறங்கி கொடை வள்ளலாய் இருக்க முடியாது. சில சூழல்களில் சற்று இரக்கம் காட்டி செயல்படும் தருணங்களும் வரும். சூழல் தான் காரணம், அவர் தன் இயல்பை மீறவில்லை என்பதற்கு, நமக்கு அவரது இயல்பும், அந்த சூழலும் புரிதல் வேண்டும்.

எதனையும் நாம் நம் கண்ணோட்டத்தில் தான் அணுகுவோம். நாம் புரிந்து கொள்வதும் நம் அபிப்பிராயம் சார்ந்தே இருக்கும். ஏன் ஒருவர் அந்த சூழலில் இரக்கம் காட்டவில்லை என்பது பற்றி நமக்கு ஒரு சிந்தனை இருக்கும்.

அது நம்மைப் பொறுத்தவரை சரியானதகக்கூட இருக்கும். ஆனால் எப்போதும் உண்மையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இதையும் படியுங்கள்:
உண்மையான அன்பை வெளிப்படுத்தினால் உறவுகள் மலரும்!
understanding

உதாரணமாக, நான் அன்றாடம் ஐந்து முதல் பத்து யாசிப்பவரைக் கடக்கும் போதும் யாருக்கும் பிச்சையிடுவதே இல்லை. காரணம் இரக்கம் இல்லாததால் இல்லை. பிச்சையினை தொழிலாக உற்சாகப்படுத்தக் கூடாது என்பதற்காக. சில சமயங்களில் பணமாகக் கொடுப்பதற்குப் பதில் உணவாக, பொருளாக வாங்கிக் கொடுத்தும் இருக்கிறேன். அவை நான் நகர்ந்தவுடன் காசாக மாற்றப்பட்டதையும் பார்த்திருக்கிறேன். என் இறக்கம் விலைபேசப் பட்டதாக அந்த தருணங்களில் உணர்ந்தேன்.

என்னுடன் பயணிக்கும் நண்பரோ உறவினரோ எனது இந்த பிச்சையிடாத பிடிவாதத்தைத் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. என்னிடம் பேசி நான் ஏன் இப்படிச் செய்கிறேன் என்று தெரிந்துகொண்டால், என் அனுபவ புரிதல் மற்றும் கோட்பாட்டை விளங்கிக்கொள்ள முடியும்.

அப்படி கேட்பவருக்கு மாற்றுக் கருத்தும் நான் செய்வது தவறு என்ற அபிப்பிராயமும் இருக்கக் கூடும். அத்தருணத்தில் அவர் விளக்கினால் நான் தெளிவு பெற்றால் என் பிடிவாதமும் தளரக்கூடும். இப்படிப்பட்ட செயல்பாடே உறவுகளை மேம்படுத்தும்.

இந்த பரிமாற்றம் நிகழாத போது, எனது பழக்கம் என்னிடமும், என்னைப் பற்றிய அவரது அபிப்பிராயம் அவரிடமும் தங்கி உண்மை புரிதலை தவிர்த்துவிடும்.

சூழலுக்கு தகுந்த நமது செயல்பாடும் நமக்கு வாழ்க்கை என்ன கற்றுக்கொடுத்திருக்கிறதோ அதை ஒட்டியே அமையும்.

பார்பவரின் பழகுபவரின் வாழ்க்கை படிப்பினை வேறாக இருக்கலாம். அப்போது இரு வேறு கோணங்களில் ஒரு செயல்பாடு அணுகப்படுகிறது. எனவே இருவேறு அபிப்பிராயமும், அதனால் ஏற்படும் பேதமும் நிகழ்வது தானே இயல்பு. அவரது படிப்பினை மூலம் நம் செயல்பாடை எடை போடுவது, முடிவுக்கு வருவது என்பது விரிசலுக்கு வழி வகுக்கும். நாம் பெரும்பாலும் இதனை தான் செய்கிறோம்.

இராவணனைக் கூட சீதையை அபகரித்து சென்ற அரக்கன் என்று புரிந்துகொண்டு வில்லன் ஆக்கலாம். வீணையில் பாண்டித்தியம் பெற்ற கடும் தவம் இருந்து சிவனிடம் வரம் பெற்ற சிவபக்தன். சீதையை பற்றி கேள்வி படும்வரை மண்டோதரியை தவிர வேறு மாதரை நினைக்காதவன். தம்பிகள், பிள்ளைகள் மற்றும் குடிமக்கள் மீது மிகுந்த பாசமும் அக்கறையும் கொண்டவன் என்ற நோக்கில் அணுகினால் அவனும் கதாநாயகன் தானே.

இராமனும் வாலி வதத்திலும், சீதையை தீக்குளிக்க சொன்னபோதும், கர்ப்பிணியாய் இருந்த காதல் மனைவியை, போர் புரிந்து மீட்ட பத்தினியை விலகி வாழ்ந்த போதும் விமர்சனத்துக்கு உட்படுகிறான் தானே.

கண்ணோட்டமும், அபிப்பிராயமும் தானே மனிதர்களை புரிந்து கொள்ள உதவுகிறது. அதுவும் நமது பார்வையில், அனுபவத்தில், முதிர்ச்சியில் பெற்றது தான்.

இதையும் படியுங்கள்:
அதிர்ஷ்டம் என்பது இதுதான்: வாழ்க்கையை செதுக்கும் 5 உறவுகள்!
understanding

உறவுகள் மேம்பட நம் கண்ணோட்டத்தில் மற்றவரை புரிந்துகொள்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லது ஏற்கமறுக்கிறோம் என்ற தெளிவு பெற்றால் உறவும், வாழ்க்கையும் மேம்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com