
பணி செய்யும் இடத்தில், மேலதிகாரிகள், உடன் பணிபுரியும் சக ஊழியர்கள், கீழே பணிபுரியும் நபர்கள் என எல்லோருடனும் நல்லுறவு இல்லாமல் போனால், நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. இங்கு ஏற்படும் மனஉளைச்சல், வீட்டிலும் மன அழுத்தம் அதிகம் ஆகும். உங்கள் உயர் அதிகாரிகளிடம் மரியாதை, சக ஊழியர்களிடம் மதிப்பு கீழே பணிபுரியும் மற்றவர்களிடம் நம்பிக்கை என எல்லாம் பெற நீங்கள் என்ன செய்யலாம்? செய்யவேண்டும்?
அன்பாய் சொல்லுங்கள்
அடுத்தவர்கள், வேலையில் தவறு செய்யலாம் அல்லது ஒருவரின் நடவடிக்கையே அலுவலகத்தில் இயல்பை குலைப்பதாக இருக்கலாம். அதை சுட்டிக்காட்டுமிடத்தில் நீங்கள் இருந்தாலும், பலர் முன்னிலையில் கடிந்து பேசாதீர்கள். அது அவரின் சுயமரியாதையை நொறுங்கச் செய்துவிடும். சரியாக செய்ய கற்றுக்கொடுங்கள். அவர் செய்த தவறுகளை கண்டிப்பு கலந்த அன்போடு புரியும் படி சொல்லுங்கள்.
உண்மையைக் கண்டறியுங்கள்
பெறும்பாலான அலுவலக உறவுகள் சீர்குலைந்து போவது தவறான யூகங்களால்தான். ஒரு தோல்விக்கு ஒரு கான்ட்ராக்ட் கிடைக்காமல் போனதற்கு, ஒரு வியாபாரத்தில் நஷ்டம் வந்ததற்கு அலுவலக ரகசியம் ஒன்று கசிந்ததற்கு, இவர்தான் காரணம் என ஆதாரம் இல்லாமல் யாரையும் சுட்டிக்காட்டவோ, தண்டிக்கவோ செய்யாதீர்கள். திறந்த மனதோடு பேசும் உண்மையை கண்டறிங்கள். உண்மையில்லாத எந்த விஷயத்தையும் அடுத்தவர்களிடம் பேசாதீர்கள்.
அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்
உங்களுக்கு சம்பந்தமில்லாத வெற்றிக்கு நீங்கள் உரிமை கொண்டாடாதீர்கள். உங்களால் நிகழ்ந்த ஒரு பிரச்னைக்கு, அடுத்தவர்கள் மீது பழிபோட்டு தப்பிக்கவும் செய்யாதீர்கள். தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்தமுறை அதை சரி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்.
ஒதுங்கி இருங்கள்
எல்லா இடங்களிலும் யாராவது ஓரிருவர் பிரச்னை செய்பவர்களாகவோ, அடுத்தவர்களிடம் வீண் வம்புக்கு போகிறவர்களாகவோ, இருப்பார்கள். இதுதான் துணிச்சல் என அவர்களாகவே தங்களைப்பற்றி பெருமையாக நினைத்து கொள்வார்கள். அப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து ஒதுங்கி இருங்கள். நீங்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணமாக அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
உழைப்பை பாராட்டுங்கள்
கடினமாக உழைப்பது மட்டுமே முக்கியம் இல்லை ஒரு அலுவலகம் அல்லது தொழில் நிறுவனம் என்பது பலரின் கூட்டு முயற்ச்சி தேவைப்படும் இடம். அடுத்தவர்களோடு நன்கு பேசி உறவாடுவது மட்டுமே கூட்டு முயற்சியை சாத்தியமாக்கும். அடுத்தவர்களுடன் பேசி உழைப்பையும் பாராட்டுங்கள். அதுவே உங்களை அவர்களோடு நெருக்கமாக்கும்.
கருத்தைச் சொல்லுங்கள்
இன்னொருவர் பேசும்போது குறுக்கிடாதீர்கள். அதற்காக மௌனமாகவும் இருக்காதீர்கள். ஆமாம், சரி, என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி அவர்களை பேசதூண்டுங்கள். அவர்கள் பேசி முடித்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள் பேசுவது மட்டும் அல்ல கேட்பதும் கவனிப்பதும் கூட தகவல் தொடர்பில் முக்கியமானவை.
தட்டிக்கொடுங்கள்
யாரைப் பற்றியும் பின்னால் பேசாதீர்கள். அடுத்தவர்களின் முதுகுக்குப் பின்னால் நீங்கள் செய்ய வேண்டியது அவர்களை தட்டி கொடுப்பது மட்டுமே! வீண் வம்பு பேசாதவர் என பெயர் எடுங்கள். எல்லோரும் நன்றியோடு உங்களிடம் பழகுவார்கள்.
அலுவலகம் முன்னேறும் போது நீங்களும் முன்னேற்றம் பெற போகிறீர்கள். இதைச் சக ஊழியர்களுடன் பேசி அவர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
சுக துக்கங்களில் பங்கெடுங்கள்
ஆபீஸ் பழக்கம் ஆபிஸோடு மட்டும்தான் என்று கறாராகக் கத்திரித்து கொள்ளாதீர்கள். அலுவலக நண்பர்களின் சுக துக்கங்களில் பங்கெடுங்கள். நெருங்கிய உறவுகளை விட இவர்களே உங்கள் வாழ்க்கையில் நிரம்பி இருக்கிறார்கள். தினம் நீங்கள் அவர்களோடுதான் இருக்கிறீர்கள், என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சுக துக்கங்களில் உங்களோடு இருக்கப் போவதும் அவர்களே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இதனால் வாரம் முழுக்க நாம் பெரும்பாலான நேரத்தை செலவிடுவது பணி செய்யும் அலுவலகம் அல்லது தொழில் செய்யும் நிறுவனத்தில்தான் சொல்லப்போனால் சிலர் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பாலும் பகுதியை செலவிடுவது இங்குதான்! அலுவலகத்தில் அலுவலக உறவுகளோடு அன்பால் இணைந்து பணியாற்றினால் அலுவலக உறவில் மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியோடு இருக்கலாம்.