
முயற்சியை ஒருமுறை கூட கைவிடக் கூடாது. முடிந்தவரை செய்வதல்ல முயற்சி. வாழ்வில் எடுத்த அந்த காரியம் முடியும் வரை செய்வதே முயற்சி. பெரிய காரியத்தில் ஈடுபடும்போது இந்த உலகம் இது வீண் முயற்சி என்று கூறும். அதுவே நாம் அதில் வெற்றி பெற்றால் விடாமுயற்சி என்று பாராட்டும். இதுதான் உலகம். "முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஒரு குழந்தை தவழ்வதில் இருந்து தன்னுடைய பிறவியின் இலக்கை அடையும்வரை அனைத்து காரியங்களிலும் முயற்சி என்ற மூலதனம் தேவை. வியர்வை சிந்தாமல், மெய்வருந்தி முயற்சிக்காமல் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறாது. முயற்சியே வெற்றிக்கு மூலதனம்.
"முடியும் என்றால் முயற்சி செய். முடியாது என்றால் பயிற்சி செய்" அப்துல் கலாம் அவர்களின் வார்த்தை இது. நமக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நமது செயலில் முயற்சி இருந்தால் தோல்வி நம்மிடம் வந்து சேராது. நாம் எடுக்கும் முயற்சியில் வெற்றிபெற வேண்டுமானால் முதலில் நம் நோக்கம் மிகச் சரியானதாக இருப்பது அவசியம்.
அத்துடன் எடுக்கும் முயற்சியும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அதாவது இடைவெளி விடாமல் தொடர்ந்து முயலவேண்டும். எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். விடாமுயற்சி மட்டும் இருந்துவிட்டால் நம்மால் பல சாதனைகளை நிகழ்த்த முடியும்.
இலக்கினை சரியாக கணித்துவிட்டு எடுக்கும் முயற்சியால் எளிதாக வெற்றியை அடைய முடியும். உயர உயர குதித்து தன்னால் திராட்சை பழத்தை எடுக்க முடியவில்லை என்று தான் மேற்கொண்ட முயற்சியை கைவிட்டு "சீச்சீ இந்த பழம் புளிக்கும்" என்று பாதியில் கைவிடுவது முயற்சி அல்ல. சிறு குடுவையில் உள்ள நீரைப் பருக முடியவில்லை என்றதும் முயற்சியினால் கற்களை குடுவையில் போட்டு நீரை மேலேறச் செய்து பருகிய காக்கையின் வெற்றிதான் முயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஒருவன் கடலில் குதித்து முத்து இல்லை என்று எடுக்காமல் வந்தால் கடலில் முத்துக்கள் இல்லை என்ற அர்த்தமில்லை. அவன் எடுத்த முயற்சி போதவில்லை என்பதுதான் அர்த்தம்.
எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். விடாமுயற்சிதான் வெற்றி தரும். அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து தான் முன்னேற்றம் ஏற்படும். சிறப்பான வாழ்க்கை வாழ ஒரு சரியான இலக்கை உருவாக்கி அத்துடன் அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். சில சமயங்களில் சறுக்கல்களும், பின்னடைவுகளும், தோல்விகளும் ஏற்படும். அதைக் கண்டு துவண்டு போகாமல் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய இலக்கை அடைந்து விடலாம்.
"விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம்" கியூபாவின் புரட்சியாளர் சேகுவேராவின் பொன்மொழி. விமர்சனங்களைக் கண்டு நம் முயற்சியை கைவிட்டால் வாழ்வில் வெற்றி பெற முடியாது. கடின உழைப்பும், முயற்சியும் நம்மை இந்த உலகில் சாதனை படைக்கச் செய்யும்.
"எனது முயற்சிகள் என்னை கைவிட்டதுண்டு. ஆனால் நான் முயற்சியை ஒரு போதும் கைவிடவில்லை" என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.
முயற்சிகள் தவறலாம். ஆனால் நாம் முயற்சி செய்ய தவறக் கூடாது! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.