
டென்ஷன், கவலை, நாள் முழுவதும் ஓட்டம் என்று இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை பலருக்கும் மன அழுத்தம் தருவதாக இருக்கிறது. ஒவ்வொருவரின் மனதிலும் inner child எனப்படும் குழந்தைத்தனம் இருக்கும். அதை தினமும் சிறிது நேரமாவது வெளியே கொண்டு வந்தால் வாழ்க்கை முறை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இலகுவாகவும் மாறும். அதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குழந்தைப் பருவத்தைப் பற்றி சிந்தித்தல்:
உங்களை ஒரு குழந்தையாக கற்பனை செய்து பாருங்கள். சிறுவயதில் உங்களுக்குப் பிடித்த பொம்மைகள் இடங்கள், செயல்பாடுகள் போன்றவற்றை நினைவு படுத்த பழைய புகைப்படங்களைப் பார்க்கவும். அந்த நேரத்தில் எந்த மாதிரியான விஷயங்கள் மகிழ்ச்சியைத் தந்தது மற்றும் வலியை ஏற்படுத்தியது என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். குழந்தைக் கண்ணோட்டத்தில் இருந்து உங்களது மனதிற்கு அன்பும் ஆதரவும் தரக்கூடிய வகையில் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
சுய இரக்கம்:
பாதிப்பு அல்லது சுய சந்தேகம் போன்ற தருணங்களில் உங்களை நீங்களே கருணையுடனும் புரிதலுடன் நடத்த வேண்டும். ஒரு குழந்தையாக உங்களுக்கு தேவையான கவனிப்பையும் ஊக்கத்தையும் வழங்குவதன் மூலம் சுய இரக்கத்தை தர முயற்சி செய்ய வேண்டும்.
விளையாட்டுத்தனமான செயல்பாடுகள்:
சிறு வயதில் விரும்பி செய்த செயல்களான நடனமாடுதல், விளையாடுதல், ஓவியம் வரைதல் அல்லது இயற்கையில் நேரத்தை செலவிடுதல் போன்றவற்றை மீண்டும் கண்டுபிடித்து மீண்டும் அவற்றை செய்யுங்கள். இந்த செயல்பாடுகள் படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சியைத் தூண்டும்.
காட்சிப்படுத்துதல்:
மனதில் உள்ளிருக்கும் குழந்தைக்கு அன்பு, கருணை போன்றவற்றை செலுத்த தியானத்தை பயிற்சி செய்ய வேண்டும். இப்போதுள்ள வயது வந்த உங்களுக்கும் குழந்தை பருவத்தில் நீங்கள் இருந்த அந்த பருவத்திற்கும் இடையில் ஆன தொடர்பை ஆழப்படுத்த தியானம் உதவுகிறது. பாதுகாப்பான மனநிலையில் உங்களை நீங்களே சிறுவயதில் இருந்தது போல் காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும்.
ஆசைகள் பூர்த்தியடைதல்:
குழந்தை பருவத்தில் பூர்த்தி செய்யப்படாத ஆசைகள், தேவைகள் போன்றவற்றை நினைத்துப் பார்த்து அவை பூர்த்தி அடைந்தது போல கற்பனை செய்ய வேண்டும். இவை குழந்தை பருவத்தின் காயங்களில் இருந்து விடுபட உதவும்.
குழந்தைத் தன்மையை தட்டி எழுப்புவதால் உண்டாகும் நன்மைகள்:
காயங்களை குணப்படுத்துதல்:
குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட தீர்க்கப்படாத அதிர்ச்சி, புறக்கணிப்பு, உணர்ச்சி, வலிகள் போன்றவற்றை நிவர்த்தி செய்ய, மனதில் இருந்து வெளிக் கொண்டுவரும் குழந்தைத்தன்மை உதவுகிறது.
பழைய காயங்களில் இருந்து மீண்டு வந்து மகிழ்ச்சியாக வாழ முடியும். கடந்த கால அனுபவங்களுக்கும் தற்போதைய உணர்ச்சிகரமான எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்வது சிறந்த உணர்ச்சி சமநிலையை ஊக்குவிக்கும்.
அதிகரிக்கும் சுயமரியாதை:
மனதின் உள் குழந்தையை அரவணைப்பது குழந்தை பருவத்தில் உருவான தாழ்வு மனப்பான்மை, அச்சம், பாதுகாப்பின்மை போன்ற எதிர்மறை உணர்வுகளை வெல்ல உதவும். இதனால் சுயமதிப்பும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆரோக்கியமான உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும்.
சிறப்பான செயல்பாடு:
உன் குழந்தைத் தன்மையுடன் இணைவது, படைப்பாற்றல், அதிகரித்த ஆற்றல், சிறப்பான செயல்பாடு போன்ற அதிசயங்களை மீண்டும் தூண்டுகிறது. இதனால் வாழ்க்கையை மீண்டும் மேலும் துடிப்பானதாகவும் நிறைவானதாகவும் உணர வைக்கும்.
பலப்படுத்தப்பட்ட உறவுகள்:
இணைப்புக் காயங்களை குணப்படுத்துவது தனிநபர்கள் மற்றவர்களுடன் ஆழமான அதிக நம்பகமான தொடர்புகளை உருவாக்க உதவுகிறது. பச்சாதாபத்தை வளர்க்கிறது. தகவல் தொடர்புகளை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க உதவுகிறது.
குழந்தை பருவத்தில் பெறாத அன்பையும் அங்கீகாரத்தையும் தங்களுக்கு தாங்களே வழங்கிக் கொள்ள முடியும். தன்னுடன் ஒரு கனிவான உறவை உருவாக்க முடியும். ஒட்டுமொத்த உணர்ச்சி நல்வாழ்வை அதிகரிக்க முடியும்.