
தற்போதைய காலக்கட்டத்தில் பெற்றோர்களைவிட குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக இருப்பது அனைவரும் அறிந்ததுதான். அன்று பருவவயதை தாண்டியும் போனை தொடாதவர்கள் பலர். இன்று இரண்டு வயது குழந்தை ஸ்மார்ட் போன்களில் விளையாடுகிறது. வளரும் குழந்தைகள் தொழில் நுட்பத்தை எளிதில் கையாள்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையைவிட அதிக அறிவை பெற்றுள்ளது.
பொதுவாக குழந்தைகளின் கேள்விக்கு பெற்றோர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. காரணம் பெற்றோர்களுக்கு அதற்கான பதில் தெரிவது இல்லை. குழந்தைகள் இன்றைய தொழில்நுட்பம் பற்றி அறிந்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு அதில் சந்தேகம் வந்தால், தாயிடம்தான் முதலில் கேட்பார்கள். குழந்தைகள் தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளைக் கேட்டால் பதறாதீர்கள், அதற்கு விடையளிக்க பாருங்கள்.
இது ஆல்பா தலைமுறையினரின் காலம். இந்த காலத்தில் AI தொழில்நுட்பம், ஸ்மார்ட் சாதனங்கள், ஆன்லைன் கற்றல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்தியில் குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். இந்தத் தலைமுறை தொழில்நுட்பத்தை எளிதில் கற்றுக் கொள்கிறார்கள். பல்வேறு கேஜெட்களையும் ஆப்களையும் பயன்படுத்துவதில் அவர்களின் பெற்றோரைவிட திறமை உள்ளவர்களாக உள்ளனர்.
அடுத்து வரும் தலைமுறையினர் இதை விட இன்னும் அதிக தொழில் நுட்பத்தை கையாளுவார்கள். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காலமாக உள்ளது. அதை அதிகம் தாய்மார்கள் தெரிந்து வைத்திருந்தால்தான் குழந்தைகளுக்கு அது பற்றி போதிக்க முடியும்.
இப்போதைய தலைமுறையினர் பிறந்ததிலிருந்தே ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் பிற கேஜெட்களை பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்களின் சந்தேகம் அதைச் சுற்றியே வரும். அதனால் தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளைக் கேட்பார்கள்.
அதற்கான பதில் உங்களிடம் இருந்து கிடைக்காவிட்டால், அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். பதில் தெரியாததால் நீங்களும் வருத்தப்படுவீர்கள். அதனால் நீங்கள் தொழில்நுட்பத்தை அறிந்துக் கொள்வது அவசியம் .
நீங்கள் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள கவலைப்பட தேவையில்லை. அது பற்றிய பல தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. தெளிவான சந்தேகங்களுக்கு யூ ட்யூப் தளம் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் இவற்றை இங்கிருந்து கற்றுக்கொள்கிறீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்வதில் தவறில்லை.
ஆனால் , அவர்களை அங்கு நேரடியாக அறிந்துக்கொள்ள சொல்வதுதான் தவறு. எதையும் நீங்கள் தெளிவாகக் கற்றுக்கொண்டு அவர்களுக்கு விளக்குவதுதான் சரியாக இருக்கும். அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் மீதான மதிப்பு உயரும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாற இது ஒரு வாய்ப்பு.
தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தாயாக மாறுவதன் மூலம், உங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுவது மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்தின் தீய விளைவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும். அதனால் தொழில் நுட்பத் துறையை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்பது முக்கியம்.
உங்கள் குழந்தைகளுக்கு ஆசிரியராக நீங்கள் இருப்பது அவசியம். இது அவர்களுடனான உங்கள் உறவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் பல முக்கியமான திறன்களையும் கற்றுக்கொள்வார்கள்.
நீங்கள் புதிதாக கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும்போது, குழந்தைகளும் உங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு, குழந்தைகளின் மனநிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.
இதற்கு உங்களுக்கு தொழில் நுட்ப அறிவு அவசியம். இதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ,நீங்கள் சாதாரண தாயாக இல்லாமல் சூப்பர் மாம் ஆக இருங்கள்.