வாழ்வில் நாம் விரும்பியதை அடைய வேண்டுமென்றால், முதலில் நாம் செய்ய வேண்டியது அமைதியாக இருப்பதுதான். சப்தமில்லாமல் செயல்படுவதன் மூலமே, எண்ணற்ற இடையூறுகளையும், பிறரின் எதிர்மறை கருத்துக்களையும் தகர்த்தெறிய முடியும். குறிக்கோள் நிறைவேறும் வரை மௌனம் காப்பது எப்படி வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை பார்ப்போம்.
முதலில், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் திட்டமிடுங்கள். தெளிவான இலக்குகளை வரிசைப்படுத்துங்கள். அந்த இலக்குகளை மாத, வார, தினசரி என சிறிய பகுதிகளாக பிரித்து, ஒவ்வொன்றையும் தவறாமல் பின்பற்றுங்கள். இப்படி படிப்படியாக முன்னேறினால், வெற்றிக்கனி விரைவில் உங்கள் வசமாகும்.
உங்கள் கனவுகளை மற்றவர்களிடம் சொல்வதை விட, ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள். சிறிய வெற்றி, தோல்வி என எல்லாவற்றையும் எழுதுங்கள். தோல்விகளை சரி செய்யவும், வெற்றிகளை மேம்படுத்தவும் அது உதவும். உங்கள் செயல்களே பதிலளிக்கட்டும்.
"இதைச் செய்வேன், அதைச் செய்வேன்" என்று ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் அமைதியாகச் செய்யுங்கள். உடல் எடையை குறைக்க நினைத்தால், யாரிடமும் சொல்ல வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்ற பிறகு, உங்கள் செயல் அனைத்தையும் பேசும்.
உங்கள் இலக்குகள், வெற்றிகளை எல்லோரிடமும் பகிராதீர்கள். குறிப்பாக, உங்களை குறை சொல்பவர்கள், உங்களை மட்டம் தட்ட நினைப்பவர்களிடம் எதுவும் சொல்லாதீர்கள். தேவையானதை மட்டும் பேசிவிட்டு, மற்றவற்றை வெற்றிக்குப் பிறகு பேசலாம்.
உங்களைப் போலவே சிந்திக்கும் நபர்களுடன் பழகுங்கள். வெற்றி என்பது பல நேரங்களில் கூட்டு முயற்சியாக இருக்கும். சரியான நபர்களுடன் இருக்கும்போது, உங்களுக்குள் ஒழுக்கம் தானாகவே பிறக்கும்.
பிறர் உங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கனவு, லட்சியம் பற்றி பிறரிடம் கூறும்போது, அவர்கள் பாராட்டலாம் அல்லது இகழலாம். பாராட்டினால், இன்னும் வெற்றி பெறாத நிலையிலேயே கர்வம் வந்துவிடும். எனவே, பிறர் அங்கீகாரம் தருவதை நினைக்காமல், உங்கள் முயற்சியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்களே உங்களுக்கு ஊக்கமும் உறுதியும் கொடுங்கள்.
வெற்றி, தோல்வி எது வந்தாலும் ஒழுக்கத்துடன் இருங்கள். பெரிய வெற்றி வந்தாலும், தோல்வி ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு சுய ஒழுக்கத்துடன் இருப்பது நல்லது. அப்போதுதான் உங்கள் முயற்சிக்கு சரியான பலன் கிடைக்கும்.
நீங்கள் வெற்றி பெற்றால் அதுவே உங்களைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிடும். இறுதியில் நீங்கள் இலக்கை அடையும்போது, உங்கள் அமைதியான சாதனை அனைவரையும் வியக்க வைக்கும். "இவ்வளவு அமைதியாக இருந்து இவ்வளவு பெரிய சாதனையா?" என்று எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். எனவே, எல்லா நேரங்களிலும் மௌனம் சாதித்து, சாதனை படைத்து காட்டுங்கள்!