
வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு துடுப்பாக உதவுவது இலக்கு எனும் இலட்சியம். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டால் மட்டுமே எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறமுடியும். எத்தனை தடைகள் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் நம்முடைய இலக்கை அடைவதே வெற்றி எனும் ஒரே நோக்கில் செயல்பட வேண்டும்.
நம்முடைய நோக்கம் கவனம் இரண்டும் அந்த இலக்கில் உறுதியாக மிகவும் உறுதியாக வைரம் போன்ற உடைக்க முடியாத உறுதியாக இருக்க வேண்டும். இறுதிவரை விடாமுயற்சியுடன் இருந்து இலக்கை அடைவதுதான் குறிப்பிடத்தக்க இலக்கு.
அந்த இலக்கு என்பது எப்படி இருக்கவேண்டும் தெரியுமா? கார் ரேஸ் பற்றிய தகவல்களில் ஃபார்முலா 1 என்கிற கார் பந்தயம்தான் மிகப்பெரிய ரேஸ். உலகத்திலேயே மிகவும் ஆபத்து நிறைந்த விளையாட்டுகளில் ஒன்று மோட்டார் ஸ்போர்ட்ஸ்.
பல வீரர்கள் இந்த கார் ரேஸில் தங்கள் உயிரையே விட்டிருக்கிறார்கள். ஆனாலும் வெற்றி பெறவேண்டும் என்கிற மனப்பான்மையின் காரணமாக தங்கள் உயிர் பற்றி கூட கவலைப்படாமல் பல சாதனையாளர்கள் வெற்றிகரமான மனிதர்களாக விளங்குகிறார்கள்.
அதில் கொள்பவர்களுக்கு ஒரு முக்கியமான பயிற்சி தருவார்களாம். அதாவது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் ரேஸ் கார் போகும் போது எங்காவது ஓரிடத்தில் ஆக்சிடென்ட் நடந்தாலும் அது வேகமாக போய் ஒரு சுவரில் மோதி நிற்கும்படிதான் இருக்கும். இது மிகவும் ஆபத்தான ஒன்று. பயிற்சியின்போது அந்த ட்ராக்கில் ஒரு விபத்து ஏற்படுவது போன்ற ஒரு உருவத்தை பயிற்சி கொடுப்பவர்கள் ஏற்படுத்துவார்களாம். உடனே 350 கிலோமீட்டர் ஸ்பீடில் செல்லும் கார் டிராக் மாறி சாய்வாக போகும்.
பயிற்சியாளர் உங்க கார் இப்படி ஆக்சிடென்ட் ஆகி தாறுமாறா ஓடும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? என்று கேட்கும்போது ஓட்டுநர்கள் பக்கத்தில் உள்ள சுவரில் போய் இடித்து விடக்கூடாது என்றுதான் தோன்றும் என்பார்களாம். உடனே பயிற்சியாளர் "அதைப்பற்றி மட்டும் யோசிக்காதே" என்பாராம்.
காரணம் சுவரைப் பற்றி யோசிக்கும் போதும் சுவரில் போய் கார் மோதி விடக்கூடாது என்று நினைக்கும் போதும் கார் இயல்பாகவே சுவரை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கும். ஏனெனில் அவரின் இலக்கு இப்போது சுவர் மீது உள்ளது. ஆனால் சுவரில் மோதக்கூடாது என்பது ரேஸ்காரரின் இலக்கு அல்ல. தன்னுடைய டிராக்கில் சரியாக பயணித்து போட்டியில் வெல்லவேண்டும் என்பதுதான் இலக்கு.
அதனால் நோக்கம் என்பது டிராக் மீது இருக்க வேண்டும். சுவர் மீது இருக்கக்கூடாது. ரோட்டின் மீதும் டிராக்கின் மீதும்தான் இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் கற்றுத் தருவார்.
இப்படித்தான் இருக்கவேண்டும் நமது இலக்கும். வெற்றிப் பாதையில் பயணிக்கும்போது சேரவேண்டிய இலக்கு மட்டுமே கவனத்தில் இருக்கவேண்டுமே தவிர, வழியில் ஏற்படும் இடர்களில் அல்ல என்பதில் உறுதியாக இருந்தால் வெற்றி நிச்சயம்.