
எந்த ஒன்றையும் தொடங்கிவிடுவது என்பது ஒரு உத்வேகத்தில், உற்சாகத்தில் நடந்து விடும். சிலவற்றைத் தொடங்கவேண்டும் என்று வெகுகாலம் ஆசைப்பட்டு சந்தர்ப்பம் அமையும் போது தொடங்கிவிடுவோம். அந்த தொடங்கிய காரியத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்வது தான் தொடங்கியதின் பயனைத் தரும். தொடர்வதே சவால்!
சிறுவயதில் பலவற்றைப் பயிற்சி எடுக்கத் தொடங்குவோம். பாட்டு, விளையாட்டு, மொழி என்று பலவற்றைக் கற்கப் பயிற்சி பெற முயன்று இருப்போம். இவற்றில் எவ்வளவு விஷயங்களில் தொடங்கிய சில நாட்களில், வாரங்களில், மாதங்களில் பயிற்சியை நிறுத்தி இருக்கிறோம். நம்மில் பலருக்கும் காலம் கடந்து யோசித்து இதைத் தொடர்ந்திருந்தால் எந்த நிலைக்கு உயர்வுக்கு வந்திருப்போம் என்பது அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களைப் பார்க்கும் போது, அவர்கள் போற்றப்படும் போது நமக்கு உரைக்கும்.
தொடங்குவதற்கே நிறைய முனைப்பு ஆர்வம் சந்தர்ப்பம் வேண்டும் எனும் போது தொடர்வதற்கு அதை விட அதிகமான முயற்சி, பிடிப்பு, பிடிவாதம், முனைப்பு தேவைப்படுகிறது.
ஆரம்பத்தில் இவை அதிகம் இருந்தாலும் கற்பூரம் போல நாளடைவில் கரைந்து போகிறது. பின்பு பயிற்சியைத் தொடராமல் இருக்கச் சாக்கை தேடி சாதுரியமாக நிறுத்தி விடுகிறோம். ஒரு முறை நிறுத்தினால், மீண்டும் தொடர்வது என்பது பிரம்மப்பிரயர்த்தனம் தான்.
எழுபது-எண்பதுகளில் பத்தாவது முடித்தவுடன் டைப்ரைட்டிங் கற்றுக்கொள்வதும் அதிலும் சிலர் ஷர்ட்ஹான்ட் பயிற்சி எடுப்பதும் கிட்டத்தட்ட எழுதப்படாத விதி. தொண்ணூறுகளில் அந்த இடத்தை கம்ப்யூட்டர் மையங்கள் பெற்றுக்கொண்டன. அந்த பயிற்சிக்குக் கூட ஷு அணிந்தே சென்ற நண்பர்களை எனக்குத்தெரியும்.
அந்த காலத்தில், பிரமிக்கும் சண்டை காட்சிகள் கொண்ட படங்களை பார்த்தவுடன், ஆண்களில் பலர் கராத்தே, குங்க் ஃபூ பயிற்சி பெற்றனர். நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே ‘ஹூன்’ ‘ஹா’ என்று சத்தம் போடுவார்கள்.
பெண்கள் என்றால் பாட்டுப்பயிற்சி கட்டாயம். அண்டை அயல் வீடுகளில் பாட்டுச் சொல்லிகொடுப்பவர் இருந்து விட்டால் கும்பலாக எழும் ச.. ரி.. க.. ம.. சத்தமே உங்களை அதிகாலையில் எழுப்பிவிடும்.
எல்லோரும் சேரும் மற்றொரு இடம் இந்தி வகுப்புகள். மூன்றாம் பரீட்சையான ராஷ்டிராபாஷா வரை வருபவர்களை வியந்து பார்த்த காலம் ஒன்று உண்டு.
இப்போதெல்லாம் பயிற்சிகள் என்னவென்றே புரிந்து கொள்ள முடியவில்லை. செஸ், ஸ்கேட்டிங், நீச்சல் மட்டுமே புரிகிறது. அதுவும் பிறந்ததிலிருந்து எட்டாம் வகுப்பு வரும் வரை தான். அதன் பிறகு எல்லாமே நீட், ஜேஇஇ வகுப்புகள் தான். அறிவியலை தவிர்த்தவர்கள், காமர்ஸ் எடுப்பவர்கள் எல்லோரும் சி.ஏ படிக்க சென்று விடுகிறார்கள். டிகிரி முடித்தவர்களில் பலர் சிவில் சர்வீஸ் என்கிற IAS ஆக கோச்சிங் போகிறார்கள். சர்வமும் கோச்சிங் மயமாகி போனது. இதில் எவ்வளவு பேர் முனைப்பு காட்டி வெற்றி பெற்றார்கள்.
சற்று வயதாகிவிட்டால் யோகா தியானம், பாராயணம் என்று ஒரு கும்பல் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இதை கற்கும் ஆண்கள் அனைவரும் ஜிப்பா வாங்க, அணிய மறப்பதில்லை. இந்த ஆர்வமும் வேகமும் பயிற்சி முடிந்தவுடன் முயற்சியை தொடர்வதிலில்லை .
தொடங்குவதற்கு ஒரு ஆரம்ப சூரத்தனம் போதுமாக இருக்கிறது. தொடர்வதற்கு மிகுந்த மனதிடமோ அழ்ந்த பற்றோ தேவைப்படுகிறது. சமயங்களில் மற்றவர்கள் அந்த திறனை நன்றாக வெளிப்படுத்துவதாக பாராட்டினால், அது ஒரு ஊக்கமாகி தொடர தூண்டுகோல் ஆகிறது. நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொண்டு தொடர்வதை எந்த சுயமுன்னேற்ற புத்தகமும் சாதித்ததாக தெரியவில்லை.
தொழில்துறையில் எடுத்துக்கொண்டாலும் பலரும் பலவற்றை தொடங்குகிறார்கள். வேலை செய்பவர்கள் பலரும் ஒரு கட்டத்தில் வேலையில் சலிப்பு தட்டியோ, மேலதிகாரியுடன் சண்டையிட்டோ, புது முயற்சியாகவோ, ‘அடிமைதளையை விடிவிப்பதாக’ எண்ணிகொண்டோ பார்க்கும் வேலையை விட்டுவிடுகிறார்கள். வேறு நிறுவனத்திற்கோ மாற்று வேலைக்கோ செல்லாமல் சொந்தமாக தொழிலோ வியாபாரமோ தொடங்க முயல்கிறார்கள். பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமலோ, முதலீடு குறைவானதாலோ, கடன் மிகுதியானதாலோ மிக குறுகிய காலத்தில் வெளியேறி விடுகிறார்கள். பல ஸ்டார்ட்அப் விழுந்து விட காரணம் இது தான்.
எந்த முயற்சியும் சில பல இடர்பாடுகளை சோதனைகளை சந்தித்துத் தான் ஆக வேண்டும். அவற்றில் துவண்டு விட்டால் முன்னேற்றம் சாத்தியமில்லை. தோல்வி மற்றும் இடர்பாடுகளையும் சேர்த்தே திட்டமிடவேண்டும்.
தொடர்வதால் பெறும் நன்மையை முன்னிறுத்தினால் நிறுத்துவதில் உள்ள இழப்பு புரிந்துவிடும். எந்த நோக்கத்திற்கு ஒன்றை துவங்கினோம் என்ற எண்ணவோட்டம் இழையோடும் பாவாக தொடர்ந்து வரவேண்டும்.
பார்த்தவுடன் காதலில் விழுந்து விடுகிறார்கள், பழகும் போது பிரிந்துவிடுகிறர்கள். இதுகூட பரவாயில்லை கல்யாணத்தில் தொடங்கி விவகாரத்தில் முடித்துக்கொள்கிறார்கள் சில மாதங்களில், வருடங்களில். எவற்றை தொடரவேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கிறார்களோ இவர்கள்?
பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தால்தான் தேர்ச்சி பெற முடியும். துவங்குவத்தின் நோக்கமே அது தானே.