
நல்லொழுக்கம் நன்மையை பெறுவது. தீயொழுக்கம் தீமையை தருவது. இரண்டும் இரு எல்லைகள். இடையில் உள்ள பொய்யொழுக்கம் என்பது, ஒழுக்கமாக இருப்பதாக பாவனை செய்துகொண்டு, உண்மையில் அதற்கு மாறாக இருப்பது.
உன் மனத்தை எது தூய்மையாக வைத்திருக்கிறதோ, அதுதான் ஒழுக்கம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
தீய பழக்கங்கள் நம் உடல் நலத்தைக் கெடுக்கின்றன. தீய ஒழுக்கங்கள் தம் மன நலத்தைக் கெடுக்கின்றன. பொய்யொழுக்கமோ, தம்மைக் கீழே தள்ளுவது மட்டுமின்றி, நாம் சார்ந்து வாழும் சமுதாயத்தின் நலனையும் கீழே சாய்க்கிறது.
சுருங்கச் சொன்னால், தீய ஒழுக்கம் நம்மை மட்டும் கெடுக்கிறது. பொய்யொழுக்கம் தம்மைச் சார்ந்தவர்களையும் கெடுக்கிறது.
தம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறேமோ, அதற்கு முற்றிலும் தகுதியுள்ளவனாக நம்மை வைத்துக்கொள்வது, ஒழுக்கத்தின் அடையாளம்.
பிறரின் உணர்வுகளை எடுத்து அவர்களையும் உயர்வான நிலையில் நாம் நடத்துவதும் ஒழுக்கத்தின் கூறுதான்.
ஆனால் ஒழுக்கத்தை பற்றி மிகப்பேசும் நமது அன்றாட வாழ்வில் இந்த பொய்யொழுக்கங்கள் ஏராளமாகக் கலந்துவிட்டன. பொய்யொழுக்கம் ஒரு சமூக நோயாகவே மாறி, தம் எல்லோரையும் பொய் முகமூடிகளுடன் உலவ விட்டிருக்கின்றது.
காந்தியடிகளுக்கு மறக்காமல் விழா எடுத்து ஊருக்கு அவர் பெருமையை உரக்கச் சொல்வோம். அவரது பிறந்த நாள், மறைந்த நாட்களில் செய்தித்தாள்கள் தொடங்கி தொலைக்காட்சிகள் வரை எல்லா ஊடகங்களிலும் காந்தியடிகள் பற்றிய பேச்சாகவே இருக்கும்.
ஆனால் காந்தி சொன்னதெல்லாம் இந்தக் காலத்துக்கு இன்றைய அரசியலுக்கு ஒத்துவருமா சார் என்று நடைமுறையில் கூச்சமில்லாமல் சிரித்துக்கொண்டே சொல்வோம்.
'சாதியை ஒழிக்க வேண்டும்.' என்று உரத்த குரலில் சொல்லி அதற்காகவே உழைத்தத் தலைவர்கள்; சாதி மத உணர்வு இல்லாமல் கர்ம வீரர்களாய் உழைத்த தலைவர்கள் என பலர் நம் நாட்டில் வாழ்ந்தனர்.
அவர்களையேகூட அந்தந்த சாதியைச் சேர்ந்தவர்கள் 'அவர் எங்கள் ஆள்' என்று சொல்லி, அவர்கள் புகைப்படங்களைப் போட்டு, அந்தந்த சாதிப் பெயரால் அமைப்புக்கள் ஏற்படுத்தி விழா எடுக்கும் அவலங்கள் நம்மிடம்தான் உண்டு.
நடப்பனவற்றையெல்லாம் நியாயப்படுத்திக்கொண்டே போனால், மன நிறைவு கிடைக்குமா என்ன..?
பொய்யொழுக்கம் ஒரு புதைமணல் நிரம்பிய குழி என்பதை நாம் உணர வேண்டும். பொய்யொழுக்கங்களை உதறி உண்மையாக வாழாதவனுக்கு பூரண வெற்றி வாழ்க்கையில் கிடைக்காது.
ஆயிரம் போர்க்களங்களில் நீ பெறும் வெற்றி, உனக்குப் பெருமையும் நிறைவும் தராது. உன்னை உண்மையாக உணர்ந்து, உன்னை வெற்றி கொள்ளுதலே பூரண வெற்றியாகும். அதுவே உனக்குப் பெருமையையும் நிறைவையும் தரும் என்கிறார் புத்தர்.