
எதைச் செய்கிறோம் என்பதில் தெளிவும், அந்தச் செய்கையில் தொடர் ஈடுபாடும், அதைச் செயல்படுத்தும் நேரங்களில் என்ன சிக்கல்கள் வந்தாலும், நல்ல தன்மையை இழந்துவிடாத பக்குவமும், இவற்றை எந்தச் சூழலிலும் கைவிடாத மனநிலையுமே, நமது முயற்சிகள் வெற்றியடையத் தேவையானவை.
ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' விமானம், ஒருநாள் திடீரென ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தப்பட்டுவிட்டது.
விமானம் மட்டுமல்ல; பயணம் எதில் என்றாலும், அது திடீரென தடைபட்டுவிட்டால் ஏற்படும் மன உளைச்சல்கள் மிக அதிகம்
அனைத்துப் பயணிகளும், சிங்கப்பூர் விமானத்துக்கு நுழைவுச்சீட்டு தரும் இடத்துக்கருகே குவிந்தார்கள். அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி, மாற்றுப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பில் ஒரே ஒரு இளம்பெண் ஊழியர் மட்டுமே இருந்தாள்.
எந்த சங்கடத்தையும் வெளிப்படுத்தாமல், முகத்தில் புன்னகை மாறாமல் அனைவரையும் வரிசையில் நிற்குமாறு வேண்டிக்கொண்டாள். பின் ஒவ்வொருவருக்கும், அவரவரது தேவைக்கேற்ப மாற்றுப் பயணங்களுக்கு முயன்றுகொண்டிருந்தாள்.
மிகப் பெரிய ஆளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பிய ஒருவர், வரிசையைத் தாண்டிக்கொண்டு வந்து, 'ஹலோ......ஏனிப்படி செய்கிறீர்கள்...? நான் இந்த விமானத்தில்தான் போயாக வேண்டும்; அதுவும் முதல் வகுப்பில்... நீ முதலில் அதற்கு ஏற்பாடு செய்…' என்று உரத்தக் குரலில் கத்தினார்.
மெதுவே நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண், முகத்தில் அதே புன்னகையுடன், 'தயை செய்து வரிசையில் வாருங்கள் சார்... என்று சொல்லிவிட்டு, செய்துகொண்டிருந்த வேலையில் மூழ்கினாள்
தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்னும் நினைப்பில், அந்த மனிதருக்கு ஏராளமாகக் கோபம் வந்துவிட்டது. 'எனக்கு உடனே டிக்கெட் ஏற்பாடு செய்யப்போகிறாயா இல்லையா...?' என்று கத்தினார்.
அந்தப் பெண் மீண்டும் 'சார்... தயவு செய்து வரிசையில் வாருங்கள்... என்று சொல்லிவிட்டுத் தனது வேலையில் ஆழ்ந்தாள்.
தன்னை அந்தப் பெண் வரிசையில் வரச் சொன்னது, தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று நினைத்த அவர், 'நான் யாரென்று உனக்குத் தெரியுமா...?' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
அவரது குரலின் ஒலி, விமான நிலையத்தில் இருந்த எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. அங்கிருந்த எல்லோரும் அந்த மனிதரையே பார்த்துக்கொண்டிருக்க, அவ்வளவு வேலை அழுத்தத்திலும் அந்தப் பெண் செய்தது யாரும் எதிர்பாராதது.
தனது அருகிலிருந்த ஒலிபெருக்கியில், 'பயணிகள் அனைவரும் கவனிக்கவும்.... பயணிகள் அனைவரும் கவனிக்கவும்...' என்று இருமுறை அறிவித்தவள், தொடர்ந்து அறிவித்தாள்.
தான் யார் என்றே தெரியாத ஒருவர் இங்கு வந்து, நான் யாரென்று உனக்குத் தெரியுமா என்று என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். உங்களில் யாருக்காவது அவர் யாரென்று தெரிந்தால், வந்து அவருக்குத் தெளிவுபடுத்தவும்.
வரிசையில் நின்றிருந்த பயணிகள் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரிக்க, அவருக்கு உண்மையிலேயே இப்போது அவமானமாகிவிட்டது.
எனவே இன்னும் கோபமாக, ஒரு பெண்ணிடம் ஆண் சொல்லக்கூடாத சொல்லை ஆங்கிலத்தில் சொல்லி, 'நான் உன்னை அப்படி செய்வேன்...' என்று மிகக் கொச்சையாக திட்டினார்.
அங்கிருந்த பயணிகள் அனைவரும் அந்த இளம்பெண்ணை நோக்கி அவர் சொன்ன அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டு அதிர்ந்து நிற்க, அந்தப் பெண் புன்னகை மாறாத அதே முகத்துடன் அவருக்கு பதில் சொன்னதுதான் உச்சம்! 'மன்னிக்க வேண்டும் சார்... நீங்கள் அதைச் செய்வதற்கும் வரிசையில்தான் வரவேண்டும்.
இப்போது விமான நிலையமே குலுங்கி சிரிக்க, அந்த மனிதர் புலம்பிக்கொண்டே இருக்க வேண்டிய தாகிவிட்டது. வரிசையின் கடைசியில் நிற்க வேண்டியது சிக்கல்களைப் புன்னகை மாறாமல் எதிர்கொள்ளும் தன்மையும், எந்தச் சூழலிலும் நமது நோக்கத்திலிருந்து பிறழாமல் செயல்படும் தன்மையுமே நம்மை உயரத்துக்குக் கொண்டுபோகின்றன. ஒருவேளை நமக்கு அதிர்ஷ்டமிருந்தால், உச்சத்துக்கொண்டுபோகும்.
முயற்சி இல்லாதவனை அதிர்ஷ்டம்கூட கண்டுகொள்ளாது. அதேபோல், முயற்சியில்லாதவனால், அதிர்ஷ்டத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாது.