விளையாட்டின் முடிவில் 'வெள்ளிப் பதக்கம்' வென்றவரை விட 'வெண்கலம் பதக்கம்' வென்றவர் அதிக மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் என்றைக்காவது கவனித்தது உண்டா? இப்படியும் நடக்குமா?
வெண்கலப் பதக்கத்தை விட வெள்ளிப் பதக்கம்தான் உயர்ந்தது. அவ்வாறு இருக்கையில் வெங்கலப் பதக்கம் வென்றவர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியவரை விட மகிழ்ச்சியாக இருப்பது எப்படி சாத்தியம் என்று தானே யோசிக்கிறீர்கள்?
பொதுவாகவே, வெள்ளிப் பதக்கம் வென்றவர் வெண்கலப் பதக்கம் வென்றவரை விட மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால், இருவரின் 'எதிர் சிந்தனை' இந்த நிலையை தலைகீழாக மாற்றுகிறது.
அதாவது, வெள்ளிப் பதக்கம் வென்றவர், 'ஒவ்வொரு வீரரின் கனவான தங்கப் பதக்கத்தை நாம் இழந்துவிட்டோமே' என்று எதிர்மறையாக நினைக்கிறார்.
அதேசமயம், வெண்கலப் பதக்கம் வென்றவர், வெள்ளிப் பதக்கம் வென்றவரை விட சற்று குறைவான பாய்ண்டுகளில் இருந்தாலும், 'குறைந்த பட்சம் எனக்கு ஒரு பதக்கமாவது கிடைத்துவிட்டது' என்று சிந்திக்கிறார். அதாவது, நான்காவது இடத்தில் வந்து ஒரு பதக்கத்தை முழுவதுமாக இழக்காத அளவிற்கு நாம் சிறப்பாக விளையாடி இருக்கிறோம் என்று நேர்மறையாக நினைத்து சந்தோசப்படுகிறார்.
மற்றுமொரு எடுத்துக்காட்டாக, ஒரே வகுப்பில் பயிலும் இரண்டு மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவிற்காக காத்திருக்கிறார்கள். ஒரு மாணவன் படிப்பில் சிறந்து விளங்குகிறவன். இன்னொருவன் சுமாராக படிக்க கூடியவன். நன்றாக படிக்கக்கூடிய மாணவன் தன்னை வகுப்பறையில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவருடன் ஒப்பிட்டு பார்த்து ஏக்கம் கொள்வான். ஆனால், சுமாராக படிக்கக் கூடியவன் தான் தேர்வில் தோல்வி அடையாமல் தேர்ச்சி அடைந்ததை நினைத்து சந்தோஷப்படுவான். நான்றாக படிக்கும் மாணவனை விட இவன் அதிகம் திருப்தி அடைவான்.
அதுபோன்றுதான், இரண்டு வீரர்களும் தங்களை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஆனால், இருவரின் சிந்தனைகளில் இருக்கும் இந்த எதிர்மறை நேர்மறை எண்ணங்களே அவர்களின் மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது.
இந்த நிகழ்வு, 'எதிர்நிலை சிந்தனை' (counterfactual thinking) பற்றிய உளவியல் ஆய்வு மூலம் 30 வருடங்களுக்கு முன்பு நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை!
உளவியலாளர்களான விக்டோரியா மெட்வெக், தாமஸ் கிலோவிச் மற்றும் ஸ்காட் மேடி ஆகியோர் 'எதிர்நிலை சிந்தனை' பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக ஒலிம்பிக் மேடையைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.