
விமர்சனப் பார்வையில் அடுத்தவரின் வாழ்க்கையை அணுகலாமா? என்றால் சில சமயம் தாராளமாக அணுகலாம். அவை நமக்கு பல வாழ்க்கை பாடங்களை கற்றுத்தரும். எதை எடுத்துக்கொள்வது, எதை விடுப்பது என்ற தெளிதல் வரும். வாழ்க்கையின் சாரங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தனி மனித விமர்சனம் என்பது தேவையற்றது. பிறரை விமர்சனப் பார்வையில் அணுகுவது தவறான நோக்கமாகும். கற்கும் நோக்கில் ஆராய்ந்தால் ஒரு தவறும் இல்லை.
பிறரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து அதில் உள்ள பயனுள்ள விஷயங்களை நம் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தினால் சந்தோஷம்தான். ஆனால் அதற்கு மாறாக பிறரின் அந்தரங்க வாழ்க்கையில் உள்ள தவறுகளையும், கறைகளையும் தேடிப் பிடித்து சிறுமைப்படுத்துபவர்களை ஒதுக்கிவிடுவதுதான் நல்லது. தேவையில்லாமல் அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது தவறு. நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையில் அக்கறை கொள்வதும், அவர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற பொழுது தோள் கொடுத்து உதவுவதும் சிறந்தது.
சிலர் விமர்சனப் பார்வையில் அடுத்தவரின் வாழ்க்கையை ஆராய்வதும், தோண்டி துருவுவதும், அவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து கமெண்ட் அடிப்பதும் என அநாகரிகமாக செயல்படுவார்கள். இது தவறு.
ஆனால் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் நலனில் அக்கறை கொள்வதும், தானுண்டு தன் வேலையுண்டு என்ற சுயநல போக்கில்லாமல் உதவுவதும் தவறானதல்ல. மனிதாபிமான அடிப்படையில் அடுத்தவரின் பிரச்னைகளில் நம்மால் சுமுகமான தீர்வு தரம் முடியும் என்றால் தலையிடுவதில் தவறில்லை.
விமர்சனப் பார்வையில் அடுத்தவரின் வாழ்க்கையை அணுகுவது உண்மையில் சில சமயம் நம் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும். பிறரிடம் இருக்கும் நல்லவைகளையே ஒப்பிடுவோம்; அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் செய்வோம். நல்ல முறையில் வாழும் முன்னேற்றம் அடைந்தவர்களை ஆராய்ந்து கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
விமர்சனப் பார்வையில் அடுத்தவரின் வாழ்க்கையை அணுவது என்பதில் அடுத்தவர் என்பது தெரியாதவர் களாக இருக்க முடியாது. நண்பர்கள் அல்லது உறவினர்களாக இருக்கலாம்.
எனவே அவர்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவர்களின் செயல்களை விமர்சிப்பது தவறில்லை. மொத்தத்தில் விமர்சிப்பதும் விமர்சனப் பார்வையில் அடுத்தவரின் வாழ்க்கையை அணுகுவதும் நல்லதையே செய்யும். ஆனால் விமர்சனம் என்பது அடுத்தவரின் உள்ளத்தை புண்படுத்தாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.