அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லலாம் இல்லையா?

Motivational articles
unity of human
Published on

ல நேரங்களில் நல்லதாக, ஆதரவாக சொல்லப்படும் நான்கு வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவது இல்லை. அதுவும் துன்பக் காலங்களில் ஒருவன் சிக்கித் தவிக்கும்போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கை ஊட்டும்படியாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவே இல்லை.

தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் கட்டையை பிடித்து மிதக்க உதவுவதைப்போல அந்த அன்பான நல்ல வார்த்தைகள் துன்பக் காலத்தில் தாக்குப் பிடிக்க ஒருவனுக்கு உதவுகின்றன. மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள், தைரியசாலிகள் கூட சில சமயங்களில் தங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்துவிடுவதை நாம் பார்த்து இருக்கின்றோம்.

அவர்களே தங்களுக்குள் அவற்றை இழந்து நிற்கும் அந்தக் குறுகிய காலத்தில் அடுத்தவரிடமிருந்து வரும் நம்பிக்கை வார்த்தைகள் எப்படிப்பட்ட ஊக்க மருந்தாக வேலை செய்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டு இருக்கிக்கிறோம். இன்றைய நாட்களில் ஆதரவான நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையில் அரிதாக இருக்கிறது.

எத்தனையோ வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி இருந்தாலும் மனப்பற்றக் குறையாலும், நேரப் பற்றாக்குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதல் ஊட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது. இந்தச் சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை

சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள்.

அப்படி நல்லதைப் பாராட்டும்போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப் படுத்துகிறீர்கள்.

இதையும் படியுங்கள்:
பேசுவதற்கு முன்பு யோசிக்கணும் ஏன் தெரியுமா?
Motivational articles

மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கி இருக்கையில் ஆத்மார்த்தமாய் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்.

வருத்தங்களும், தோல்விகளும் சகஜமானவை என்பதையும் அதைத் தாண்டாமல் யாரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலே வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள்.

அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள்.

பிறையாகத் தோன்றும் எல்லாமே முழு நிலவாகிப் பிரகாசிப்பதில்லை. எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்துபோய் இருக்கின்றன.

ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும்போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள்.

தங்கள் திறமைகள் மீது உண்மையில் நம்பிக்கை ஏற்படும்வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
சிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்!
Motivational articles

அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயக்கம் கொள்ளாதீர்கள். அன்னை தெரசாவைப் போல் தன்னலம் இல்லாத சேவைகளை செய்ய நமக்கு முடியாமல் இருக்கலாம்.

ஆனால், அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லலாம் இல்லையா? அதற்கு என்ன செலவாகப் போகிறது? இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல செயலை நாம் செய்ய ஆரம்பிப்போமா?.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com