
பேசுவதற்கு முன்பு யோசிப்பது மிகவும் முக்கியம். இது பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். பேசுவதற்கு முன்பு என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டும் என்பதை மனதில் சிறிது யோசித்துப் பார்த்த பின்பு பேசினால் சிறந்த உறவுகளை உருவாக்க முடியும். அத்துடன் தவறான புரிதல்களையும், மோதல்களையும் தவிர்க்க முடியும்.
பேசுவதற்கு முன்பு சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்கினால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும். நினைத்ததை எல்லாம் உடனடியாக வெளியில் சொல்லப்போனால் பிரச்னைகளும், குழப்பங்களும் ஏற்படும். அதனால் எதையும் செய்வதற்கு முன்பு, பேசுவதற்கு முன்பு சிறிது யோசித்து செயல்படுவது நல்லது.
சற்று புதிய, கடினமான அல்லது விவாதங்களுக்குரிய கருத்துக்களை முன்வைக்கும் முன்பு சிறிது யோசித்து பேசுவது மிகவும் நல்லது. நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் நாம் எப்படி வெளிப் படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். சொல்ல வந்ததை தெளிவாகவும், தேவையற்ற வார்த்தைகளைப் பேசாமலும், அதைக் கேட்பவர்களின் உணர்வுகளை பாதிக்காமலும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பேசவேண்டும்.
பேசுவதற்கு முன்பு யோசிப்பது அதாவது யோசித்து பேசுவது உறவுகளை மேம்படுத்த உதவும். நம் மீது நேர்மறையான எண்ணத்தை உருவாக்கும். நம்மைப் பற்றிய புரிதலையும் நம்பிக்கையையும் கொடுக்கும். இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
யோசித்துப் பேசுவது என்பது மற்றவர்களின் உணர்வுகளையும், கண்ணோட்டங்களையும் கவனிப்பதாகவும், அவர்களை மதிப்பதாகவும், பரஸ்பர மரியாதை செலுத்துவதாகவும் உணரும் சூழலை உருவாக்கும். இதனால் பதட்டத்தை குறைத்து ஒரு புரிதல் உண்டாகும்.
பேசுவதற்கு முன் சிந்திக்க சிறிது நேரமும், முயற்சியும், பயிற்சியும் தேவை. உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் உணர்ச்சி வசப்படும் பொழுது கட்டுப்பாட்டை மீறி தவறாக அல்லது கடுமையாக எதையாவது சொல்லி விடுவோம். இது கேட்பவரின் மனதை புண்படுத்தலாம். எனவே உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது.
யோசிக்காமல் எதையாவது பேசி அது பிறரின் மனதை புண்படுத்தி வருத்தம் உண்டாகி மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை கூட சில சமயம் நேரலாம். எனவே என்ன சொல்ல விரும்புகிறோம் என்பதை திட்டமிடுவதன் மூலம் நம் எண்ணங்களை சரியாக வெளிப்படுத்த முடியும்.
அத்துடன் நம் உணர்வுகளை கண்ணியமான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தலாம். இது உறவுகளை பலப்படுத்துவதற்கும், தவறான வார்த்தைகளைப் பேசி வருந்தும் மனக்கஷ்டத்தையும் தவிர்க்க உதவும்.
பேசுவதற்கு ஏற்ற நேரம் மற்றும் சூழ்நிலையைத் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது. ஒரு கேள்விக்கு அல்லது ஒரு கருத்திற்கு பதில் அளிக்கும் முன்பு நாம் என்ன சொல்ல விரும்புகிறோம் என்பதை பொறுமையாக யோசித்து பேசுவதன் மூலம் நாம் நினைத்ததை அடைந்து விட முடியும்.
பேசுவதற்கு முன்பு யோசிப்பது நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நன்கு புரிந்துகொள்ளவும், நல்ல உறவை வளர்த்துக்கொள்ளவும், தவறான புரிதல்களை தவிர்க்கவும் உதவும்.