
இந்தியாவின் சிறந்த தத்துவ ஞானி ஆச்சாரியார் சாணக்கியர் ஆவார். வாழ்க்கையில் சரியான முறையில் வாழ நீதி சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர். சாணக்கியரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ மனிதர்களால் பின்பற்றக்கூடிய பல விதிகளை குறிப்பிடுகிறது. வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களின் கதவை வெற்றி நிச்சியமாக தட்டும் என்கிறார் சாணக்கியர்.
ஒரு மனிதன் தன் வேலைக்கும், பொறுப்புக்கும் இடையே சமநிலையை பேணும்போது அவரது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. சாணக்கியர் கூறுகையில் முதுமை என்பது ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் வாழ விரும்பும் வாழ்க்கையின் கட்டமாகும். இந்த கட்டத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க ஒருவர் முன்கூட்டியே செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இவற்றை செய்வதன் மூலம்தான் முதுமையிலும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்கிறார் சாணக்கியர். அவை.
பணத்தை சரியாக முதலீடு செய்யுங்கள்
உங்களிடம் பணம் இருக்கும்வரை மட்டுமே உங்களுக்கும் உங்களின் வார்த்தைகளுக்கும் மற்றவர்கள் மரியாதை கொடுப்பார்கள். ஆனால் உங்களிடம் பணம் பற்றாக்குறை ஏற்பட்டால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை விட்டு வெளியேறுவார்கள். உங்களுக்கு வயதாகும்போது இந்த துக்கம் அதிகரிக்கிறது. எனவே பணத்தை எப்போதும் நன்றாக பயன்படுத்த வேண்டும் என்கிறார் சாணக்கியர். நீங்கள் பணத்தை சேமித்தால் உங்கள் வயதான காலத்தில் நீங்கள் உதவிக்காக யாரையும் அணுக வேண்டியதில்லை.
ஒழுக்கம்
ஒழுக்கம் மற்றும் பயிற்சி மூலம் மட்டுமே ஒருவரின் நம்பிக்கை கட்டமைக்கப்படுகிறது. எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து ஒழுக்கத்துடன் தங்கள் அன்றாட வழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள், வாழ்க்கையில் ஒரு போதும் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று கூறுகிறார் சாணக்கியர். அத்தகைய நபர் வாழ்க்கையில் தனது அனைத்து இலக்குகளையும் அடைவார்.
சாணக்கியரின் கூற்றுப்படி ஒரு நபர் தனது வேலையை சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் செய்யும் பழக்கத்தில் இருந்தால் அவர் வயதான காலத்தில் பிரச்னைகளை சந்திக்க மாட்டார். உணவு பழக்க வழக்கங்கள், வழக்கமான நேரத்தில் தூங்குதல், எழுந்திருத்தல், உடற்பயிற்சி செய்தல், போன்றவற்றை ஒழுக்கத்துடன் கடைப்பிடித்தால் இது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்கிறார்.
உதவி செய்தல்
தன்னலமின்றி மற்றவர்களுக்கு உதவுபவர்கள் பிற்காலத்தில் எதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை என்று சாணக்கியர் கூறுகிறார். தொண்டு, கருணை ஆகியவை மனிதர்களிடம் இருக்கும் மிகச்சிறந்த நற்பண்புகள் ஆகும். இன்று நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் உதவி உங்கள் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்கும் நல்ல காலத்தில் செய்யும் நற்செயல்களால் உங்கள் முதுமை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் கழிகிறது. எனவே மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்ய தயாராக இருங்கள்.
குடும்பத்துடன் இணக்கமாக இருங்கள்
வயதான காலத்தில் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க குடும்பம் மிகவும் அவசியம். வயதான காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருந்தால் முதுமை சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் கடந்து செல்லும் என்கிறார். முதுமையில் பேரக்குழந்தைகளுடன் இருப்பதை விட பெரிய மகிழ்ச்சி வயதானவர்களுக்கு எதுவும் இருக்காது.
ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்
பெரும்பாலும் இளமையில் உடல் ஆரோக்கியத்தை அலட்சியம் செய்வது முதுமையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். இளமையில் முழு ஆற்றலையும் செலவழிப்பவர்கள் முதுமையில் ஆரோக்கியப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
உங்கள் உடலை கவனித்து போதை மற்றும் கெட்ட பழக்கங்களை தவிர்க்கவும். இது வயதான காலத்திலும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கிறார் சாணக்கியர்.
இந்த 5 விதிகளை மனிதன் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாவும் இருக்கும்.