
நவீன கால தம்பதிகள் திருமணமான நாலு மாதத்திலேயே விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு செல்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை சமமாகப் பாவித்து காலம் முழுக்க மகிழ்ச்சியோடு இணைந்திருந்து கடமையாற்ற அந்தக் காலத்திலேயே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழிகாட்டியுள்ளார். தாம்பத்திய உறவு பற்றி கீதை என்ன கூறுகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.சுயநலமற்ற அன்பு (Chapter 3, Verse 19): ஒருவர் சுயநலம் கொண்ட ஆசைகளைத் துறந்து (Nishkama Karma) செயல்புரிய வேண்டுமென கீதை கற்பிக்கிறது. திருமண பந்தம் என்று வரும்போது, எதிர்பார்ப்பேதுமின்றி தன் துணைக்கு ஆதரவுகாட்டி அன்பு செலுத்த வேண்டும். உறவிலிருக்கும் ஒருவர், 'எனக்கு என்ன கிடைக்கிறது' என்ற மன நிலையில் இருப்பதால் அடிக்கடி தடுமாற்றத்திற்குள்ளாகிறார்.
பதிலுக்கு எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல், நேர்மையுடன் தன் கடமைகளில்மட்டும் கவனம் செலுத்தி செயலாற்றும்படி கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். திருமண பந்தத்திலிருக்கும் ஒருவர் இம்முறையைப் பின் பற்றும்போது, தன் பார்ட்னரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியுடன் இணைந்திருக்க முடிகிறது.
2.மனதையும் உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது (Chaper 6, Verse 5): "ஒருவனுக்கு நண்பனும் அவனே.. எதிரியும் அவனே. அவனால் மட்டுமே அவனை உயர்திவிட முடியும்", என்கிறார் கிருஷ்ணர். திருமணம் என்பது ஒருவனுக்கு அவனது பொறுமையையும், உணர்ச்சிகளை கட்டுப்பாட்டிற்குள் வைக்கக் கூடிய திறமையையும் சோதிப்பதற்காக உண்டாக்கப்பட்ட அமைப்பாகும். அவனுக்கு கோபத்தையும் எரிச்சலையும் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், சின்னச் சின்ன பிரச்னை கூட பெரிய சுமையாகத் தெரியும்.
ஆகவே, சுயபரிசோதனை மூலம் மனதிற்கு பயிற்சியளித்து ஆன்மிக ஒழுக்கத்தை தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென கீதை வலியுறுத்துகிறது. கருத்து வேறுபாடு எழும்போது அமைதியுடனிருந்து, பிறகு பதிலுக்குப் பதில் கூச்சலிடாமல் மென்மையாக பதில் அளிப்பது சிறப்பாகும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது அவற்றை அடக்கி வைப்பது என்று பொருளாகாது. விழிப்புணர்வுடன் வெளிப்படுத்துவது என்றாகும்.
3.ஈகோவைத் தவிர் (Chapter 2, Verse 70): ஈகோவை விட்டு வெளியேறி, பற்றற்ற மனோபாவத்துடன் சம நிலைப்பட்டு நிற்பது வெற்றிக்கு வழி வகுக்கும். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது, பார்ட்னரை மன்னிப்பது, யாருக்கு அதிகார பலம் அதிகம் என்பதை நிரூபிக்க தொடர்ந்து போராடுவதைத் தவிர்த்து அமைதியுடன் கடமையையாற்றுவது போன்ற நற்குணங்களைப் பின் பற்றுமாறு கீதை உபதேசிக்கிறது.
4. துணையிடமுள்ள நற்குணங்களை மட்டும் பார்ப்பது (Chapter 6, Verse 30):நம் பார்ட்னரிடமுள்ள புனிதமான நற்குணங்களை மட்டும் பிரித்துப் பார்க்கப் பழகிக் கொண்டால், அவர் மீது அன்பு, பச்சாதாபம், காதல் அதிகமாகும். குற்றங் குறைகளை சுட்டிக் காட்டாமலிருக்கவும், ஈகோவை முற்றிலும் கை விடவும் பழகிக்கொண்டால் ஒருவர் மீது மற்றவருக்குண்டாகும் காதலுக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்து விடுவோம். உறவில் ஆழம் அதிகரிக்கும்.
5.அவரவர் கடமைகளை (Dharma) தவறாமல் செய்து முடித்தல் Chapter 18, Verse 47): பகவத் கீதையின் ஒன்றிலிருந்து ஆறு வரையிலான அத்தியாயங்கள் கர்ம யோகா பற்றி கூறுகிறது. அதாவது ஒருவரின் தனிப்பட்ட கடமைகளை (Swadharma) செய்து முடிப்பது.
திருமண பந்தம் என்று வரும்போது, பார்ட்னர் என்ற வேஷத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம். அதன் பின், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், பார்ட்னருக்கு உணர்வு பூர்வமான செயல்பாடுகளில் முழு ஆதரவளித்தல் அல்லது அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவறாமல் உடனிருப்பது போன்ற துணைக்குண்டான கடமைகளை (Dharma) முழு மனதுடன் செய்து கொண்டிருப்பது ஏற்றுக்கொண்ட வேடம் நியாயமாகப் போய்க்கொண்டிருப்பதாகப் பொருள்படும். பொறுப்புடன் துணையை கவனித்துக் கொள்ளும்போது உறவு வலுப்பெறும்.
உங்கள் திருமண வாழ்க்கையை மற்றவர்கள் வாழ்க்கையுடன் ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு எது தேவையோ அதில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்க்கையை நிலையான வழியில் செலுத்திக்கொண்டிருங்கள்.