
மனித மனங்களில் பலரிடம் பல்வேறு சிந்தனைகள் அவ்வப்போது வந்துபோகின்றன. முடியாது என நினைத்தால் முடியாதுதான்.
அதையே கொஞ்சம் மனதை ஒரு நிலைப்படுத்தி, சோா்வு எனும் சோம்பலை நீக்கி, விடாமுயற்சியுடன் முடியும் என நினைத்தோமேயானால் கட்டாயம் முடிந்துவிடும்.
இதுபோன்ற தருணத்தில் முடியாது என்பதோ இனிமேல் இங்கே நம்மால் முடியாது, என்ற நிலைபாட்டுக்குள் அடங்கி நம்மைவிட்டு விலகிவிடுமே! அதுதான் தன்னம்பிக்கை தரும் பாடம்.
அதேபோல நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் வரிகளைப்பாருங்கள், சில சமயங்களில் நினைப்பது நடப்பதில்லைதான். அதற்காக மனம் தளா்ந்து தேவையில்லாத சிந்தனைகளுக்கு ஆளாகி தெய்வம் எனக்கு துணையாய் இல்லை, எதைத் தொட்டாலும் விளங்கவில்லை, என புலம்புவதுதான் மிச்சம்.
முதலில் நம்மிடம் நல்ல ஒழுக்கமில்லாத செயல், அடுத்தவர் நலன் கண்டு பொறாமைப்படும் குணமும், குடிகொண்டிருந்தாலே தெய்வம் நமக்கு எங்கே துணை நிற்கும்? ஆக, செயல்களில், எண்ணங்களில், தூய்மை இல்லாத நிலையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு எதிா்மறை விளைவுகளைத்தான் தரும்.
அப்போது நமது மனமானது ஒரு நிலைபாட்டில் இல்லாமல் அலைமோத ஆரம்பித்துவிடும்.
உடனே இந்த வீடே சரியில்லை வீட்டை மாற்றலாமா யாருடைய கிரஹம் சரியில்லையோ தொியவில்லை, ஆட்டிப்படைக்கிறது என ஜோசியரைப் பாா்ப்பது. அவர் சில விஷயங்களைச் சொன்னால் இவர் சொல்லுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என ஜோசியரை மாற்றுவது.
அதை அடுத்து மந்திரம், மாயம், ஏவல், பில்லி, சூன்யமாக இருக்குமோ என மந்திவாதியைப் பாா்ப்பது அதுவும் சரியில்லாது போனால் நமது தெய்வம் நமக்கு துணையாய் இல்லை என தெய்வத்தையே மாற்றுவது.
இப்படி மனதை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திராமல் ஒவ்வொன்றாய் மாற்றிக்கொண்டே போகும் சிலர், தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் நிலைபாட்டில் இல்லாமல் இருந்தால் என்ன பிரயோஜனம்.
முதலில் நமது எண்ணமும் செயலும் சரியாக உள்ளதா என சுயபரிசோதனை செய்து கொள்ளுங்களேன். யாா் தடுத்தாா்கள்.
அதை விடுத்து நாமும் குழம்பி, நம்மை சாா்ந்தவர்களையம் சங்கடப்படுத்தி, கத்திமேல், கம்பிமேல் நடக்கும் தேவையில்லா விளையாட்டு அவசியமானதா?
கடையிலோ வீட்டிலே சூடாக காப்பியோ தேனீரோ சாப்பிடுகிறோம் சூடு அதிகமாக இருப்பதை உணர்ந்து ஜம்புலன்களையும் ஒரு நிலைப்படுத்தி ஊதி ஊதி சூடு ஆறும்வரை பொறுத்திருந்து மனதை ஒரு நிலைபாட்டிற்கு கொண்டு வந்து இப்போது சூடு சரியாக இருக்கும் என அருந்துவதில்லையா!
அதேபோலத்தான் எந்த செயலைச்செய்யும்போதும் மனதை பக்குவமாக்கி , நல்ல ஆற்றல் மிகு சிந்தனையோடு, இறை நம்பிக்கை மறவாமல், அடுத்துக்கெடுக்காமல், நோ்கொண்ட பாா்வையோடு, பக்குவம், நிதானம், கடைபிடித்து அகலக்கால் வைக்காமல், குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு கலந்து பேசி மனதை ஒரு நிலைப்படுத்தி வாழ்ந்து பாருங்கள்.
அப்போது முடியாது வருமா அல்லது முடியும் வருமா!
அந்த நிலைபாடுகளை நாம் கடைபிடித்தால் முடியாதது கூட முடியுமே! இப்போது சொல்லுங்கள் முடியுமா முடியாதா!