
சில ஆண்டுகளுக்கு முன்னர், ’டாடா சுமோ’ கார்கள் வைத்திருப்பதையும், அதில் பயணம் செய்வதையும் பெருமையாகக் கருதியதுண்டு. அப்போதைய திரைப்படங்கள் பெரும்பாலானவற்றில் அந்தக் கார்களே காட்டப்பட்டன! ஏன்? இப்பொழுதுங்கூட அவற்றின் மவுசு குறையவில்லை!
ஆனால் அந்தப் பெயருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு ரகசியத்தை அறிந்ததும் நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்! உங்களால் மட்டும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா என்ன? நம்மை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமல்ல! அந்தப் பெயர் வந்த வரலாறு, நம் தொழிலதிபர்களுக்கு ஓர் உயர்ந்த வாழ்க்கைப் பாடத்தையும் உணர்த்துகிறது என்பதாலேயே இதனை எழுத நேர்ந்தது.
டாடா சுமோ கார்களும், ட்ரக்குகளும் இன்றைக்கும் நம் சாலைகளில் வேகம் எடுத்துக் கொண்டுதான் உள்ளன. சுமோ (SUMO) என்ற பெயர் சூட்டப்பட்ட விதமே, நம் முன்னோர்களின் பண்பினைப் பறைசாற்றும் ஒன்றாக அமைந்துள்ளது. நன்றியறிதல் கொண்டவர்கள் நானிலத்தில் எப்பொழுதும் உயர்ந்தே இருப்பர்! இதை இப்படியும் சொல்லலாம். உலகில் உயர்ந்தோர் அனைவருமே நன்றியறிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களே!
எந்த ஒரு தனிமனிதர் தன் நிறுவனத்திற்காக ஈகோ இல்லாமல் பொறுப்பறிந்து நடந்து கொள்கிறாரோ, அவர் நிச்சயமாகப் புகழ் பெறுவார்! அந்த நிறுவனமும் அதன் தலைவரும் உண்மையானவர்களாக இருப்பார்களானால்! டாடா நிறுவனமும் அதன் தலைவரும் எவ்வளவு நேர்மையானவர்கள் என்பதை உலகே அறியும்.
அந்த நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலராக (சிஇஓ-CEO) இருக்கிறார் சுமந்த் மூல்கவோகர் (SUMANT MOOLGAOKAR). புதிய கார், ட்ரக்குக்குப் பெயர் சூட்ட முனைந்தபோது, மிகுந்த பொறுப்பு வாய்ந்த அவர் பெயரையே சூட்ட நிர்வாகம் முடிவு செய்கிறது. பெயரின் முன்னாலுள்ள இரண்டு எழுத்துக்களையும், நடுவிலுள்ள இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து ‘SUMO’ என்று பெயர் வைக்கிறார்கள்.
‘அப்படி என்ன அவர் சிறப்பாகச் செயல்பட்டார்?’ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கிறது அன்பர்களே! அதைச் சொல்லத்தான் நானும் வந்து கொண்டிருக்கிறேன்.
அலுவலகத்தில் லஞ்ச் நேரம் வந்ததும், சுமந்த் மட்டும் காணாமல் போய்விடுவாராம். பல நாட்களாக அது தொடர, அவரின் கீழ் பணியாற்றிய சிலர் லஞ்ச் நேரத்தில் அவர் எங்கே சென்றுவிடுகிறார் என்பதை அறிய ஆவல் கொண்டார்களாம். அன்றைக்கு லஞ்ச் டைம் வந்ததும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்களாம். அவரோ சற்று தொலைவிலுள்ள உணவு தபா (ட்ரக் ஓட்டிகள் தங்கள் வண்டிகளை நிறுத்தப் பெரிய மைதானமும், நடுவில் உணவகமும் உள்ளதே தபா என்றழைக்கப்படுகிறது. இங்கு நிறைய கட்டில்களும் இருக்கும். நிமிர்ந்து அமர்ந்தே ட்ரக்குகளை ஓட்டுபவர்கள் சாய்ந்து படுத்து ஓய்வு எடுக்க ஏதுவாக) ஒன்றுக்குச் சென்று, அங்கு வரும் ட்ரக் ஓட்டுனர்களிடம் ட்ரக்குகளைப் பற்றிப்பேசி, அவர்கள் கூறும் ஆக்க பூர்வமான மாற்றங்கள் குறித்துக் கேட்டாராம். அவர் யார் என்பதைச் சொல்லாமலே!
பின்தொடர்ந்து சென்றவர்கள் விக்கித்துப்போய், எவ்வளவு உயர்ந்த, யதார்த்த நிலையறிந்த சிஇஓவிடம் பணியாற்றுகிறோம் என்பதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்களாம்!
அந்த ட்ரக் ஓட்டுனர்கள் கூறும் சிரமங்களைக் களையும் விதமாக, தங்கள் ட்ரக்குகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை (Research and Development-R&D) மூலம் மாற்றங்களை ஏற்படுத்த வழி செய்வாராம். அதனால்தான் இன்றைக்கும் சாலைகளில் சுமோ ட்ரக்குகள் வரிசை கட்டி நிற்கின்றனவாம்.
எப்பேர்ப்பட்ட நிர்வாகம்! எவ்வளவு உயர்ந்த சிஇஓ! தொழிலதிபர்கள் இவர்களை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு தங்கள் தொழில்களை நடத்துவார்களேயானால், முன்னேற்றத்தால் நழுவிப்போக முடியாதே!