
ஒரு சிலர் பேசுவதை கவனித்தால் அவர்கள் மீது எரிச்சலுடன் பரிதாபமும் தோன்றும். காரணம் தாங்கள் வெற்றி அடையாததின் காரணமாக தங்கள் பெற்றோரையோ அல்லது தங்கள் குடும்ப சூழ்நிலைகளையோ காரணமாக சொல்வதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். உண்மையில் இவர்களுக்கு தடையாக இருப்பது அவைகள் அல்ல.
தாங்கள் சாதித்து என்ன செய்யப்போகிறோம். இதற்குள்ளேயே முடங்கி விடுவோம் என்கிற தற்காப்பும், சவால்களை சந்திக்கும் துணிவின்மையும்தான் இவர்கள் முன்னேறாததற்கான காரணங்களாகும். முக்கியமாக தங்கள் மீது நம்பிக்கை அற்றவர்கள்தான் பிற காரணங்களைத் தேடுவார்கள்.
ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும் தங்கள் பிறப்புக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்ற உத்வேகமும் இருந்தால் எத்தகைய சூழலும் விலகி வெற்றிக்கு வழிவிடும்.
இங்கு படித்த ஒரு தன்னம்பிக்கை வெற்றிப் பெண்ணின் கதையைப் பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நிகோஜ் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரத்தா தவான் என்ற இளம்பெண். மாற்றுத்திறனாளியான இவர் தந்தையால் வெளியில் சென்று வருமானம் பெற இயலாததால் குடும்பத்தின் பொருளாதார நிலைமை மோசமாக இருந்திருக்கிறது. மூன்று குழந்தைகளுடன் பெற்றோர் பசியால் வாடிய வறிய நிலையில் வீட்டில் இருந்த ஒரே செல்வம் ஓர் எருமை மாடு மட்டுமே.
குடும்பத்தின் மூத்த மகளான ஸ்ரத்தா தன் குடும்ப வறுமையைப் போக்க தீர்மானித்தார். எந்த வயதில் தெரியுமா? 11 வயது சிறுமியாக இருந்தபோது.
பள்ளியில் படித்தபடியே முதலில் வீட்டில் இருந்த ஒரு எருமையின் பாலை கரந்து வீடு வீடாகச் சென்று விற்றிருக்கிறார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து மேலும் சில எருமை மாடுகளை வாங்கி இருக்கிறார். இவ்வாறு படிப்படியாக எருமைகளின் எண்ணிக்கை உயர்ந்து இப்போது இவர்கள் வீட்டில் 80 எருமை மாடுகள் இருக்கின்றன.
வருமானம் உயர வேலைக்கு ஆட்களை வைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் வழி செய்து கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார் இவர்.
தற்போது மாடுகளை பெரிய கொட்டகை கட்டி பராமரித்து வரும் இவர் தனியாளாக 20 மாடுகளிடம் பால் கறந்து விடுவதாக சொல்லி ஆச்சரியம் கொள்ள வைக்கிறார். தற்போது பால் பண்ணை தொழிலோடு மண்புழு உரம் விற்பனையிலும் கால் பதித்திருக்கும் ஸ்ரத்தா படிப்பிலும் கெட்டியாக இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்று சாதனைப் பெண்ணாக வலம் வருகிறார் என்கிறது ஸ்ரத்தாவின் வெற்றிக்கதை.
ஸ்ரத்தா நினைத்திருந்தால் தன் தந்தையின் நிலை மற்றும் வறுமையின்மையை காரணம் காட்டி படிப்பை பாதியில் விட்டு வீட்டு வேலைக்கு அல்லது ஏதேனும் வேலைக்குச் சென்று மேலும் குடும்ப கஷ்டத்தை மட்டும் நீக்கி இருக்கலாம். ஆனால் தன் குடும்ப சூழலின் நிலையை மனதிற்குள் வைத்து ஜெயித்துக்காட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயலில் இறங்கினார்.
இந்த வெற்றி ஒரு நாளில் அவர் கண்டதில்லை. 11 வயது சிறுமியில் ஆரம்பித்த இந்த முயற்சியும் அதீத உழைப்பும் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.
ஆகவே, சூழல்கள் எப்படி இருந்தாலும் அதை மாற்றிக் காட்டும் வலிமை நம்மிடம் உள்ளது என்பதை உணர்ந்து களத்தில் இறங்கினால் அனைவருக்கும் வெற்றி சாத்தியம்.