

முன்னேற முற்படுபவர்கள் சில திறமைகளை வளர்த்துக்கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும்; அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றுதான் 'கூர்ந்து கவனிப்பது' (Developing Keen Observation Skills). அதைப் பற்றி இங்கு காண்போம்.
சாதனை படைத்தவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு பட்டை தீட்டிக்கொள்வதற்குத் தயங்குவதும் இல்லை, அதனைத் தவிர்ப்பதும் இல்லை. அத்தகைய அதிமுக்கியத்துவம் மிக்க திறமைக்கு எப்போதும் உரிய முக்கியத்துவம் கொடுப்பதுடன், அதன் மதிப்பை உயர்த்த தங்களால் ஆன முயற்சிகளை இடைவிடாமல் செயல்பாட்டில் காட்டுவார்கள்.
அப்படிப்பட்ட திறமைகளின் உதவியினால் தங்கள் துறைகளில் சாதித்த இரண்டு சாதனையாளர்களைப் பற்றிச் சற்றுப் பார்ப்போம்:
நடிப்பிற்குத் தனி இலக்கணம் வகுத்துத் தனி முத்திரை பதித்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார். தான் சந்திக்கும் மற்றும் பார்க்கும் பலதரப்பட்ட மக்களின் நடை, உடை, பாவனை போன்ற குணங்களைக் கூர்ந்து கவனிப்பதுடன், அந்த அரிய குணங்களை உள்வாங்கி ஆழ்மனதில் பதிய வைத்துக்கொள்வதை ஒரு தொழிலாகவே செய்து வந்தார்.
நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த மரியாதை மற்றும் பக்தி காரணமாக, இந்த அர்ப்பணிப்புள்ள குணம் (Dedicated Character) அவரிடம் இருந்தது. இதன் விளைவாகவே, தான் நடித்த பல்வேறு திரைப்படங்களில் வேறுபட்ட, வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவரால் தத்ரூபமாக நடித்துப் பரிமளிக்க முடிந்தது. அவர் இந்தக் கூர்மையாகக் கவனிக்கும் திறனுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்தார்.
கிரிக்கெட் ஆட்டத்தில் சாதித்த சுனில் கவாஸ்கர் பற்றி கபில் தேவ் ஒருமுறை குறிப்பிட்டது: "சுனில் கவாஸ்கர், புகைப்படக் கலைஞர்கள் பிளாஷ் லைட் உதவியுடன் தன்னைப் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதில் குறியாக இருந்தார்." இதைக் கவனித்த கபில் தேவ், கவாஸ்கரிடம் அதன் காரணத்தைக் கேட்டபோது அவர் அளித்த பதில் கபில் தேவை அசத்தியதுடன், சிந்திக்கவும் வைத்ததாம்.
கவாஸ்கர் கூறினாராம்: "நான் விளையாடும் ஆட்டத்திற்குப் பெரும் பங்கு வகிப்பது கண்களின் பார்வைதான். போட்டோ எடுக்கும் சமயத்தில் பிளாஷ் லைட்டின் பளீர் வெளிச்சம் கண்கள் கூசச் செய்வதுடன், கண்பார்வைக்குத் தடங்கலையும் உண்டாக்கும். எனவே, அத்தகைய புகைப்படங்கள் எனக்குத் தேவையில்லை."
வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை எதிர்கொண்டு ஆட, கூர்ந்து கவனித்தல் மற்றும் ஈடுபாட்டுடன் செயல்படுதல் எவ்வளவு அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அந்தத் திறனை வளர்த்துக்கொண்ட காரணத்தாலேயே அவரால் செம்மையாக ஆடிச் சாதனை படைக்க முடிந்தது.
கூர்ந்து கவனிப்பது என்பது ஒரு கலை. ஒரே நாளில் அது பிடிபடாது; கைவசப் படுத்தவும் முடியாது. அத்தகைய கலையை வளர்த்துக்கொள்ள ஆர்வம் வேண்டும், இடைவிடாமல் பழக வேண்டும் மற்றும் அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சுயபரிசோதனையில் ஈடுபட்டு, கற்றுக்கொண்ட கூர்ந்து கவனிக்கும் திறனைச் சோதித்து, தேவையான திருத்தங்களைச் செய்துகொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். எடுக்கும் முயற்சிகள் மற்றும் உண்மையான ஈடுபாடு கலந்த செயல்பாடுகளின் வாயிலாக நாளடைவில் தேர்ச்சி பெறலாம். "நம்மால் முடியும்" என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், கூர்ந்து கவனிக்கும் திறன் வசப்பட்டு ஆதிக்கம் செலுத்த முடியும்.
அத்தகைய திறனைச் சரியாகக் கையாள்வதன் மூலம் தரமான மற்றும் கூடுதலான வெளியீட்டை வழங்க முடியும். கூர்ந்து கவனிக்கும் திறனின் உதவியால் பல அரிய நிகழ்வுகளைப் பதிய வைத்துக்கொள்ளலாம். அத்தகைய சந்தர்ப்பங்கள் மறுபடியும் கிடைப்பது கடினம். அவ்வாறு பதிய வைத்துக்கொண்ட விவரங்கள் தேவைப்படும் பொழுது, திறமையாகச் செயல்படக் கைகொடுக்கும். எனவே, கூர்ந்து கவனிக்கும் திறனில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும் என்பது நிதர்சனமான உண்மை.