
எனக்கு எல்லாம் தெரியும் என்று இருப்பவர்கள் அனைவரும் பாகுபாடின்றி ஒருவித இறுமாப்போடும் ஆர்வத்தோடும் ஒருவித இருளான அறியாமையின் மாய வட்டத்துக்குள் உழன்று கொண்டிருப்பர். இதில் படித்து பட்டம் பெற்ற அநேகர் தாங்கள் படித்த படிப்பின் தரத்தை வைத்துக்கொண்டு, அறிவின் உச்சியை அடைந்து விட்டார்கள்.
ஞானத்தின் விளிம்பை தொட்டுவிட்டார்கள் என்றும் இனி தெரிந்துகொள்ள வேண்டியது எதுவும் இல்லை என்று இறுமாப்போடு சொல்லிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் ஒருவித மமதையில் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் படிக்காதவர்களை, அறியாமையில் இருப்பவர்களைக் கண்டால் ஒருவித ஏளன மனப்போக்கில் அவர்களை தாழ்வாக பார்த்தல், பேசுதல், மட்டமாக எடை போடுதல் ஒதுக்கி வைத்தல், மற்றும் படிக்காதவர்கள் தங்களைவிட உயர்ந்து விடக்கூடாது போன்ற மனப்போக்கினை ஏற்படுத்திக்கொண்டு படித்தவர்கள் என்ற வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
படிக்காதவர்களும் தங்களுக்குள் இருக்கும் அறியாமையை, தெரியாமையை, புரியாமையை மூடி மறைப்பதற்காகவும், அதோடு மற்றவர்கள் அறிந்து தெரிந்து வைத்திருக்கின்ற விஷயங்களை தாங்கள் அறிந்து தெரிந்து வைத்திருக்கவில்லையே என்பதை மற்றவர்கள் கண்டு கொண்டுவிட்டால் தங்களுக்கு அவமானமாக போய்விடும் என்று மூடி மறைக்கின்ற மனப்பான்மையை தங்களுக்குள் வளர்த்துக் கொணடு "எனக்கு எல்லாம் தெரியும்" என்று திரிகின்ற மனநிலையில் இருந்து கொண்டு வருகிறார்கள்.
இதனால் இவர்களுக்கு படித்தவர்களை கண்டால் "அதிகம் படித்துவிட்டார் என்ற திமிர், ஆணவம் அகந்தை" என்று ஒருவித க்ரோத எண்ணத்தைத் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள்.
இந்த எண்ணத்தின் விளைவு படித்தவர்களோடு போட்டா போட்டி போடுதல், வீண் விதண்டாவாதம் செய்தல் வீண் கோபப்படும் என்றே பல நிலைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அடுத்து அரைகுறையாய் படித்த மற்றொரு கூட்டத்தினர் தனக்கு ஒரளவு தெரிந்த விஷயத்தை வைத்து தனக்கு எல்லாம் தெரியும் என பிதற்றுகிறார்கள்.
பலர் தங்களுக்கு எதுவுமே தெரியாத நிலையில் வெறுமனே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று அறியாமையில் உழைக்கிறார்கள். இதைப் பார்த்து அப்படியே ஏற்றுக்கொண்ட குழந்தைகளும், இளைஞர்களும் பெற்றோர்கள் மற்றும் முதியவர்களின்" எங்களுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் ஒன்றும் சொல்லத் தேவையில்லை" என்று சீறிப்பாய்ந்து கொண்டு இருக்கின்றன மனநிலையில் வீராப்பு நடை போடுகிறார்கள்.
இப்படிப்பட்ட எல்லாம் தெரியக்கூடிய ஆற்றல் எங்கிருந்துதான் இவர்களுக்கு வந்ததோ? எப்படித்தான் வந்ததோ, எதைக் கொண்டு பெற்றார்கள்களோ? என்னவோர் அற்புத பாக்கியம் பெற்றார்களோ தெரியவில்லை.
இப்போது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்?. நீங்களே சோதித்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த "எல்லாம் எனக்குத் தெரியும்" என்பது கொடிய மனநோய் மனத்தடை, மன இறுக்கம், மன இறுமாப்பு பலரிடமும் பரவிப் படர்ந்து புரை யோடிக் கிடக்கிறது.
இது எவ்வளவு பெரிய அறியாமை கொண்ட மடமை. இத்தகைய அறியாமை கொண்ட மடமையில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே ஏமாற்றி கொண்டு, அறியாமையின் காரிருளில் சிக்கி வாழ்ந்து கொண்டும் வாழ்க்கையின் பயணத்தை முடித்துக் கொண்டு இவ்வுலகத்தை விட்டே போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.
எல்லாம் தெரிந்தவர்கள் என்றால் எல்லா கேள்வி களுக்கும் 100க்கு 100 சதவீதம் சரியான பதில் சொல்ல வேண்டும். கற்றது கையளவு என்று அந்தக் காலத்தில் கூறுவார்கள். இன்றைக்கு இருக்கின்ற அளவிற்கு அறிவியல் வளர்ச்சி, மின்னியல் வளர்ச்சி மருத்துவ வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி, அன்றைய காலக்கட்டத்தில் இருந்ததில்லை.
அந்த நிலையில் அன்றைக்கு கற்றது கை அளவு இருந்திருக்கலாம். இன்றைக்கு கையளவு என்பது பொருந்தாது. விரலளவு என்று சொல்வதுதான் பொருந்தும். கற்றது விரலளவு கல்லாதது உலகளவு என்பதை முதலில் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் மனம திறக்க ஆரம்பிக்கும். இதன் மூலம் நீங்கள் திறந்த மனதை அடைய முடியும்.