
இந்த உலகம் சிறந்து விளங்க வேண்டுமானால் ஒவ்வொரு உள்ளத்திலும் அன்பு என்னும் மலர் பூத்துக்குலுங்க வேண்டும். அன்பு மயமான இதயங்களில்தான் ஆனந்தம் குடிகொண்டிருக்கிறது. மனிதன் மனிதனாக வேண்டுமானால், அவன் அன்புமயமாக வேண்டும்.
வாளினால் வெற்றிகொள்ள முடியாத செயல்கள் அன்பினால் வெற்றி கொள்ளப்பட்டிருக்கின்றன. பலத்தினால் முடியாத பகைகள் இனிய சொற்களால் முடிக்கப் பெற்றிருக்கின்றன.
அடக்கு முறையால் அடையப்பெற முடியாத காரியங்கள் அன்பினால் அடையப் பெற்றிருக்கின்றன. நமது சமயங்கள் அனைத்தும் அன்பையே போதிக்கின்றன.
அசோகர் இந்தியாவை ஆண்டது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள். கலிங்கநாட்டின் மீது மேற்கொண்ட அசோகர் போர்க்களத்தில் நடக்கும் கோரக்காட்சிகளைக் கண்டு ரத்தக் கண்ணீர்விட்டார். ஒரு மனிதனுடைய ஆசைக்காக இவ்வளவு பேர்களுடைய உயிரையும் மாய்ப்பது மதியீனம் என்று அசோகர் தம்மையே நொந்து உடனே போரை நிறுத்துமாறு ஆணையிட்டார்.
இனி நாடுகளை அன்பினால்தான் வெல்ல வேண்டும்; மக்களை அன்பினால் ஆளவேண்டும் என்று போர்க்களத்திலேயே உறுதி பூண்டார். எந்த உயிரையும் கொல்வது தகாது என்று அருளுரை சொன்ன புத்தர் நோயால் துன்புறும் மனிதனைக் கண்டு அவரால் சகிக்க முடியவில்லை.
இவ்வுலகில் துன்பங்களையெல்லாம் போக்குவதற்கு வழிகண்டு பிடிப்பதற்காக நாட்டைவிட்டு அகன்றார் புத்தர். உலகின் துன்பங்களையெல்லாம் நீக்குவதற்கு ஒரே வழி மனிதன் அன்புருவாகத் திகழ வேண்டுமென்பதுதான் அவர்கண்ட உண்மை.
உன்னுடைய எதிரிக்கும் உதவி செய். உனக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையை செய்' என்று கூறி அன்பை மூலதனமாகக் கொண்டே வாழ்ந்து வழிகாட்டியவர் இயேசு,
உலகம் என்ற ஒரே குடையின் கீழ் அன்பு என்னும் மனிதர்களாக உள்ளோம். அன்பு இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல. இந்த மனிதகுலம் மேன்மையடைய அன்பை வளர்க்க வேண்டும். அன்பு இல்லாத வீடு, வெறும் சுடுகாடு அன்பு இல்லாத நாடு வெறும் காடு.
அன்பிற்கு முண்டோ அடைக்கும்தாழ்' என்ற வள்ளுவரின் வாக்கும் அன்பைக்காட்ட மொழிந்த பொன்வரிகள்.
அன்பினால் முடியாத காரியம் என்று உலகில் எதுவுமில்லை. அனைவரிடத்திலும் அன்பு, ஏழைகளிடத்தில் கனிவு. நட்பில் உண்மை, கைமாறு கருதா உதவி. தன்னலங்கருதா பண்பு இதுபோன்ற நற்பண்புகளைக் கொண்டவன், மனிதநேயமிகு மனிதனாவான்.
அமெரிக்க கவிஞன் வால்ட் விட்மன், 'மனிதா, நீ யாருக்கும் தலை வணங்காதே. துணிந்து செல். ஆயினும் பாட்டாளியிடம் பரிவுகொள். அன்பைக் கொடுத்து அன்பை வாங்கிக்கொள்' என மனிதநேயத்தையும் அன்பையும் தன் பாடல்களில் புகுத்தினார்.
அன்புதான் மனிதனடையும் பெரும்பேறு. ஆகவே அன்பை நம் வாழ்வில் பெற்று உயர்வோம். யார் வாழ்க்கையில் அன்பை கைக்கொண்டு வாழ்கிறார்களோ அவர்கள் மனிதர்கள் அல்ல மகாத்மாக்கள். கள்ளமில்லாத அன்பு கொண்ட மனிதன் மனிதன் வெறும் மனிதன் மட்டுமல்ல மனிதருள் மாணிக்கம்.
அன்புள்ள இதயத்தில்தான் ஆனந்தம் குடிகொள்ளும்.
அன்பே உலகம் அன்பே வாழ்க்கை!