
சிலர் காரணமே இல்லாமல் பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். சிலர் எந்த சூழலிலும் அடிக்கடி பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இவர்கள் கூறும் பொய்களுக்கு வெளிப்புற உந்துதலைக் காட்டிலும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கும்.
இப்படிப்பட்ட பொய்யர்களுக்கு மன்னிப்பே கிடையாது. உளவியலாளரின் கருத்துப்படி ஒரு நபரின் சூழல் கட்டாய பொய்களில் பெரும் பங்கு வகிக்கிறது என்கிறார்கள். ஆனால் சிலர் எந்தவித நோக்கமும் இல்லாமல் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இவர்களை கையாளுவது மிகவும் சவாலான விஷயம்தான். இவர்கள் கூறுவதில் எது பொய் எது நிஜம் என ஆராய முற்பட்டால் நமக்கு தலைசுற்றுதான் மிஞ்சும்.
பொய் சொல்வது என்பது ஒரு குறுகியகால ஆதாயம் மற்றும் நீண்ட கால இழப்பு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எப்போதாவது மட்டுமே பொய் சொன்னால் அதிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது. எப்பொழுதுமே பொய் சொன்னால் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் அதனை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.
மதிப்பு மரியாதை போய்விடும். உண்மையாகவே சொல்லும் விஷயங்களைக் கூட நம்ப மறுத்து விடுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் பொய் சொல்வதால் நிறைய எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
இப்படிப்பட்டவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. இவரைப் பார்த்து நமக்கும் பொய் சொல்லும் பழக்கம் வரலாம் அல்லது பொய் சொல்பவருடன் கூட இருக்கும் நம்மையும் அப்படிப்பட்ட ஆளாக எண்ணி நம்மிடம் பழகாமல் மற்றவர்கள் ஒதுங்கிப் போகலாம். அவர்களுடன் சேர்த்து நம்மையும் சந்தேகப்படலாம். எனவே எந்த ஒரு உறவிலும் எல்லைகளை அமைத்துக் கொள்வது நல்லது. அத்துடன் அவர்களிடம் நீங்கள் பொய் பேசுவது உங்கள் மீது அவநம்பிக்கை உண்டாக்குகிறது. எனவே உண்மையாக இருக்கப் பாருங்கள் என நேரிடையாகவே எச்சரிக்கலாம்.
பொய் பேசுவதால் நட்பில் பிளவு ஏற்படும் என்பதை எதிராளிக்கு தெளிவுபடுத்தலாம். அவர் உண்மையில் வருத்தம் தெரிவித்தால் மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப அந்த நபருக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கலாம். அவரின் செயலால் நீங்கள் எவ்வளவு தூரம் காயபட்டிருக்கிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தலாம். அது இன்னொரு முறை நேராமல் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.
எதிரில் இருப்பவர் பேசுவது பொய் என்று தெரிந்ததும் பேச்சை திசை திருப்புவது நல்லது. இது அவர்களை நாம் நம்பவில்லை என்பதை சொல்லாமல் சொல்லும். பொய் சொல்கிறார்கள் என்பதை உணர்ந்ததும் அவரிடம் எவ்வளவு விவரங்களை கேட்க முடியுமோ அவ்வளவு விவரங்களை தொடர்ந்து கேளுங்கள். உண்மை தானாக வெளிவரும்.
"பொய்மையும் வாய்மை யிடத்தே புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்" - திருக்குறள்.
குற்றம் தீர்த்த நன்மையை விளைவிக்குமாயின் பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதப்படும். நாம் பேசுவது பிறருக்கு நன்மையை ஏற்படுத்தும் என்றால் மட்டுமே பொய் சொல்வதில் தவறில்லை என்று கூறுகிறார்.
ஆனால் நம்மில் பலர் எல்லாவற்றிற்கும் பொய் சொல்கிறார்கள். பொய் சொல்வதற்கு நிறைய ஞாபக சக்தி தேவை. எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். யாரிடம் எதைச் சொன்னோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பொய்யினால் சில தற்காலிக பலன்களை பெற்றாலும் அது மன அமைதியை கெடுக்கும். உண்மையை சொல்வது எளிதானது மற்றும் இனிமையானது. நம் மேல் நம்பிக்கையை பெற்று தரக்கூடியது. பொய் பேசுபவர்கள் நம் நேரத்தை வீணடிப்பவர்கள். எனவே அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது.