உங்கள் மனம் ஒரு குரங்கா?மனதை வெல்ல என்ன செய்யலாம்?

மனம் ஆசைப்படும்; புத்தியோ அதை ஆராயும்!
Happiness in life tamil motivation
Happiness in lifeCredits AI Image
Published on

ம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அடிப்படை மனமும் அதன் இயக்கமும் என்றால் அது மிகையல்ல. மனம் எப்போதும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும் தன்மை படைத்தது. இதனால்தான் நம் முன்னோர் மனதைக் குரங்குடன் ஒப்பிட்டு, "மனம் ஒரு குரங்கு" என்றார்கள். குரங்கு ஓரிடத்தில் அமராமல் இங்கும் அங்கும் தாவிக் கொண்டே இருக்கும்; அதுபோலவே நம் மனமும் அலைபாயும். மனதைக் கட்டுப்படுத்தி, அதை நம் போக்கில் இயக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். ஒருவன் தன் மனதைக் கட்டுப்படுத்தி, விருப்பத்திற்கு ஏற்ப அதை இயக்கினால், அவனே பெரிய யோகியாவான்.

ஒரு காரியத்தை நாம் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், நம் மனமானது அதற்கு அடிமையாகிவிடும். நாளடைவில் நாம் செய்யும் அந்தச் செயல் தவறானதாக இருந்தாலும், நம்மால் அதைச் செய்யாமல் இருக்கவே முடியாது.

நமது புத்தி ஒரு காரியத்தைத் தவறு என்று புரிந்து கொண்டால், அதைச் செய்யாதே என்று நம்மை எச்சரிக்கும். ஆனால் மனமோ, அதைச் செய் என்று நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கும். இறுதியில் மனம் சொல்வதையே நாம் செய்து முடிப்போம்.

மனம் என்பது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உருவாக்கும் ஒரு சக்தி. ஆனால், புத்தி என்பது ஒரு செயலைப் பற்றிச் சிந்தித்து, அதை ஆராய்ந்து, அச்செயல் நல்லதா கெட்டதா என்று பகுத்தறிந்து முடிவெடுக்கும் தன்மை கொண்டது. சுருங்கச் சொன்னால், மனம் ஆசைப்படும்; புத்தியோ அதை ஆராயும்.

ஒரு நல்ல மனிதனையும் கெட்டவனாக்கும் தன்மை படைத்தது மனம்; ஒரு கெட்ட மனிதனையும் நல்லவனாக்குவதும் மனமே. ஆக, எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைவது மனமே. அதை நாம் முடிந்தவரை கட்டுப்படுத்தி, நம் பிடியில் வைத்து நம் வாழ்க்கையை வாழப் பழக வேண்டும். "மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்" என்றார் மகாகவி பாரதியார்.

லஞ்சம் வாங்குவது தவறு என்று புத்தி உணர்த்தும்; ஆனால் மனமோ, லஞ்சத்தை வாங்கும்படி தூண்டும். "நேர்மை நல்லது" என்று புத்தி சொல்லும்; "நேர்மையாவது மண்ணாவது!" என்று மனம் நம்மைத் தவறாக வழிநடத்தும்.

மனதை வெல்ல என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் உங்கள் வாழ்க்கையை எளிமையான ஒரு வாழ்க்கை நெறியாக மாற்றிக்கொள்ள முயல வேண்டும். எதற்கும் அளவோடு ஆசைப்படக் கற்றுக்கொள்ள வேண்டும். "இது போதும்" என்ற மனநிலையை உருவாக்கிக்கொள்ள முயல வேண்டும். எளிமையாக வாழ்பவர்களைப் பாருங்கள்; அவர்களின் முகத்தில் எப்போதும் ஒருவிதமான மகிழ்ச்சி(Happiness in life) தென்படும். எளிமையான வாழ்க்கை எப்போதும் ஒருவித நிம்மதியைத் தரும்; மனநிறைவைத் தரும்.

பெரிய பணக்காரர்கள் கூட ஒரு கட்டத்தில், "நாம் சம்பாதித்தது போதும், இனி வரும் வாழ்க்கையை நிம்மதியாக நல்ல முறையில் கழிக்க வேண்டும்" என்று விரும்பி, தான் ஈட்டிய பொருளில் ஒரு கணிசமான தொகையை நல்ல விஷயங்களுக்குச் செலவழித்து மனநிறைவை அடைவதை நம்மால் காண முடிகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த 5 விஷயங்கள் உங்களுக்கும் நடந்திருக்கா? அப்போ வெற்றி உங்களுக்கு மிக அருகில்னு தெரிஞ்சுக்கோங்க!
Happiness in life tamil motivation

இருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுவதாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை நாடி வருகின்றன. "இருப்பதை வைத்துச் சிறப்பாக வாழ்வோம்" என்ற மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள். "இக்கரைக்கு அக்கரை பச்சை" என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மனதை வெல்பவன் மகத்தான வாழ்வைப் பெறுவான்; புத்தியின் கரம் பிடித்து நடப்பவன் புகழுடன் வாழ்வான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com