
படைப்பாற்றலை ஊக்குவிக்கும் எண்ண சக்தி! இதை நிரூபிக்கும் ஒரு அற்புதமான வாழ்க்கை!
நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் படைப்பாற்றலால் எழும் எண்ணமே.
ஆனால் அது நமக்குத் தெரியுமா என்பதும், அதை உணர்ந்து நாம் அதைப் பயன்படுத்துகிறோமா என்பதும் தான் சந்தேகம்.
படைப்பாற்றலை எண்ண சக்தி ஊக்குவிக்கிறது. குறிக்கோளுடன் கூடிய நெஞ்சுரம் உயர்ந்த வாழ்க்கையை அமைக்கிறது – எத்தனை இன்னல்கள் நேர்ந்த போதிலும்!
எடுத்துக்காட்டிற்கு:
ஹைடி வான் பெல்ட்ஸ் (HEIDI VON BELTZ) என்ற ஸ்டண்ட் பெண்மணியின் வாழ்க்கை.
ஹைடி லாஸ் எஞ்சலிஸில் 1955ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி பிறந்தார். திரைப்படங்களில் அற்புதமாக ஸ்டண்டுகள் செய்யும் ஸ்டண்ட் பெண்மணியாக அவர் திகழ்ந்தார்.
1981ம் ஆண்டு வெளி வந்த ‘தி கானான்பால் ரன்’ (The Cannonball Run) என்ற அமெரிக்க காமடி, ஸ்டண்ட் படத்தில் ஸ்டண்ட் செய்ய அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஷூட்டிங்கில் ஒரு செட். அதில் கார் ஒன்றில் அவர் ஸ்டண்ட் செய்யும் காட்சி!
ரோஜர் மூர், டீன் மார்டின் போன்ற பல பிரபலங்கள் நடித்த படம் இது, 1980, ஜூன் 25ம் தேதி நடந்த ஷூட்டிங்கில் கார் நசுங்கி விபத்துக்குள்ளாக, ஹைடி கழுத்துக்குக் கீழே உள்ள அங்கங்கள் அனைத்தும் இயங்கும் சக்தியை இழந்தார். டாக்டர்கள் அவர் நிரந்தரமாக உடல் இயக்கமே இல்லாமல் இருப்பார் என்றும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்வார் என்றும் கூறி விட்டனர்.
டாக்டர்கள் சொன்னதை மனதளவில் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் அவர். ஷூட்டிங்கில் விபத்துக்குள்ளாகிய காரில் ஏராளமான இயந்திரக் கோளாறுகள் இருந்தது தெரிய வந்தது. ஸ்டீரிங் சரியில்லை. பிரேக்கே இல்லை, இன்ன பிற கோளாறுகள் காரில் இருந்தன. ஹைடி ஒரு கேஸைப் போட்டார். 70 லட்சம் டாலரை நஷ்ட ஈட்டுத் தொகையாக அளிக்க வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட அதை நீதிபதி 32 லட்சம் டாலராகக் குறைத்தார்.
தனது உடல்நிலையை வியக்கத்தகும் படி அவர் சீராக்கினார். எப்படி?
படைப்பாற்றல் திறனோடு கூடிய மனச் சித்திரத்தால் தான்!
முதலாவதாக, சும்மா உட்காரவோ அல்லது வீல் சேரில் அமரவோ அவர் மறுத்து விட்டார்.
அவர் உலகப் புகழ் பெற்ற மை சோல் பர்பஸ் (My Soul Purpose: Living, Learning, and Healing) என்ற நூலை எழுதினார். பல பேட்டிகளையும் அளித்தார்.
அதில் அவர் கூறியது: “நான் தூங்கப் போகும் போது மனச்சித்திரத்தை (imaging) மனதில் உருவாக்குவேன். தூக்கத்தின் நடுவில் எழும்போதெல்லாம் இந்த மனச்சித்திரத்தைக் காண்பேன்."
அனைத்துமே ஒலி அலைகள் போன்ற அதிர்வுகள் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆகவே எண்ண சக்தியும் உடல் மீது ஒரு பெரும் தாக்கத்தை நிச்சயம் உருவாக்குகிறது. ஆகவே ஆக்கபூர்வமான எண்ணத்துடன் மனச்சித்திரமும் சேரவே படைப்பாற்றல் உத்தியான 'உன்னை நீயே குணமாக்கிக் கொள்' (Heal Thyself) என்ற எண்ண சக்தி வேலை செய்ய ஆரம்பித்தது.
படிப்படியாக அவர் குணமாக ஆரம்பித்தார். அவரது ஒவ்வொரு அங்கமும் பழையபடி இயங்க ஆரம்பித்தது. அவரால் எழுந்து நிற்க முடிந்தது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மிகவும் ஊக்கமூட்டி ஆதரவாக இருந்தனர்.
எதெல்லாம் தன்னால் முடியுமோ அதையெல்லாம் ஊக்கமுடன் அவர் செய்ய ஆரம்பித்தார். தசை மசாஜ், பிரார்த்தனை, ஒரு ஒலிம்பிக் உடல் பயிற்சி உள்ளிட்ட பலவும் இதில் அடங்கின.
"நான் நகர்ந்து செல்ல ஆரம்பித்தேன். ஆகவேதான் நான் நானாக இருக்கிறேன்" என்றார் அவர். தன் கழுத்து முறிந்ததை அவர் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.
1980களில் கழுத்துக்குக் கீழே முழு உடலும் பாதிக்கப்பட்டதற்கு ஒரு மருந்தும் குறிப்பிடத்தகுந்தபடி இல்லை. ஆனால் நெஞ்சுரத்துடன் கூடிய அவரது ஆக்கபூர்வமான எண்ணத்தால் அவர் அனைவரும் வியக்கும் படி நல்ல உடல்நிலையைப் பெற்றார். ஐந்து வருடமே உயிர் வாழ்வார் என்ற டாக்டர்களின் கூற்றைப் பொய்யாக்கி விபத்து நடந்ததிலிருந்து 35 ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்தார். 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28, தேதி அவர் மரணமடைந்தார்.
அவர் வாழ்க்கை உலக மக்களுக்குத் தரும் செய்தி:
“நெஞ்சுரத்துடன் கூடிய மனச்சித்திரம் என்னும் படைப்பாற்றல் உத்தி உங்களுக்கு வியக்கத்தக்க பலனைத் தரும். எதிர் வரும் இன்னல்களைக் கடந்து நீங்கள் எண்ணியது கை கூடும்” என்பதைத்தான்!