
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் Deep work எனப்படும் ஆழ்ந்த கவனம் செலுத்தி செய்யப்படும் வேலை என்பது ஒரு சூப்பர் பவர் ஆகக்கருதப்படுகிறது. கல்வி, அறிவியல், கலை, மருத்துவம், தொழில்நுட்பம், விவசாயம் போன்ற துறைகளில் வேலை செய்ய ஆழ்ந்த கவனம் தேவை. Deep work என்கிற வார்த்தையை பிரபலப்படுத்தியவர் கால் நியூபோர்ட் என்ற கணினி அறிவியல் துறை பேராசிரியர். அவர் அதைப்பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ஆழ்ந்து வேலை செய்வது மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலோட்டமாக வேலை செய்வதற்கும் ஆழ்ந்து வேலை செய்வதற்குமான வித்தியாசங்கள்:
வீட்டில் அப்பாவும், அம்மாவும் டி.வி பார்த்துக் கொண்டிருக்க, பிள்ளைகள் அதே ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கவனம் கையில் இருக்கும் புத்தகத்தில் செல்லாமல் டி.வி திரையில்தான் இருக்கும். ஆனால் அப்பா திட்டுவாரே என பயந்து, படிப்பதுபோல நடிப்பார்கள். கவனச்சிதறல் காரணமாக பாடத்தில் அவர்கள் மனம் செல்லாமல் மேலோட்டமாக படிப்பார்கள். இமெயிலுக்கு பதிலளிப்பது, மீட்டிங்கில் கலந்துகொள்வது, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்ப்பது போன்றவற்றுக்கு ஆழமான கவனமோ ஈடுபாடோ தேவையில்லை.
மாணவர்களுக்கு மட்டுமல்ல மூளையை உபயோகப்படுத்தி வேலை செய்பவர்களுக்கு டீப் ஒர்க் எனப்படும் செய்யும் வேலையில் ஆழ்ந்த கவனம் தேவை. தேர்வு எழுதுதல், புதிய கண்டுபிடிப்புகள், கதைகள், கட்டுரைகள், புதிய திட்டங்கள் தீட்டுவதற்கு ஆழ்ந்த வேலை மிக அவசியம். ஒருவர் தன்னை மறந்து தனது கவனத்தை முழுக்க முழுக்க வேலையில் குவித்து செய்வதுதான் ஆழ்ந்த வேலை எனப்படுகிறது.
Deep work ன் முக்கியத்துவமும், பயன்களும்:
தொழில்நுட்பம் அதிகரித்து வரும் தற்கால சூழலில், மனிதர்களுக்கு செல்போனில் வரும் நோட்டிஃபிகேஷன்கள், சோசியல் மீடியாக்களில் தொடர்ச்சியாக வரும் ரீல்ஸ், வீடியோக்கள் ஒருவரை சரியாக வேலை செய்யவிடாமல் கவனச்சிதறலை உண்டாக்கும் ஆயுதங்கள் ஆகும். இத்தகைய தடங்கல்களை தவிர்த்து செய்யும் வேலையில் கவனத்தைக் குவித்து முழு மனதோடு ஈடுபடும்போது அந்த பணி சிறப்பாக இருக்கும்
குறைந்த நேரத்தில் சிறப்பான பணி:
ஒரு பணியில் முழுமையான கவனத்திற்கு குவித்து செய்யும்போது மிகக் குறைந்த நேரத்திலேயே அதை செய்து முடிக்கலாம். அந்த வேலை மிகச் சிறப்பாகவும் அமையும். முழுமனதோடு ஒரு வேலையில் ஆழ்ந்திருக்கும் போது நன்றாக சிந்திக்கவும், தவறுகள் நேராமல் அதை செய்து முடிக்கவும் முடியும்.
புதிய திறன்களைக் கற்றல்:
சிக்கலான புதிய திறன்களைக்கூட ஆழ்ந்து வேலை செய்யும்போது மிக எளிதாக கற்க முடியும். ஒரு விஷயத்தில் முழு கவனத்தையும் வைக்கும் போது நமது மூளை அதற்கேற்றவாறு புதிய நரம்பியல் பாதைகளை உருவாக்கி ஏற்கனவே உள்ள இணைப்புகளை வலுப்படுத்துகிறது. இதனால் புதிய தகவல்களை விரைவாக உள்வாங்கிக் கொள்ள முடியும். வேகமாக மாறிவரும் உலகில் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள இந்த திறன் மிகவும் முக்கியமாகும்.
முன்னேற்றம் அதிகரித்தல்:
ஒரு பிரச்னையில் குறுக்கீடுகள் இல்லாமல் கவனம் செலுத்துவதன் மூலம் மூளை புதிய யோசனைகளை வழங்கும். புதிய தீர்வுகளைத்தரும். சவாலான பணிகளை தீவிர கவனத்துடன் முடிக்க உதவும். ஒரு சாதனை உணர்வையும் திருப்தியையும் தருகிறது. இதனால் ஒருவரது முன்னேற்றம் அதிகரிக்கிறது.
குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குதல்:
டீப் ஒர்க் எனப்படும் அதிக கவனம் செலுத்தி செய்யப்படும் வேலைக்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலம் ஒருவர் தன்னுடைய வேலையை விரைவில் முடித்து தனது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்குமான நேரத்தை செலவிடலாம். இதனால் எப்போதும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.