
கான்பாரு! கான்பாரு! (GANBARU)
இந்த ஜப்பானிய வார்த்தைக்கு அர்த்தம் – நம்மால் முடிந்ததை செய்வோம்! எவ்வளவு தடை நேர்ந்தாலும், எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சளைக்க மாட்டோம், ஓயமாட்டோம், கான்பாரு – முடிந்ததைச் செய்வோம்!
ஒரு காரியத்தில் நமக்கு இருக்கும் மன உறுதியையும், விடாமுயற்சியையும் குறிக்கும் இந்தச் சொல் பல்லாயிரக்கணக்கானோருக்கு வெற்றியைக் காண்பித்த சொல்லாகும்.
உடனடி விளைவுகளையோ நலன்களையோ கருதாமல் எடுத்த காரியத்தில் இறுதிக் குறிக்கோளை அடையச்செய்வது கான்பாரு!
பிரம்மாண்டமான ஒரு திட்டத்தில் நாம் ஈடுபடும்போது இதை எப்படி முடிக்கப் போகிறோம் என்ற மலைப்பை விட்டு விட்டு ஒரு முனைப்பட்ட கவனத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக நமது குறிக்கோளை விடாமுயற்சியுடன் அடையச்செய்வது கான்பாரு.
ஒரு சின்ன உதாரணம் இதோ…
நடைப்பயணம் மேற்கொண்ட ஒரு பெண் பாலைவனத்தில் வழிதவறி எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தாள். ஒரே தாகம். ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்காதா என்று அழுதவாறே மனம் கலங்கிப் போய்க் கொண்டிருந்த அவளுக்கு எதிரே திடீரென்று ஒரு பெரிய ஏரி தென்பட்டது.
ஓட்டமாக ஓடி அதன் அருகே சென்று அவள் நின்றாள். நிர்மலமான நீர். அவள் அதைப் பார்த்து மலைத்தாள். அவளது தாகம் அவளை வாட்டியது. அவளால் நீரை எடுக்க முடியவில்லை.
அப்போது அருகே ஒட்டகம் ஒன்றில் ஒரு மனிதன் வந்து நின்றான்.
“சகோதரி! ஏன் இப்படி மலைத்துப்போய் நிற்கிறாய்? தாகத்தினால் தவிப்பதுபோல் தெரிகிறதே. நீரை அள்ளிக்குடி” என்றான் அவன்.
கலங்கி நின்ற அவள், ”இவ்வளவு தண்ணீரையும் எப்படிக் குடிக்க முடியும்?’ என்றாள்.
“இதோ இப்படி” என்ற அந்த மனிதன் இரு கைகளாலும் நீரை வாரி எடுத்தான். அவள் கைகளை நீட்டச் சொன்னான். “குடி” என்றான்.
அவளும் குடித்தாள். “தாகம் தணிந்ததா! ஒரு மடக்கு போதும் உன் தாகத்தைத் தணிக்க. ஒவ்வொரு வாயாக கொஞ்சம் கொஞ்சமாக நீரைக் குடி” என்றான் அவன். அவள் மலைப்பதை விட்டாள்; காரியத்தில் இறங்கினாள். ஒவ்வொரு மடக்காக அவள் தாகம் முற்றிலுமாகத் தணியும் வரை நீரைக் குடித்தாள். அந்த சகோதரனுக்கு நன்றி கூறினாள்.
இது தான் வாழ்க்கை!
ஒவ்வொரு அடியாக நம்மால் முடிந்ததைச் சிறப்பாக கவனத்துடன் செய்துகொண்டே இருக்க வேண்டும். நீண்ட நெடிய பாதை, ஒரு சின்ன அடியில்தான் துவங்குகிறது. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் நீண்ட பாதையும் ஒரு நாள் முடிந்தேவிடும்.
இன்றைய நவீன உளவியல், ஒரு செயலின் ஆதாயத்தைவிட அதில் ஈடுபடும் முயற்சியையே ஆதரிக்கிறது.
கான்பாருவுக்கு உதாரணமாக ஒரு நிஜமான சம்பவத்தைக் கூறலாம். இது நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி.
இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த சமயம். ஷோய்சி யோகோய் என்பவன் ஜப்பானியப் படையில் ஒரு சார்ஜெண்ட். 1945ல் உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் காம் என்ற இடத்திலுள்ள காடுகளில் மறைந்திருந்த அவனுக்கு போர் முடிந்ததே தெரியாது. காட்டில் தகவல் தொடர்பே இல்லை. அவன் போரைத் “தொடர்ந்து” நடத்திக் கொண்டிருந்தான். 28 வருடங்கள் கழித்து, 1972ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி அவனைக் காட்டில் கண்டுபிடித்தார்கள். காட்டின் அருகில் ஓடிக்கொண்டிருந்த நதியில் மீன் பிடிக்க வந்த இரண்டு உள்ளூர்க்காரர்கள் அவனைக் கண்டார்கள்.
சரணாகதி என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியாது என்று கூறிய அவன் டிவி காட்சிகளில் பிரபலமானான். 2006ம் ஆண்டு அவன் பெயரில் நகோயா நகரில் ஒரு நினைவுக் கூடம் திறக்கப்பட்டது. போரில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட மூன்று ஜப்பானிய வீரர்களில் ஷோய்சியும் ஒருவர். கான்பாரு வார்த்தைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுபவர் இவரே.
நம்மால் முடிந்ததைத் தீவிரமாக விளைவை எதிர்பார்க்காமல் செய்வதே கான்பாரு!
“விளைவைப் பற்றி எண்ணாமல் கர்மத்தை செய்” (கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன) என்ற கண்ணபிரானின் கீதை வார்த்தைகளையும் இங்கு நாம் நினைத்துப் பார்க்கலாம்!