
வெற்றியின் ரகசியம் பற்றி அறிந்துகொள்ள சுயமுன்னேற்ற புத்தகங்களைப் புரட்ட வேண்டியதில்லை. ஆலோசகரும் தேவையில்லை. இலக்குகளை அடைவதற்கான ரகசியங்கள் உங்கள் கண்முன்னால் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதற்காக நீங்கள் வெகுதூரம் பயணிக்கவோ அதிக பணம் செலவழிக்கவோ தேவையில்லை. நீங்கள் இருக்கும் உங்கள் அறையே வெற்றிக்கான ரகசியத்தை சொல்லும் ஆசான். எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
1. வீட்டுக்கூரை (உயரமான இலக்கு):
வீட்டுக்கூரை, வாழ்வில் உயரமான இலக்கை அடையவேண்டும் என்று மனிதர்களுக்குக் கற்றுத்தருகிறது. பெரிய பெரிய கனவுகளை காண்பதற்கும், சவாலான இலக்குகளை நிர்ணயிக்கவும், அதை அடைய எடுக்கும் முயற்சிகளையும் இது நினைவூட்டுகிறது. ஒரு வீட்டிற்கு கூரை எவ்வளவு முக்கியமோ, மொத்த வீட்டையும் அது பாதுகாப்பாக வைத்திருக்கிறதோ, அதுபோல ஒருவரது உயர்ந்த லட்சியங்கள் அவரை மிக உயரத்தில் வைக்கும் என்று சொல்லாமல் சொல்கிறது வீட்டுக்கூரை.
2. மின்விசிறி (குளிர்ந்த மனம்):
வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்ததும் பேனை போட்டால் அது இதமான காற்றை நமக்கு வழங்கும். உடல் சிறிது நேரத்தில் குளிர்ச்சியாகி மனமும் அமைதியடையும். இலக்குகளை துரத்திச் செல்லும்போது பதற்றமும் கவலையும் ஏற்படும். அப்போது அமைதியாக இருந்து நிதானத்தை பேணி சவால்களை பொறுமையாக அணுக வேண்டியதன் அவசியத்தை மின்விசிறி நினைவூட்டுகிறது. எப்போதும் குளிர்ந்த அமைதியான மனம் தெளிவாக சிந்தித்து செயல்பட ஏதுவாக இருக்கும்.
3. கடிகாரம் (நேரத்தின் முக்கியத்துவம்):
கடிகாரத்தின் தொடர்ச்சியான டிக் டிக் சத்தம் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றது என்பதை உணர்த்துகிறது. அன்றாட வாழ்க்கையின் இரைச்சலில் தொலைந்து போகாமல் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மதிப்பு மிக்கது என்பது எதை நினைவூட்டுகிறது. நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் கடிகாரம் நம்மை தூண்டுகிறது.
4. கண்ணாடி (சுயம்):
நமது தோற்றத்தை பிரதிபலிக்கும் கருவி மட்டுமல்ல சுயப் பிரதிபலிப்புக்கான ஒரு ஆழமான கருவியாகும். செயல்படுவதற்கு முன்பு சிந்திக்க வேண்டும் என்று அது சொல்லித்தருகிறது. உடையை சரி செய்வது மட்டுமல்லாமல் ஒருவரது சுயத்தை சரி செய்ய கண்ணாடி அறிவுறுத்துகிறது நோக்கங்கள், செயல்கள், செல்லும் பாதை போன்றவற்றை அலசி, ஒருவர் தன்னைத்தானே சுய பிரதிபலிப்பு செய்துகொள்ள கண்ணாடி வலியுறுத்துகிறது.
5. ஜன்னல் (வெளியுலகம்):
கண்ணாடி ஒருவரை உள்நோக்கிப் பார்க்கச் சொல்லும் போது ஜன்னல் அவரை வெளி உலகத்தைப் பார்த்து அழைக்கிறது. அறைக்குள்ளேயே அடைந்துகிடந்தால் எந்த அனுபவமும்கிட்டாது. வெளி உலகத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது எத்தனையோ இருக்கிறது. புதிய மனிதர்களின் அறிமுகம் புதிய கண்ணோட்டங்கள், போன்றவற்றைக் காண வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அதனால் ஒருவரது சுயவளர்ச்சி அதிகரிக்கும்.
6. நாட்காட்டி (புதுப்பித்தல்):
வெற்றி என்பது தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான பயணம் என்பதை நாட்காட்டி நினைவூட்டுகிறது. தினமும் ஒருவர் தன்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப, ஒருவர் தனக்கு திறமை இருந்தாலும் எப்போதும் அப்டேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை கேலண்டர் நினைவூட்டுகிறது.
7. கதவு (கடுமையான உழைப்பு):
கதவு என்பது வாய்ப்பு மற்றும் சாதனையின் சின்னமாகும். பொதுவாக கதவு தானாகவே திறக்காது. தனது பலத்தைப் பயன்படுத்தித்தான் கதவை ஒருவர் திறக்க முடியும். அதுபோல வெற்றி என்பது ஒருவர் வாழ்க்கையில் திடீரென வந்து சேராது. அதற்கு விடாமுயற்சி, தடைகளை தாண்டிச் செல்லும் மனோதைரியம், கடினமான உழைப்பு போன்றவை தேவை. ஒவ்வொரு பெரிய சாதனையும் சக்தி வாய்ந்த உந்துதலுடன்தான் தொடங்குகிறது என்பதை கதவு நினைவூட்டுகிறது.
ஒருவரது அறையில் இருக்கும் இந்த 7 பொருட்களும் வெறும் எளிய சாதனங்களல்ல. வெற்றிக்கான பாதை காலத்தால் அழியாத கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதை தினமும் நினைவூட்டுகின்றன. எனவே தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஒருவர் முதலில் தன் அறையில் இருந்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.