
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.
ஒருவருக்கு உள்ள நல்ல ஒழுக்கமான குணங்களே உயர்குடியில் பிறந்த செல்வம் போன்றது. நல்ல குணம். ஒழுக்கம் இவற்றை மறந்தால் இழிந்த நிலையை அடைந்துவிடுவோம்.
ஒருவர் நல்ல குணத்தாலும், ஒழுக்கத்தாலும் மட்டுமே உயர்ந்தவர் ஆக முடியும். ஒழுக்கக் கேடான செயல்களை செய்பவர், யாராக இருந்தாலும் கேவலமான பிறப்பே ஆவார்.
ஒழுக்கத்துடன் நடப்பவர் மட்டுமே உலகில் சிறந்த மனிதராக இருக்க முடியும். ஒழுக்கத்தை உயிராக மதிப்பவர்களே உயர்ந்த குடியினர் ஆவார்.
ஒழுக்கமற்ற செயல்களினால் எதையும் உண்மையாக சாதித்து விட முடியாது. அத்துடன் ஒழுக்கமற்று, குறுக்கு வழியில் செல்பவர்கள் நிம்மதியாக வாழவும் முடியாது. இவர்களின் தற்கால வெற்றிகள் யாவும் நிம்மதி தராது. சாக்கடையில் புரண்டு மகிழ்ச்சிகாணும் பன்றியின் நிலைதான் அவர்களது நிலை.
ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே நிரந்தரமான சாதனையாளராக இருக்க முடியும். ஒழுக்கமற்ற செயலினால் கீழே தள்ளப்படுவார்.
ஒருவர் செய்த வினையை அனுபவித்தே ஆகவேண்டும். அவர் நன்மையைச் செய்தால் நன்மையைப் பெறுவார் தீமையைச் செய்தால் தீமைதான் பெறுவார். இதுதான் பிரபஞ்ச சக்திகளின் தீர்ப்பும் ஆகும்.
நல்லவன் வாழ்வான் என்கிறார்களே அதுதான் உண்மையும் ஆகும். தீய குணங்கள் உள்ளவர்கள். தீயசெயல்களைச் செய்பவர்கள் இப்பொழுது சிறப்பாக வாழ்வது போல்தான் தெரியும்.
ஆனால், அவர்கள் நீண்ட காலம் சிறப்புடன் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை. எத்தனையோ சர்வாதிகாரிகள் மக்களைத் துன்புறச் செய்து. ஒழுக்கக் கேடான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இவர்களின் கடைசிக் காலமும் மக்களால் துரத்தப்பட்டு உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டார்கள். சிலர் தற்கொலை செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
கெட்டவன் என்று சுலபமாகப் பெயர் எடுத்துவிடலாம். நல்லவர் என்று பெயர் எடுப்பது சிரமம் என்றாலும். அதுதான் நிரந்தரமான மகிழ் உணர்வைத்தரும்.தீய செயல்கள் ஒருவரது வாழ்க்கையைப் பாதித்துவிடும் .குறுக்குப் புத்தியில் செயல்படுபவர் தம் பிழைக்காக ஒரு நாள் வருத்தப்படுவார்.
ஒழுக்கத்தின் செயல்பாட்டில் மட்டுமே உயர்ந்த சிந்தனை பிறக்கும். ஒழுக்கம் உள்ளவர்களை மட்டுமே உலகம் விரும்பும்.
ஒழுக்கக் கேடானவரை உலகம் தூக்கி எறிந்துவிடும் ஒழுக்கம் உள்ளவர் மட்டுமே, பிரபஞ்ச சக்தியின் செல்லப் பிள்ளைகள் ஆவர். அவர்களுக்கு வாழ்க்கையில் எந்தக் குறையும் ஏற்பட்டு விடாது. இன்றைய சாதனையாளர் அனைவரும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டவர்களே.
உலகக் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீரர் சிலர், ஊக்க மருந்து சாப்பிட்டு விளையாடுவார்கள். இதுவும் ஒரு வகையில் ஒழுக்கமற்ற செயலாகும் தன் திறமையை முழுமையாய் நம்பாமல், ஊக்க மருந்து சாப்பிட்டுவிடுவர்.
இப்படி ஊக்க மருந்து உண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று விடுவர். முடிவில் இவர் ஊக்க மருந்து உண்டுதான், வெற்றி பெற்றார் என்று நிரூபணமாகி விடும். இது அவருக்கு எவ்வளவு கேவலத்தை உண்டாக்கும் இப்படி குறுக்குப் புத்தியில்சாதிக்க அடம்பிடித்தால் அடுத்து விளையாடமலே இடம் பிடிக்க முடியாது.
நேர்மையுடன் சாதிப்பதுதான் பெருமை தரும். ஒழுக்கக் கேடான விஷயங்களை எப்பொழுதும் மறைத்து விடமுடியாது. எப்படியும் வெளியே வந்துவிடும்.
எனவே, ஒழுக்கம் என்பது நம்மை உயர்த்தி வாழ்வைச் சிறக்க வைக்கும் அருமையான வழி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.